‘நட்சத்திரம் நகர்கிறது’ காதல், சாதியம்,பாலியல், பாலினம், ஆணவக் கொலை என்பனவற்றை இன்றைய பெருநகர்ப்புற இளையோர் பண்பாட்டோடு ( metro youth culture) இணைத்துப் பேச முயற்சிக்கிறது.
 
ரஞ்சித்தின் இந்த இளையோர் பல சாதிகளைச் சார்ந்த, பல்வேறு பொருளாதாரப் பின்புலங்களைச் சார்ந்த ஆனால் கலை, நாடகம், சினிமா, இலக்கியம் போன்றவற்றோடு பரிச்சயம் கொண்ட குழுவினர்.
இவர்கள் காதலை புனிதமான வஸ்துவாகக் கருதுபவர்களில்லை. காதலை மனம் சார்ந்தது, உடல் சார்ந்தது, இல்லை காதல் என்பது அரசியல், காதல் என்பது பாலினம் கடந்தது என்பது போல் பலவாறாகப் பேசிக் கொள்பவர்கள்.
இவர்கள் டி.ராஜேந்தரின் ஒரு தலை ராகம் ‘சங்கர்’ போன்றோ இதயம் ‘முரளி’ போன்றோ படம் முடியும் வரை காதலைச் சொல்ல முடியாமல் அலைந்து ரத்த வாந்தி எடுப்பவர்களில்லை. மணி என்ன? என்பதுபோல் காதலைச் சொல்லி அதே வேகத்தில் காதலை முறிப்பவர்கள். அப்பட்டமான 21ஆம் நூற்றாண்டு பெருநகரப் பண்பாட்டின் வகைமாதிரிகள்.
தீவிர காதலில் இருக்கும் ஜோடி ஒன்று. ஆணும் ஆணுமான, பெண்ணும் பெண்ணுமான ஜோடிகள் இரண்டு. ஆண் அரவாணி ஜோடி ஒன்று, வெள்ளைக்காரியை ஒருதலையாகக் காதலிக்கும் ஒருவர். திருமணமானபின் மனைவியைக் காதலிக்கும் ஒருவர் என்று நோவாவின் பேழையில் கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களைப் போலிருக்கிறார்கள்.ஒரே பெட்டிக்குள் இத்தனைபேர் இருப்பதைப் போலவே, அவர்கள் தயாரிக்கும் ஒரே நாடகத்திற்குள் பல்வேறு நாடக வகைமைகள் வந்துபோகின்றன. இறுதிக்காட்சியில் நாடகத்திற்குள் ஒரு நாடகமும் அரங்கேறுகிறது.

எல்லோரும் ஒரு நாடகத் தயாரிப்பிற்காக பாண்டிச்சேரியில் கூடுகிறார்கள். உண்மையிலேயே சென்னையில் நாடகப் பயிற்சியாளராக இருக்கும் ரிஜின் ரோஸ் நாடக மாஸ்டராகவே வருகிறார்.

எல்லாம் நல்லபடியாகத்தான் ஆரம்பிக்கிறது. ரஞ்சித் பொதுவாக பெரும்பாண்மை வெகுசன ரசிகர்களிடம் அவர் நம்பும் அரசியலை வெற்றிகரமாகப் பேசி வருபவர். வெகுசன ரசனை, சினிமா அழகியல், முற்போக்கான கருத்தியல் என்பனவற்றின் இணைவைச் சாத்தியமாக்கியிருப்பவர். அதுவே அவரின் பலம்.

ஆனால் ‘நட்சத்திரம்’அத்தகைய வெகுசன ரசிகர்களை மனதில் கொண்டதாக தெரியவில்லை.

காதல் பற்றிய மாற்றுக்கோணங்களை, பார்வைகளை பொதுப்பார்வையாளர்களுக்காகத்தான் சினிமா பேசவேண்டியிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் ஒட்டுமொத்தத் தன்மை பொதுப்பார்வையாளனுக்கானதாக இல்லை.

தமிழகத்தின் அறிவுஜீவிகள், தீவிர சினிமா ரசிகர்கள், சிறுபத்திரிக்கை வாசகர்கள் என்பவர்களுக்கு ரஞ்சித் இந்தப் படத்தில் காதல், பாலினம் பற்றிப் பேசும் விசயங்கள் புதியவை அல்ல.

நாடகம் என்றால் இது அப்பட்டமான நவீன நாடகம். எல்லோரும் சேர்ந்து நாடகப் பிரதியை பேசிப் பேசி உருவாக்கி ஒத்திகை செய்கிறார்கள். ஒத்திகையை விட ஒத்திகை முடிந்தபின் நடக்கும் பீச் பார்ட்டிகள் தூக்கலாக இருக்கின்றன. ஒத்திகைக்குப் பின் இத்தகைய சுவாரஸ்யங்கள் இருக்குமென தெரிந்தால் நிறையப் பேர் சென்னைக்கு நாடகப் பயிற்சிக்கு ரயிலேறிவிடும் அபாயம் இருக்கிறது.

நிறைய ஆச்சரியங்களுடன் ஆரம்பிக்கும் படம் இரண்டாம் பாதியில் தேங்கி நிற்கிறது. நாடக ஒத்திகை சலிப்பூட்டும்தானே. உச்சகாட்சியில் கதாயுதத்துடன் புதியபாத்திரம் நாடகத்துக்குள் நுழைவதும் பின்னர் நடப்பதும் திரைக்கதையின் பின்னடைவே. ஏனென்றால் படம் முழுவதும் எல்லாவற்றையும் உரத்த குரலில் பேசும் ரஞ்சித் முடிவில் பூடகமான மொழிக்கு ஏன் தாவுகிறார்.

நாயகியின் முன்கதை சித்திரக்கதையாக சொல்லப்படுகிறது. அட்டகாசம்.
ஆணவக் கொலைக்காட்சிகள் கோப்புக்காட்சிகளாக உண்மைப் பதிவுகளே காட்டப்படுகின்றன.
தலித் பெண்ணை மணக்க விரும்பும் நாயகனை மனம் மாற்றும் ஒரு நாடகீயச் சிறுகதை ஒன்று வருகிறது. சுகிர்தராணியின் கவிதை மேடையில் இசைக்கப்படுகிறது.எல்லாவற்றையும் கலந்து கட்டி ரஞ்சித் இந்தப் படத்தில் முயற்சித்திருக்கும் கூறல்முறை ஒரு ஹை பிரீட் (hybrid) தன்மையுடையதாக இருக்கிறது.
அறிந்தே இதைச் செய்திருப்பார் என்று நம்பலாம்.ரஞ்சித் பேச முயற்சித்த தீவிரமான விசயங்கள் அவர் உருவாக்கியிருந்த கதைக்கள பின்புலத்தால் அந்தத் தீவிரத்தைக் கடத்தவில்லையோ என்று தோன்றுகிறது.

 
-முகநூலில் திரு.பிரபாகர் அவர்களின் பதிவு.
 
 
 
 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds