எதிர்பாராமால் நாம் பார்க்க நேரும் சில மீடியம் பட்ஜெட் படங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட வாட்சபிள் படம் தான் கடந்த 8ம் தேதியன்று ரிலீஸாகியுள்ள ‘வாட்ச்’.
மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை மிக நுட்பமான டெக்னிக் உத்திகளுடன் சொல்லியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவுக்கும் ஒரு நல்வரவு என்றுதான் சொல்லவேண்டும்.
சரி படத்தின் கதைதான் என்ன?
கார்டூனிஸ்ட்டான ஹீரோ கிரிஷுக்கு பத்திரிகையாளர் ஒருவர் மூலம் மருத்துவத்துறையில் நடக்கும் மிகப்பெரிய மோசடி பற்றிய தகவல்களும், அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான ஆதரங்களும் கிடைக்கிறது. அந்த ஆதாரங்களை வைத்து அந்த மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், வில்லன்களிடம் சிக்கிக்கொள்ளும் அவர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. பிறகு மருத்துவ சிகிச்சை பெற்று ஒரு வழியாக உயிர் பிழைக்கிறார்.
இருந்தாலும், தலையில் அடிபட்டதால், ஒருவித விநோதமான, சற்று குழப்பமான நோய்க்கு ஆளாகிறார். அதாவது, மூன்று வருடங்களாக கோமாவில் இருந்தவருக்கு விபத்துக்கு முன்பு பார்த்த முகங்கள் அனைத்தும் புதிய முகங்களாக தெரிகிறார்கள்.அவர்கள் யாரையும் ஹீரோவால் இனம் காண முடியவில்லை. இப்படி ஒரு பிரச்சனையை வைத்துக்கொண்டு மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபடும் ஹீரோ கிரிஷ், அவர்களை பிடித்தாரா? இல்லையா? என்பதை வித்தியாசமான முறையில் சொல்வது தான் ‘வாட்ச்’ படத்தின் கதை.
புதுமுக நாயகன் கிரிஷ் தன் வேடத்துக்கேற்ப துடிப்புடன் நடித்திருக்கிறார். நிச்சயம் இவர்க்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. நாயகிபோல் படத்திலிருக்கும் சப்ரினா ஆலமுக்கு மாறுபட்ட வேடம். நாயகனுக்கு உதவியாக இருப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்.
வில்லன்கள் மேத்யூ வர்கீஸ், உதயகுமார் உள்ளிட்ட நடிகர்கள் தத்தம் வேலைகளை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படத்துக்கு முகமது அமீன், விக்னேஷ் வாசு,இனியகதிரவன், கலைச்செல்வன் ஆகிய நால்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் மும்பை மாநகரை வானிலிருந்து சுற்றிக்காட்டும் ஒளிப்பதிவாளர்கள் அதன்பின் சென்னையை மற்றும் கடற்புறங்களை வானிலிருந்தும் தரையிலிருந்தும் சுற்றிக் காட்டுகிறார்கள்..பாராட்டுக்களை நால்வருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியதுதான்.
அறிமுக இசையமைப்பாளர் சுகன்யன் சுந்தரேஸ்வரன் இசையில் பாடல்கள் ஓகே. ரகத்தைச் சேர்ந்தவை. ஆனால் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
வாட்ச் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் அசோகன்.. கவனிக்கத்தக்க வரவு..
படத்தில் ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் திரைத்துறைக்கு முற்றிலும் புதியவர்களான ‘வாட்ச்’ குழுவினர் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே.