2017ல் வெளிவந்த, நட்சத்திர நடிகர்கள் யாருமற்ற, எளிமையான ’8 தோட்டாக்கள்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். நீண்ட காத்திருப்புக்குப் பின் இந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது அவரது இரண்டாவது படமான ‘குருதி ஆட்டம்’.

கதைக்களம். மதுரை ரவுடிகள். ஆம்பள ரவுடிகள் அலுத்துவிட்டார்கள் என்றெண்ணி, மதுரையின் முக்கிய ரவுடியாக சித்தி ராதிகா சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அக்கா தவிர உறவுகள் யாருமற்ற, கபடி ஆட்டக்காரரான நாயகன் அதர்வா தனது நண்பர்களுக்காக வக்காலத்து வாங்கப்போய் ராதிகாவின் மகனுக்கு மிகவும் நெருக்கமான நண்பரை பகைத்துக்கொள்கிறார்.

ராதிகாவின் மகன் அதர்வா தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டு உதவ முன்வந்தாலும் ‘சொத்த’ என்று தந்தை ராதா ரவி உட்பட பலராலும் பரிகசிக்கப்படுகிற அவரது நண்பர் அதர்வாவைக் கொல்ல பல வழிகளிலும் முயல்கிறார். அந்த சின்னப்பகை பல முடிச்சுகளைப் போட்டுக்கொண்டு மதுரையே தீப்பிடிக்கும் அளவுக்குப் பிரச்சினையாகிவிட ரத்தக் குளியல் நடத்தி கிளைமேக்ஸில் நம்மோடு சேர்ந்து பெருமூச்சு விடுகிறார் அதர்வா.

நடுநடுவே டீச்சர் பிரியா பவானி சங்கரோடு பிரியமான காதல் காட்சிகளும் அளவோடு தொந்தரவு செய்கிற சில பாடல்களும்  கூட உண்டு.

ரவுடிகள் உலகத்தில் குரோதம், துரோகம், பழிவாங்கல்களை விட்டால் சொல்வதற்கு வேறு எதுவுமே இல்லையா என்றால் உண்மையில் வேறு எதுவுமே இல்லைதான். ஆக இந்த குருதி ஆட்டத்தின் இறுதி காட்சி வரை இந்த சமாச்சாரங்கள்தான். ஆனால் முதல் காட்சி தொடங்கி இடைவேளை வரை அத்தனை விறுவிறுப்பாய் கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். சண்டைக் காட்சிகள் அத்தனை மிரட்சியாய் இருக்கின்றன. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய காட்சியில், ஒரு பக்கம் அதர்வாவும் கண்ணா ரவியும் களத்துமேட்டில் எதிரிகளுடன் மோதிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ராதிகாவைத் தீர்த்துக் கட்டப் போடப்பட்ட ஸ்கெட்சில் அவர் மாட்டிக்கொள்ளும் காட்சியில் …சபாஷ் ஸ்ரீகணேஷ்.

ஆனால் இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையில் ஒரு தொய்வு ஏற்பட்டிருப்பதை சொல்லியே ஆகவேண்டும்..அந்தக் குழந்தையின் தந்தை அதர்வா சொல்வதைக் கேட்பதா அடியாளாகத் தொடர்வதா என்று தானும் குழம்பி திரைக்கதையையும் குழப்பிக்கொண்டேயிருக்கிறார்.

இன்னும் நம்ம இண்டஸ்ட்ரியில்தான் இருக்கிறாரா என்ற குழப்பத்தில் ரசிகர்களை வைத்திருக்கும் அதர்வாவுக்கு இப்படம் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான். அவரது சின்சியாரிட்டி படம் முழுக்க தெரிகிறது. நாயகி பிரியா பவானி சங்கர் அழகாக இருக்கிறார். அளவோடு சிரிக்கிறார். அவ்வப்போது அழுகிறார். இன்னொரு மெயின் நாயகியான ராதிகா ராடன் நிறுவன கடன் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர கொஞ்ச காலத்துக்கு மதுரையைக் கட்டி ஆளலாம் என்கிற அளவுக்கு பொருத்தமான டாணாக மிரட்டுகிறார். ராதிகாவின் மகனாக வரும் கண்ணாரவி நல்ல தேர்வு.

பாடல்களிலும் பின்னணி இசையிலும் யுவன் தனது வழக்கமான முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை..

147 நிமிடம் ஓடும் இப்படத்தில் இரண்டு நிமிடத்துக்கு ஒன்று என்கிற கணக்கில் மொத்தம் 79 கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அடுத்தும் ஒருவேளை இதுபோன்ற ஆக்‌ஷன் படம் எடுக்க நினைத்தால் இந்தக் கொலைகளைப் பாதியாகக் குறைக்கவேண்டும் இயக்குநர் ஸ்ரீகணேஷ். ஒருவேளை அது சினிமா விமர்சகர்களைக் கொல்கிற ஆக்‌ஷன் படமாக இருந்தால் 79 அல்ல 179 கொலைகளை நிகழ்த்தினாலும் மெத்த மகிழ்ச்சி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds