புற்றீசல்கள் போல் புதிய இயக்குநர்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு புதிய இயக்குநரின் படம். திருக்குறளில் இருந்து தலைப்பை எடுத்திருப்பதால் இவருடையது புதுக்குரலாய் ஒலித்ததா?

ஜெய்யும் அதுல்யாவும் காதலர்கள்.கல்லூரி காலத்திலேயே அதுல்யா ஜெய்க்கு புரபோஸ் செய்ய ‘அப்ப பாக்க சுமாராத்தான் இருந்தீங்க…ஆனா இப்ப செமயா இருக்கீங்க’ என்று லேட்டாக தனது காதலைத் தெரிவிக்கிறார்கள். போய்த்தொலைடா’ என்று அதுல்யா சம்மதிக்கிறார். திருமணம் செய்ய இருவீட்டாரின் சம்மதமும் கிடைக்கிறது. திருமணத்துக்காக நகை வாங்கப் போகுமிடத்தில் அந்த நகைக்கடையைக் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் வருகிறது. அந்தக்கூட்டத்தால் துப்பாக்கியால் சுடப்படுகிறார் அதுல்யா.

அந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் என்னாவாகிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச்சொல்லியிருக்கும் படம்தான் எண்ணித்துணிக.

மென்பொருள் துறையில் பணியாற்றும் ஒரு சாதாரண இளைஞராக வரும் ஜெய், காதலியின் அப்பாவிடம் திருமணத்துக்குச் சம்மதம் வாங்குமிடத்திலேயே வித்தியாசம் காட்டுகிறார்.சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.நல்லாத்தானே நடிக்கிறார். அப்புறம் ஏன் இன்னும் பூஜ்யத்திலேயே இருக்கிறார் என்கிற சந்தேகத்தையும் கிளப்புகிறார்.

அதுல்யா அழகாக இருக்கிறார். அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்கலாம் என்று ஒரு சின்ன ஏக்கம் வருகிறது. அதிகமாகக் காட்டியிருக்கலாம் என்பதில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை.

இன்னொரு நாயகி போல் அஞ்சலிநாயர் வருகிறார், அழுகிறார்..அழுகிறார். படம் முழுக்க அழுதுகொண்டேயிருக்கிறார்.

வில்லியாக வரும் வித்யாபிரதீப்புக்கு வித்தியாசமான வேடம். மந்திரியிடம் இழக்கக் கூடாததை இழந்துவிட்டு இப்படி இருந்தேன் எனக் குமுறும்போது லைட்டாக சிரிப்புதான் வருகிறது.

அமைச்சராக வருகிறார் சுனில்ஷெட்டி, வழக்கமாக திரைப்படங்களில் பார்க்கும் அமைச்சர் போல் இல்லாமல் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவருடைய வேடம். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் ஓகேதான்.

சர்வதேச கொள்ளைக்கும்பல் தலைவராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்சுப்பிரமணியன் மிரட்டல் உருட்டலில் மின்னுகிறார்.

சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் ஒரே இரைச்சல் மயம். ஜே.பி. தினேஷ் குமார் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

அமைச்சர் உள்ளிட்ட அதிகாரவர்க்கம் மற்றும் சர்வதேச கொள்ளைக் கும்பல்களின் தன்னலத்தால், நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் திடீர் திருப்பங்கள் அதனால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றைப் பதிவு செய்துள்ளார் அறிமுக இயக்குநர் இயக்குநர் எஸ்.கே.வெற்றிச்செல்வன். படத்தின் முன்பாதியில் சில துணிச்சலான காட்சிகளை வைத்தவர் இரண்டாவது பாதியில் வழக்கமான மசாலா வட்டாரத்துக்குள் வந்து விழுந்திருப்பது பரிதாபம். ஆனாலும் ஒருமுறை பார்க்கத் துணியலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds