அண்மைக்காலமாக, கன்னடத் திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான செலவில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலைக் குவித்து வருகின்றன.

இதனால், ஒட்டுமொத்த இந்தியத் திரையலகின் கவனமும் தற்போது கன்னடத் திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது.

தற்போது, கன்னடத்தில் நட்சத்திர நடிகர்களாக உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்திருக்கும் படம் ‘கப்ஜா’. அந்தப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்தத் திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா ஆகிய ஏழு இந்திய மொழிகளில் வெளியாகிறது.

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சந்திரசேகர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருககிறார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஜெ.ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கே.ஜி எஃப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்புப் பணிகளை மகேஷ் ரெட்டி கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் ஆகிய நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

கன்னடத் திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர்.சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கப்ஜா’ திரைப்படத்தின் டீசர், நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதனை நடிகர் உபேந்திராவின் இரசிகர்களும், நடிகர் கிச்சா சுதீப்பின் இரசிகர்களும், கன்னடத் திரையுலக இரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். டீசருக்கு கிடைத்து வரும் பேராதரவைக் கண்டு உற்சாகமடைந்த படக்குழுவினர், ‘கப்ஜா’ படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்தப் படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம் என்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியான இரண்டுநாட்களில் இரண்டுகோடிக்கும் மேலானோர் பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர் பார்க்க….

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.