தரையைப்போலவே திரையிலும் மாசு,தூசுகள் அதிகமாகிவிட்டதால் நல்ல படங்களுக்கு ஏங்கிக் காத்திருக்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அந்த ஏக்கத்துக்கு ஒரு தரமான ஆறுதலாக வந்து சேர்ந்திருக்கும் படம் இந்த ‘சீதா ராமம்.
1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கிற கற்பனைக்கதை. இந்திய இராணுவத்தில் இருக்கும் நாயகன் துல்கர்சல்மான், காஷ்மீரில் நடக்கவிருந்த ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்துகிறார்.
அதனால் நாடெங்கும் புகழ்பெறுகிறார். அதன்காரணமாக அவரிடம் எடுக்கப்படுகிற வானொலிப் பேட்டியில், தான் ஓர் அனாதை என்று சொல்கிறார். அன்றிலிருந்து அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரத்தொடங்குகின்றன.
அவற்றில் ஒரு கடிதம், நான் உங்கள் மனைவி சீதாமகாலட்சுமி என்கிறது. அக்கடிதத்தில் வழிந்த காதலால் ஈர்க்கப்படும் துல்கர்சல்மான், அனுப்புநர் முகவரி இல்லாத அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு அனுப்பியவர் யார் எனத் தேடிப்போகிறார்? அந்தத் தேடலின் நடுவே தற்போதைய நிகழ்வில் சில சுவார்சியமான முடிச்சுகளைப் போட்டு காதல் மழையில் நனைய வைக்கிறார் இயக்குநர்.
நாயகன் துல்கர்சல்மான், ராணுவவீரராகவும் காதல் பித்தேறியவராகவும் நிஜமாக வாழ்ந்திருக்கிறார். இப்படத்தில் நடப்பதுபோல் நாடெங்குமிருந்தும் அவருக்குக் காதல்கடிதங்களோ ஈமெயில்களோ வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சீதாமகாலட்சுமியாக நடித்திருக்கும் மிருணாள் தாகூர், கண்களிலேயே கசிந்துருகுகிறார். உண்மையில் அவர் யார்? எனத் தெரியவரும்போது படத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி நமக்கும் இதயம் அதிர்ந்து துடிக்கிறது.
1964 இல் தொலைந்த சீதாமகாலட்சுமியை 1985 ல் வேண்டாவெறுப்பாகத் தேடிப்போகும் வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அவருடைய துடிப்பும் நடிப்பும் நன்று.. அவர் தொடர்பான சஸ்பென்ஸும் படத்துக்கு முக்கிய பலம் சேர்க்கிறது.
ராஷ்மிகாவுடன் பயணப்படும் தருண்பாஸ்கர், துல்கரின் நண்பராக வரும் வெண்ணிலாகிஷோர், ராணுவ அதிகாரிகளாக வரும் கெளதம்மேனன், பிரகாஷ்ராஜ், சுமந்த் உள்ளிட்டு படத்தில் இருக்கும் அனைவரும் தத்தம் கதாபாத்திரங்களைச் சரியாகச் செய்து படத்தின் தனித்துவத்தைக் காப்பாற்றுகிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு.காஷ்மீரத்தின் அழகு,பிரமாண்ட அரண்மனையின் பிரமிப்பு ஆகியன மட்டுமின்றி ராணுவ வீரர்களின் உணர்வுகளையும் கூடக் காட்சிப்படுத்தி வரவேற்பைப் பெறுகிறார் பி.எஸ்.வினோத். பாடல் காட்சிகள் அனைத்தும் அற்புதம்.இடைவேளைக்குப் பின்னர் வரும் பாடல்காட்சிகள் தேவைதானா என்ற யோசனை ஒரு பக்கம் வந்தாலும் அக்காட்சிகள் நம்மைக் கட்டிப்போடுவது நிஜம்.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுகம்.திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிக்காத மெல்லிசை. அதற்கேற்ற வரிகள். தற்காலத் தலைமுறை தலையாட்டும் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
கடிதங்களே பார்த்திராத இந்தத் தலைமுறைக்கும் கடிதங்கள் மேல் ஈர்ப்பு வருகிற மாதிரியான சொல்லாட்சிகளுடன் அமைந்த தமிழுக்குச் சொந்தக்காரர் மதன்கார்க்கியின் பங்கும் மெனக்கெட்டு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.
ஹனுராகவபுடி எழுதி இயக்கியிருக்கிறார். எந்நாளும் திகட்டாத காதலை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார். அற்புதமான காதல் கதைக்குள் இவ்வளவு அதிரடித் திருப்பங்களா? என வியக்க வைக்கும் திரைக்கதை..படம் 2மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடினாலும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் மாயவித்தையைக் கைவரப்பெற்றவர் என்று சொன்னால் அது மிகையில்லை.
’சீதா ராமம்’ இந்த ஆண்டின் மிக முக்கியமான படம்.