ரியலிசம்-realism, சர்ரியலிசம்-surrealism, சோசலிச ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் என பலவகை இலக்கியக் கோட்பாடுகள் உண்டு.

சர்ரியலிசம் என்பது ஐரோப்பாவில் தோன்றிய ஒரு கலை இலக்கியக் கோட்பாடு. சர்ரியலிசம் என்ற ஆங்கிலச் சொல்லை ‘மிகை எதார்த்தவாதம்’, ‘மீமெய்ம்மையியல்’, ‘அடிமன வெளிப்பாட்டியல்’ இப்படி தமிழில் மொழிபெயர்க்கலாம். அதாவது தூக்கத்தில், ஆழ் மனதில் இருந்து தோன்றும் எண்ணங்களை சித்தரிக்க முற்படும் கலைப் பரிமாணமாக சர்ரியலிசம் பார்க்கப்படுகிறது.

கவிஞர் அப்துல் ரஹ்மான், ரியலிசம் என்பது உதட்டளவில் வாழ்வது. சர்ரியலிசம் என்பது உள்ளத்தளவில் வாழ்வது என்பார். அதாவது, காலையில் அலுவலத்தில் உயர் அலுவலர்களுக்கு சக அலுவலர்களுக்கு ‘வணக்கம்’ சொல்வது ரியலிசம். சொல்லும்போதே, ‘இவன் என்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போறானோ அப்பதான் நிம்மதி’, ‘இவனுக்கு மட்டும் எப்படித்தான் மாட்டுதோ..’ இப்படி மனசுக்குள் நினைப்பது சர்ரியலிசம்.

சர்ரியலிசமென்பது அமைதியின்றி ஓயாது அலைகின்ற மனிதமனக் கூக்குரலின் பண்ணாக ஒலிப்பது. மனதிற்கு அமைதி இங்குமில்லை; அங்குமில்லை; எங்குமில்லை; எனினும் மனத்தின் அடித்தளத்தில் மாளாது அடித்துக் கொண்டேயிருக்கும் உணர்ச்சி அலையின் ஊடாக இழைந்தோடும் ஒரு சோகத்தைத் தணித்து இதயத்தின் வேதனைக்குத் தீர்வு காண்பதற்கும் ‘சர்ரியலிசம்’ முயல்கிறது. மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ வகையான தொடர்புகளைக் கட்டறுத்து மனிதனை விடுதலை வானில் பறக்கச்செய்ய முயல்கிறது. உலக வாழ்வில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத மரணம் பற்றியும், நிலையாமை பற்றியும் கவலையின்றி ஆராய முற்படுகின்றது.

இம்முறையில் கவிஞன், வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற யாப்புவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. கவிதை எழுத பின்பற்ற வேண்டிய ஒரே விதி, எந்த விதியையும் பின்பற்றாமலிருப்பதே…

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கவிதை உலகில் மட்டுமன்றிக் கலையுலகிலும் இவ்வியக்கம் ஊடுருவலாயிற்று. இவ்வியக்கத்தின்படி கலைஞனும் கவிஞனும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களென்றும் ஒருவரையொருவர் எதிர்நோக்கிச் செயல்படுகின்றனர் என்றும் வரையறுக்கப்படுகிறது.

சர்ரியலிசம் என்பது நாடகம், புதினம், சிறுகதை, திரைப்படம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றோடும் தொடர்புடையதாகும். சர்ரியலிச எழுத்தாளர்கள், மனத்தில் தோன்றும் காட்சிகளை உணர்ச்சிகளை, தோன்றிய அவ்வண்ணத்திலேயே எழுதித்தீர்த்து விடுவது ஒன்றே தங்கட்கு உகந்தது என எண்ணுகின்றனர். அங்ஙனம் எழுதுவதன் வாயிலாக அறிவியக்கம், தர்க்கவியக்கம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிநின்று உரிமையோடு கலையுலகில் தங்கட்குரிய பணியினைச் செய்து முடிப்பதாக அவர்கள் உணருகின்றார்கள். மனம் எப்படிச் செல்கின்றதோ அப்படி எழுதுவதே அவர்களின் நோக்கமாகும். சுருங்கச் சொல்லின், மனத்தின் வழியே சர்ரியலிசக் கவிஞனின் கலைஞனின் வழியாகும்.

சர்ரியலிச முன்னோடி ஆன்ட்ரே பிரெட்டன் என்பவர் சர்ரியலிச கவிதைகளை எப்படி எழுத வேண்டுமென பட்டியலிடுகிறார். “வசதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்; மனக் காட்சிகளை உணரும் மனோநிலையில் இருங்கள். உங்கள் புத்திசாலித்தனம் திறமை எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இலக்கியம் என்பது எல்லாவற்றிற்கும் இழுத்துக் கொண்டு போகும் சோக மிகுபாதை என்று சொல்லிக் கொள்ளுங்கள்; வேகமாக எழுதுங்கள்; எதைப்பற்றி எழுதுகிறோமென்று முன்யோசியாமலேயே எழுதுங்கள்; என்ன எழுதியிருக்கிறோம் என்று திரும்பப் படிக்கும் ஆசையின்றி எழுதுங்கள். முதல் வாக்கியம் தானாக வந்துவிடும். அடுத்த வாக்கியம் என்னவென்று முடிவு செய்வது கடினந்தான். ஆனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப் படக்கூடாது. நீங்கள் விரும்புகிற வரையிலும் எழுதிக் கொண்டேயிருங்கள். முணுமுணுப்பை நீங்கள் நம்பலாம். நீங்கள் ஏதோ செய்து விட்டீர்களென்று மௌனம் உங்களை ஆட்கொள்ளும்போது அடுத்த வார்த்தையை நீங்கள் எழுதுங்கள். வார்த்தைகளின் அர்த்தங்களில் சந்தேகம் வரும் போது ஏதேனும் ஓர் எழுத்தினை எழுதுங்கள். உதாரணமாக ‘க’ என்ற எழுத்தினை எழுதுங்கள். அந்த எழுத்தை முதல் எழுத்தாக வைத்து அடுத்த வார்த்தையை உருவாக்குங்கள்”

சர்ரியலிசத்தில் கவிதையோடு நீங்கா இடம் பெற்றது ஓவியமும். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சர்ரியலிச ஓவியர் சால்வடார் டாலி. மீசை ஆண்மைக்கான குறியீடாகப் பார்க்கப்பட்டபோது, அதை உடைத்தெறிந்து நகைப்பைக்கூட்டும் விதத்தில் மீசையை வைத்திருப்பார். அதை பின்பற்றியே, சிம்புத்தேவன் தனது 23 ஆம் புலிகேசி திரைப்படத்திலும் அந்த வகையிலான மீசை பயன்படுத்தியிருப்பார்.

டாலியின் தொடக்க கால ஓவியங்களில் ஒன்றான ‘காபரே காட்சி’ தான் நமது இன்றைய உள்ளுணர்வைக் கொட்டும் நாளாக அமைந்திருக்கிறது.

நன்றி..

மூசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.