இட ஒதுக்கீடுகள்.. அவற்றிற்கான புள்ளி விவரங்கள்…2005ல் நடந்த கணக்கெடுப்புகள் etc.

“பொதுவாக புளுகுகளை
இப்படிப் பிரிக்கலாம்.
ஒன்று : அண்டப்புளுகு.
அடுத்து : ஆகாசப்புளுகு.
ஆனால்
இவை எல்லாவற்றையும் தாண்டி
மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது.
அதுதான் புள்ளிவிவரப் புளுகு.”
– காட்கோ வாலிஸ்.**
.
மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா? அல்லது காணாமல் போயிற்றா?என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம்.

பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு ‘புள்ளி’ விவரத்தை வெளியிட்டிருக்கிறது “தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம்” அதாவது N.S.S.O (National Sample Survey Organization).
.
இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க. என்று அழைக்கக்கடவதாக.

அது அப்படி என்னதான் புள்ளிவிவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது.
.
ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.
.
அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்…
.
ஆம் இந்த ‘ஒரு மாதிரியான’ கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான்:
“இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதம்தான்.”

‘இதிலென்ன சிக்கல் ? 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன? கிடைப்பது கிடைத்தால் சரி’ என எவராவது ‘தேமே’ என்று இருந்தால் வந்தது வம்பு என்று அர்த்தம்.
.
ஏனென்றால் இந்தப் புள்ளிவிவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.
.
தே.மா.க.க. வின் இந்தக் “கண்டுபிடிப்பு” வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 % இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?
.
அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?
.
அல்லது
.
3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய்
இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?
.
பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா ?
.
ஒருவேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா ?

என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.
.
1931 கணக்கெடுப்புப்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காகா காலேல்கர் கமிட்டி.
.
52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க. வின் இந்தப் புதிய “கணக்கெடுப்பு”.

இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பதுதான் உள்ளர்த்தம்.

52 க்கு 27 சதவீதம் ஒதுக்கீடு என்றால்…
இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா?குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
.
கடைசியாகக் கணக்கெடுத்தது 1931 ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில். நல்ல வேளையாக “சுதந்திர” இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான்.
.
ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்:
1931 ல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005 இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி…?
.
விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?
.
(52 – 41 = 11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா…..?
.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் “அவர்கள்” வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் என்னாவது வெளியேறிவிட்டார்களா….?
.
சரி இந்த சர்வே – சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா…..?
.
பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்….?
.
கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு
இதில் மட்டும் என்ன சிக்கல்….?
.
ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961 ல்.
.
தலித் மக்களது கணக்கை.
அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு
முன்னமே 25 சதம் என்று காட்டியது.

ஆனால் இன்றுவரை தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%.
இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள்
“இந்த நாடு நடுக்கடலில் கடலில் மூழ்கட்டும்” என்று மனதார “வாழ்த்துவார்கள்”
.
ஆக இன்றுவரை இந்த “சுதந்திர” இந்தியாவில்
‘ஆகா’ ‘ஓகோ’ என்று ‘ராஜவாழ்க்கை’ வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
தலித்துகளும்… பிற்படுத்தப்பட்டவர்களும்தான்.
அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் “கணக்கெடுப்பு”.
மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை
ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய….?
.
இதே தே.ம.க.க. வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8 % என்கிறது.
1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் முழுமூச்சாக ”செயலில்” இறங்கியதன் விளைவு
41 % மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.
.
ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத “வளர்ச்சியை”க் காட்டிய இம்மக்கள் 1931 லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.
.
சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க. வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது
இந்த தே.மா.க.க.
“79306 நகர்ப்புற வீடுகளிலும்
45377 கிராமப்புற வீடுகளிலும்
இந்த சர்வே நடத்தினோம்” என்கிறார்கள்.
.
சர்வே சரி…
எந்த நாட்டில்….
எந்த மாநிலத்தில்…
எந்த நகரத்தில்….
எந்த கிராமத்தில்….
நடத்தினீர்கள்? என்றால்
அதற்கு பதிலாக வெறும் காத்துதாங்க வருது.
.
ஒருவேளை
தங்களது ‘அகண்டபாரதக்’ கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த
இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?
.
வாய்ப்பில்லை.
.
ஒருவேளை
இந்தக் கணக்கெடுத்த மகான்கள்
முன்னொரு காலத்தில் ஆடு, மாடு
மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக
மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ…?
.
யாமறியோம் பராபரமே.
.
(பாமரன் – 2006) எழுத்தாளர் பாமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.