கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று,  இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிரசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. ஆம், அந்தச் சந்திப்பில் லைகா நிறுவனர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில்.

அதனால் தொடக்கத்தில் 8 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகினார்கள். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் 9 அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளார்கள்.

இவர்களில், முதலில் விடுதலையான 8 தமிழ் அரசியல் கைதிகள், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணிய சுபாஸ்கரன், அவர்களுக்குத்  தலா ரூ 25 இலட்சத்தை  வழங்கினார்.

நவம்பர் 3 ஆம் தேதி வியாழன் அன்று கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து, 8 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 இலட்சம் வழங்கினார் சுபாஸ்கரன்.

அதன்பின் இனி விடுதலையாகும் ஒவ்வொரு அரசியல் கைதிக்கும், தலா 25 இலட்சம் வழங்க உள்ளதாகவும்  சுபாஸ்கரன் கூறியுள்ளார். அதன் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிகழ்வு நடந்த அன்றைய தினம், காசோலையைப் பிரித்துப் பார்த்த பல அரசியல் கைதிகள் அழுது விட்டார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்கள். இவர்களில் சிலருக்கு 200 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி நவம்பர் 6 அன்று  கொழும்பில் வைத்து இலங்கை அதிபர் ரணிலை சுபாஸ்கரன் மற்றும் பிரேம் சிவசாமி ஆகியோர் சந்தித்தார்கள். அப்போது மேலும் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ரணில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக 81,  அதாவது அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாக உள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் பெரும் தொழிலதிபராக விளங்கும் அவரை இலங்கையில் முதலீடுகள் செய்யச் சொல்லிக் கேட்ட இலங்கை அரசுக்கு, முதலீடு தேவையா ? அப்படி என்றால் தமிழர்கள் தரப்பு சொல்வதைக் கேட்டாக வேண்டும் என்கிற திட்டவட்டமான செய்தியை சுபாஸ்கரன் கொடுத்துள்ளார். இதன்மூலம் பெரும் அரசியல் காய் நகர்த்தல் ஒன்றில் சுபாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி, தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நல்ல திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார்.இதனால் ஈழத் தமிழர்கள், அனைவரும் அவருக்குக் கண்ணீருடன் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

அதன் உச்சமாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கம் சின்னத்தனமாக தமிழ் கைதிகளுக்கு இரண்டு இலட்சம் கொடுத்துள்ளது. ஆனால், லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மிகப்பெரிய அளவில் உதவிகள் செய்துள்ளார். நம் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பெரும் தொழிலதிபராகத் திகழ்கிறார் என்பதில் நாம் பெருமை அடைகிறோம் என்று பேசியுள்ளார்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது

என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நடந்து கொண்ட லைகா நிறுவனர் சுபாஸ்கரனின் செயலைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds