இணையதள தொடர்கள் அமேஸான் போன்ற பெரும் பெரும் நிறுவனங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் என்கிற ஒரே நம்பிக்கையை வைத்தே வெளியிடப்படுகின்றன. மக்களை தியேட்டர்களை விட்டு விரட்ட முற்படும் இது போன்ற தொடர்களில் ஒன்றாக வந்திருப்பது இந்த வதந்தி.

ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான் எட்டு பாகங்கள் கொண்ட வதந்தி இணையத் தொடர் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாதபடி பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக அமைதியாக அழுத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். விசாரணைக்காட்சிகள், துப்பறியும் காட்சிகள் ஆகியனவற்றைவிட மனைவியுடனான ஊடல் கூடல் காட்சிகளில் அவர் நடிப்பு சிறப்பு.

கதையின் நாயகியான சஞ்சனா, இளமையும் அழகும் நிறைந்த அழகி. அப்பாவித்தனமான முகம் வெள்ளந்தியான சிரிப்பு, அன்புக்கு ஏங்கும் ஏக்கம் ஆகியனவற்றைக் கண்களிலேயே காட்டியிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறார் லைலா. அவருடைய உருவத்துக்கேற்ப ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். அவரும் தொடர் நெடுக ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.கணவரை இழந்து இரு பெண்ணுடன் தனியாக வாழும் தாயின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

வெலோனி வழக்கை விசாரிக்க வரும் இன்னொரு காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் விவேக்பிரசன்னா மிக இயல்பாக நடித்து பல இடங்களில் சிரிக்கவைக்கிறார். சில இடங்களில் சிந்திக்க வைக்கிறார்.மனைவிக்கு தோசை சுட்டுப்போடும் காட்சி அழகு.

தொடரில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரம் அழுத்தமானது.அதற்கு நூறு விழுக்காடு பொருத்தமாக இருக்கிறார் நாசர். எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதிவெங்கட் சிறப்பு. கணவரிடம் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் அருமை.

வெலோனியைத் திருமணம் செய்யப்போகும் இளைஞராக நடித்திருக்கும் குமரன் தங்கராஜன், இக்கால இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார். ஹரீஷ்பெராடி, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், அருவி பாலாஜி, திலீப்சுப்பராயன்,குலபுலி லீலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.  

ஒளிப்பதிவு செய்திருக்கும் சரவணன், கதையைக் காட்சி அனுபவமாக மாற்றக் கடுமையாக உழைத்திருக்கிறார். சைமன் கே கிங் இசை தொடரின் தன்மையை உள்வாங்கி உணர்த்தியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். நாகர்கோயில் வட்டார வழக்கு, கிறித்துவர்களிலேயே பணக்காரர்களின் இறப்பு நடைமுறை, ஏழைகள் வீட்டில் இறப்பு நடைமுறை, காவல்துறையில் இருக்கும் அடுக்குகள் அதன் அளவுகோல்கள், குடும்ப உணர்வுகள், வனங்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டதால் பாதிக்கப்படும் வனமக்கள் நிலை உள்ளிட்ட ஏராளமான நுட்பமான விசயங்களைத் திரைக்கதைக்குள் வைத்திருக்கிறார். 

இணையத் தொடர்களுக்கேயுரிய ஆபாச வார்த்தைகளும், அத்துமீறிக்காட்டப்படும் பாலியல் உணர்வுகளும் தொடரில் இருக்கிறது.

குலபுலி லீலாவை வெலோனி பேயாக வந்து மிரட்டுவது உட்பட சிற்சில தவறான வழிநடத்தல்கள் தாண்டி ஓவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதமான உணர்வுகளைக் கடத்துகிறது.

இது போன்ற இணையதொடர்களை தொடர்ச்சியாக ரசித்தப் பார்க்க முடியாத ஒரு இடைவெளி இருக்கிறது. கதைகளும் அழுத்தமாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். வதந்தி அந்த இடைவெளிகளை தாண்டிவிடவில்லை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.