2021ல் வெளியான ‘மேதகு’ முதல் பாகம் உலகத்தமிழர்களின் பரவலான கவனத்தைப் பெற்றதன் தொடர்ச்சியாக கிரவுட் ஃபண்டிங் மூலமாக தயாராகியிருக்கும் படம் ‘மேதகு2’. மேதகு முதல்பாகத்தில் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்னை களை சந்தித்தார்கள், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர் கொண்டார்கள் என்பது பற்றி சொல்லப்பட்டி ருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

இப்படத்தில், இலங்கையில் சிங்கள அரசால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, தமிழர்கள் படுகொலைக்குள்ளாக்கப்பட்டபோது தமிழ் மக்களின் உரிமையை மீட்கவும், தமிர்களையும் தமிழ் பெண்களை காக்கவும் , தனி தமிழீழம் அமைக்கப்பதற்காகவும் பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை தொடங்கி அதில் தமிழ் இளைஞர்களை போராளிகளாக இணைத்து போர் பயிற்சி அளித்து சிங்கள அரசுக்கு எதிராக போராடியது. அதற்காக எல் டி டி ஈ இயக்கம் உருவானது எப்படி. அதன் நோக்கம் என்னவாக இருந்தது. அதற்கு தமிழக மக்களும், சில தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள் போன்ற வரலாற்று சம்பவங்களை மேதகு 2 விளக்குகிறது.

பிரபாகரன் வேடத்தில் கவுரி சங்கர் நடித்துள்ளார். ஏற்கக்கூடிய மிக நெருக்கமான தோற்றம். அமைதியான அதேசமயம் அழுத்தமான நடிப்பால் மிளிர்கிறார்..புலிகளின் தியாக, வீர வரலாற்றை விவரிப்பவராக கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள், இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி மத்திய அமைச்சர் ஒருவர் பிரபாகரனை மிரட்டும் காட்சியும் அந்த மிரட்டலுக்கு பணியாமல் பிரபாகரன் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் காட்சியும் துணிச்சலாகப் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆர் எல் டி டி ஈ அமைப்பை அழைத்து பேசி அவர்களுக்கு பண உதவி அளிக்கும் காட்சியும் , எம்ஜியாருக்கு எதிராக கருணாநிதி காய் நகர்த்த பிரபாகரன் என்ன காரணத்தால் கருணாநிதியை சந்திக்கத் தவிர்த்தார் என்பதையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்கள்.

1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம், 1983- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடை பெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் பதிவு செய்துள்ளனர்.

மேதகு முதல்பாகத்துக்கே தணிக்கை சான்று கிடைக்காததால் மேதகு 2 படத்துக்கும் தணிக்கை கிடைக்கப் போவதில்லை என்று பட தரப்பு கூறுகிறது. ஆனாலும் இப்படம் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப்படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் இக்குழு தொடங்கி யுள்ளது.

மேதகு 2 படப்பிடிப்புக்கும் முறையான அனுமதி கிடைக்காத நிலையில் கொரில்லா பாணியில் இதன் படப்பிடிப்பை நடத்தியதாக இயக்குனர் இரா.கோ யோகேந்திரன் தெரிவித்தார்.வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.