விவேக சிந்தாமணி
பாடல்
”தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானகத்து இடை இருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே!”
பொருள்;
தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும் தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை . ஆனால் வண்டானது காடுகளுக்குள் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து வந்து மது உண்ணும். அது போல பல காலங்கள் பழகி வந்தாலும் அறியாமையில் உள்ளவரகள் கற்றவர்களின் பெருமை அறியாதவர்கள் . ஆனால் அறிவுடைய கற்றவர்களோ தூர இருந்த போதும் கற்றவர்களின் சிறப்பினைக் கண்டு நாடி வந்து உறவாடி மகிழ்வர்.
இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹரிடம் மேற்கண்ட விவேக சிந்தாமணி படித்த உதவி இயக்குநர் யாரோ இருந்திருக்கவேண்டும். ‘காப்பி ரைட்ஸ் பிரச்சினை இல்லை சார். என் கதைன்னு சொல்லி யாரும் ரைட்டர்ஸ் யூனியன்ல கம்ப்ளெயிண்டும் பண்ண முடியாது. அப்பிடியே தவளையை தனுஷா மத்தி, தாமரையை நித்யா மேனனா மாத்தினா ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி ரெடி சார்.
சாட்சாத் மேற்படி சமாச்சாரம் தான் திருச்சிற்றம்பலம் படத்தின் கதையும். தன் மேல் விழுந்து விழுந்து அக்கறை எடுத்துக்கொள்ளும் நித்யா மேனனின் பாசம் புரியாமல், பழைய ‘கிளாஸ்மேட் ஒருத்தியையும், பிரியம்னா என்ன விலை என்று கேட்கும் பிரியா பவானி சங்கரையும் லவ் பண்ணி ஃபெயிலியரில் தவிக்கும் தனுஷுக்கு தாத்தா பாரதிராஜா நித்யாவின் அருமையை உணர வைக்கிறார். பல வருடங்களாய் தனுஷின் புரபோஷலுக்காக காத்திருந்து வெறுத்துப்போன நித்யா கனடா கிளம்பிப்போய்விட தனுஷின் காதல் என்னவானது என்பதுதான் கதை.
தனது அறையில் இசைஞானியின் ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை மாட்டிவைத்து லவ் ஃபெயிலியர் ஆகும்போதெல்லாம் அவரது பாடல்களைக் கேட்டு கண்ணீர் உகுக்கிறவராய் தனுஷ் நெஞ்சில் பச்சக் என்று ஒட்டிக்கொள்கிறார்.
படத்தில் தனுஷையும் விட அதிகம் கவர்கிறார் நித்யா மேனன். ஆல் மட்டுமல்ல நடிப்பும் வெய்ட்தான். தனுஷின் காதலை நிராகரிக்கும் பாத்திரத்தில் ஒரு சில காட்சிகளில் மட்ட்மே வந்து போகிறார்கள் ராஷி கன்னாவும் பிரியா பவானி சங்கரும்.
தனுஷின் தாத்தா அவதாரம் எடுத்திருக்கும் பாரதிராஜாவுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அவரது பழைய காதல் கதைகளை அளக்கும்போது மனுஷன் தூள் கிளப்புகிறார். ‘விருமன்’படத்தில் வந்த , மகன் வெறுக்கும் தந்தையாக அதே பிரகாஷ்ராஜ்.
இசை அனிருத் என்கிற இம்சை. ராஷிகன்னா நினைப்பில் நித்யா மேனனுடன் டூயட் ஆடும் அந்த ஒரு பாடல் தவிர மற்றவையெல்லாம் படு சொதப்பல் ரகம். ரீரெகார்டிங் என்ற பெயரில் காதைப் ப்ஞ்சர் ஆக்குகிறார்.
கிராமத்து போர்சனில் இடம் பெறுகிற ‘தாய்க்கிழவி’பாடல் விளங்கவில்லை. கதையில் அது என்னத்துக்கு இடம்பெறுகிறது என்பதுவும் விளங்கவேயில்லை.
மற்றபடி ஒரு சின்ன சுவாரசியமான காதல் கதையை எளிமையாக சொன்ன வகையில் வாங்கிய சம்பளத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் திருச்சிற்றம்பலம் இயக்குநர்.