இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘ஜோம்பி ரெட்டி’ எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா  நடிப்பில் ‘ஹனு-மேன்’ எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட ‘ஹனு-மேன்’ படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார். இதற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

பாகுபலிக்குப் பின்னர் சரித்திரக் கதைகள் என்கிற பெயரில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும், பொய்யான பழமை ஹீரோயிசங்களை உருவாக்கும் கதைகள் தொடர்ந்து வந்தபடி உள்ளன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட கோணத்தில் தொடங்கும் டீசரின் பின்னணியில், ஹனுமான் என்ற புராண கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ‘ராம்’ எனும் மந்திரம் ஒலிக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹனுமான் எனும் அவதாரத்தின் தோற்றப் பின்னணி குறித்த சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்க.. ‘பண்டையோர்கள் மீண்டும் எழுவார்கள்’ என்ற மேற்கோள் வாசகம் இடம்பெறுகிறது. பிறகு கடற்கரையில்  அலைகளால் தழுவப்படும் நிலையில் கதாநாயகனின் கம்பீரமான அறிமுகம் காண்பிக்கப்படுகிறது. உடன் பயந்த சுபாவத்துடன் கூடிய கதாநாயகி அமிர்தா ஐயரின் அறிமுகமும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வித்தியாசமான வேடத்தில் வில்லனாக வினய் ராயும், சூரிய கிரகணமும், நாயகன் தேஜா சஜ்ஜாவின் ஆக்ரோஷமான நடிப்பும், வரலட்சுமி சரத்குமாரின் வீராவேசமான சண்டைக் காட்சிகளும், உள்ளன.  நாயகன் சூப்பர் ஹீரோவாக மாறி, ஒரு குகையினுள் உள்ள பனி லிங்கத்தின் ஊடாக கடுந்தவம் இருக்கும்  போன்ற காட்சிகளெல்லாம் படத்தில் வருகின்றன. வி எஃப் எக்ஸ் பணிகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின்  தரத்தை உயர்த்தி உள்ளது.

சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி அற்புதமான மாய உலகத்தை உருவாக்கி இருக்கிறார்.

தேஜா சஜ்ஜா, சூப்பர் ஹீரோவாக மாற்றம் பெற்று தோன்றுவது ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது. நாயகி அமிர்தா ஐயர் தேவதை போல் தோன்றுகிறார். இவர்களுடன்  வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக், ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான படைப்பை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இதனை திருமதி சைதன்யா வழங்குகிறார்.

ஹனு-மேன் படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.