ஒரு பெண் வாடகைக் கார் ஓட்டுநராக பணியாற்ற நேரும்போது அவருடைய கார் பயணிகளால் அவர் எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை த்ரில்லராக புனைந்து சொல்லியிருக்கிறார்கள். ஆண்கள் வாடகைக் கார் ஓட்டுனர்களாக இருக்கும்போதே சிக்கல்கள் க்யூ கட்டி நிற்கின்றன. இதில் பெண் வாடகைக் கார் ஓட்டுநராக இருப்பது இன்னும் ஆபத்துகளை அதிகரித்துவிடுகிறது.

வாடகை கார் ஓட்டுநராக இருக்கும் அப்பா திடீரென கொலையாகி இறந்துவிடுகிறார். அதிர்ச்சியில் அம்மாவும் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். தம்பி வேலை கிடைத்து வெளியூர் சென்றுவிடுகிறான். இந்தச் சூழலில் அப்பா ஓட்டிய வண்டியை ஓட்டத் தொடங்குகிறார் ஜமுனாவாகிய ஐஸ்வர்யாராஜேஷ்.

ஒருநாள் அவருடைய வண்டியில் கூலிப்படையினர் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்துகிறது.கூலிப்படையினர் ஐஸ்வர்யாராஜேஷை பணயக்கைதி போல் பிடிக்கின்றனர். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை ஓரளவு விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம் டிரைவர் ஜமுனா.

மிகப்பாந்தமாக அம்மாவைக் கவனிப்பதும் அதேஅளவு வாஞ்சையுடன் வண்டியைக் கழுவி தயார்ப்படுத்துவது, திருமணத்துக்கு வற்புறுத்தும் அத்தையிடம் தவித்து நிற்பது என அறிமுகக்காட்சிகளிலேயே தன் முத்திரையைப் பதிக்கிறார் ஐஸ்வர்யாராஜேஷ். அதன்பின் ஓடுகிற வண்டிக்குள் நடக்கிற மிகப்பதட்டமான சூழலை அவர் எதிர்கொள்கிற விதமும் சிறப்பு. இளம்பெண்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும் அந்த வேடத்தின் பொறுப்புணர்ந்து நடித்து வரவேற்பைப் பெறுகிறார். ஆனாலும் படம் முழுக்க அவரது பாத்திரம் அழுத்தம் பெறவில்லை. ஆரம்பத்திலேயே அவரைப் பற்றிய கதை சொல்லப்பட்டிருக்கலாம்.

அரசியல்வாதிகளாக வரும் ஆடுகளம் நரேன்,மணிகண்டன் ராஜேஷ், கவிதாபாரதி, இசையமைப்பாளராக நடிக்கும் அபிஷேக், ஐஸ்வர்யாராஜேஷின் அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, அப்பாவாக வரும் பாண்டியன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

கோகுல்பினாயின் ஒளிப்பதிவில் வேகமாக ஓடும் மகிழுந்தைப் போல படமும் வேகமாக ஓடுகிறது. பதட்டமான காட்சிகளில் அவருடைய கோணங்கள் மேலும் பதட்டத்தை ஏற்படுத்துகின்றன.

ஜிப்ரானின் பின்னணி இசை நெடுஞ்சாலை துரத்தல் காட்சிகளில் மட்டுமின்றி அம்மாவுடன் ஐஸ்வர்யாராஜேஷ் உரையாடும் காட்சிகளிலும் உயர்ந்து நிற்கிறது. ஆர்.ராமரின் படத்தொகுப்பு பிற்பாதியைப் போல் முதற்பாதியிலும் இருந்திருக்கவேண்டும்.

அதிகாரம் பணபலம் ஆகியனவற்றால் பாதிக்கப்படுகிற மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் தன் மனவுறுதியை மட்டுமே துணையாகக் கொண்டு போராடி வெற்றி பெறுகிறார் என்கிற கதையை பரபரப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.கின்ஸ்லின். டிரைவராக பெண்கள் பணிபுரிவதில் உள்ள சிக்கல்களையும் கதையின் ஓட்டத்தில் இணைத்திருக்கலாம்.

இறுதிக்காட்சிகளில் நடக்கும் திருப்பங்களும் கடைசி கொஞ்சநேரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படும் இரகசியங்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

திடமான பாத்திரத்தை இயல்பாகச் செய்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருக்கு இன்னும் வலுவாக திரைக்கதையை அமைத்திருக்கலாம் அறிமுக இயக்குனர் கிங்ஸ்லின். அத்தோடு நடிகர்களை நடிக்க வைப்பதிலும் ஒவ்வொரு காட்சியை கையாள்வதிலும் இயக்குனர் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் படம் ஒரு நல்ல த்ரில்லர்கள் வரிசையில் சேர்ந்திருக்கும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds