சதா சாதிப் பஞ்சாயத்துகளை மட்டுமே வைத்துக்கொண்டு சடுகுடு ஆடுகிறார் என்று விமர்சிக்கப்படும் ஐயா முத்தையாவின் அடுத்த படம் விருமன்’.
‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு கார்த்தியும் இயக்குநர் முத்தையாவும் இணைந்திருக்கும் இப்படமும் ஸேம் வகையறாதான்.
உறவு, பிரிவு,துரோகம்,வெட்டுக்குத்து, குத்துப்பாட்டு, பழிவாங்கும் எண்ணம் என வழக்கமான முத்தைய்யா ஃபார்முலாவில் கொஞ்சமும் மாறாமல் பயணிக்கிறன் இந்த கொம்பன் ஸாரி விருமன்.
அம்மா மரணத்திற்கு அப்பாதான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுகிறார். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். முடிவில் தந்தையும் மகன்களும் சேர்ந்தார்களா என்பது மாதிரியான ஒரு கதை.
கிராமத்துப் பின்னணியில் கொஞ்சம் சென்டிமென்ட், ’குடும்பம்னா,… பாசம்னா…அம்மான்னா,…அண்ணன்கள்னா’ என நெஞ்சை நக்கும் வசனங்கள், குறிப்பிட்ட சாதிப் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகள், காதல் என முத்தையா படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அப்படியே இருக்கிறான் இந்த விருமனும்.
கார்த்தி ‘பருத்தி வீரன்’படத்தை மறுமுறை ஒருமுறை பார்த்து அப்படியே படம் முழுக்க முறைக்கிறார். ஷங்கரின் மகள் என்ர ஒரே காரணத்துக்காக நாயகியாக்கப்பட்ட அதிதி படு செயற்கையான, அலட்டல் மிகுந்த நடிப்பு. வழக்கமான கதாநாயகிக்களுக்கு வைக்கப்படும் இடுப்பு,மடிப்பு ஷாட்கள் எதுவுமின்றி ‘பாதுகாப்பாக’படமாக்கியிருக்கிறார்கள்.
கதையைத் தூக்கிப் பிடிப்பதற்காக ராஜ்கிரண்,பிரகாஷ்ராஜ்,கருணாஸ்,சிங்கப்புலி,ஆர்.கே.சுரேஷ்,சரண்யா பொன்வண்ணன் போன்ற ஏகப்பட்ட சீனியர் ஆர்டிஸ்டுகள் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா எள்ளலின் உச்சமாக, அவ்வளவு துச்சமாக இசையமைத்திருக்கிறார்.
ஒரே கதையை எத்தனை முறை எடுத்தாலும் பார்ப்போம் என்று அடம் பிடிக்கும் முத்தைய்யா ரசிகர்கள் மட்டும் படம் பார்க்கலாம்.