காலால் நடனத்தில் ஜாலம் நிகழ்த்தும் நடனப்புயலுக்கு ஒருக்கால் ஒரு காலே இல்லாமல் போனால்? என்கிற ஆர்வம் கிளப்புகிற ஒன்லைன் இந்த பொய்க்கால் குதிரை.
பிரபுதேவா ஒரு விபத்தில் முழுசாக மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்துவிட்டு மகளுடன் வாழ்ந்து வருகிறார். இனி வாழ்வில் அவருக் மிச்சமிருக்கிற ஆறுதல் அவருடைய மகள் மட்டுமே. அந்த மகளுக்கு ஒரு வித்தியாசமான நோய். அதைச் சரிசெய்யப் பெரும் தொகை தேவைப்படுகிறது. அதற்காக பெரும் ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேலையைச் செய்து பணம் திரட்டி மகளைக் காப்பாற்ற நினைக்கிறார்.
ரெண்டு கால்களும் திடகாத்திரமாக இருப்பவர்களுக்கே பல சமயங்களில் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை எனும் நிலையில் ஒற்றைக்காலில் அவர் நினைத்தது நடந்ததா என்பதை ஆக்ஷம், திரில் கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.
கால் இல்லாதவர் என்ற நிலையிலும் ஒரு டப்பாங்குத்துப் பாடலுக்கு ஸ்டைலாக நடனம் ஆடுவது, எதிரிகளுடன் ஆக்ரோஷமாக சண்டை செய்வது ஆகிய காட்சிகளில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் பிரபுதேவா.
ரைசாவில்சனின் பாத்திரம் என்னத்துக்கு என்கிற கேள்வி அவ்வப்போது அவர் வரும் அத்தனை காட்சிகளிலும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
வரலட்சுமி சரத்குமாரின் ஆளுமை படத்துக்குப் பலம் சேர்க்கிறது.முந்தைய படங்களைக் காட்டிலும் நிதானமாகப் பேசுகிறார். வரலட்சுமியின் கணவராக வரும் ஜான்கொக்கேன் வேடம் எதிர்பார்க்கக் கூடியதுதான் என்றாலும் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பராக வரும் ஜெகனுக்கு இப்படத்தில் கொஞ்சம் பதவி உயர்வு.வில்லத்தனமெல்லாம் செய்து வியப்படைய வைக்கிறார். ஆனால் அந்த வில்லத்தனம் ஒட்டவில்லை என்பது பரிதாபம்.
ஒருசில காட்சிகளில் வரும் முன்னாள் கதாநாயகன் ஷாம் படத்தின் இரண்டாம்பாகத்துக்கு சாத்தியமிருப்பதாக ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஒளிப்பதிவாளர் பள்ளு, நாயகனின் பாத்திரத்திற்கேற்ப ஒளியமைப்புச் செய்து காட்சிகளைப் படமாக்கியிருக்கியிருப்பது நன்று.
இமானின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கின்றன, பின்னணி இசையிலும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி ஏறி வருகிறார். வசனகர்த்தா மகேஷ்,பெரிய பெரிய தத்துவங்கள் என்று சொல்லப்படுபவற்றை போகிற போக்கில் வசனங்கள் ஆக்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார்,திரைக்கதையில் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களை வைத்து விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.இறுதியில் பிரபுதேவா நடந்தவற்றை விவரிக்கும் காட்சி படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.