நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சி க்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.  இருப்பினும் இந்த விவாதங்கள் யாவும் வங்கிகள் தனியார்மயமாக்கப் பட்டால், வங்கிக் கடன்களின் முன்னுரிமை சாமானிய மக்களுக்கானதாக இல்லாமல் பெருமுதலாளிகளுக்கானதாக மாறும் என்பதாகவும், நாட்டின் முதுகெலும்பான “விவசாயத் தொழிலுக்கான முக்கியத்துவம் குறைந்து பெரிய தொழில்களுக்கானதாக மாறும்” என்பதாகவும், உள்நாட்டு தேவைகளுக்கான முன்னுரிமை மறைந்து பன்னாட்டு மூலதனம் முக்கியத்துவம் பெறும் என்பதாகவும் உள்ளன. இவை அனைத்தும் நூறு சதவீதம் உண்மை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மேலும் 2008 ஆம் ஆண்டு உலகில் பல நாடுகளை கடுமையாக பாதித்த பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெரிய அளவில் பாதிக்காமல் இருந்ததற்கு இந்திய பொதுத்துறை வங்கிகளின் வளமான அடித்தளம் மிக முக்கிய காரணம் என்பதும் உண்மையே. எனினும் பெரும்பாலான இத்தகைய விவாதங்களில் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சம் குறித்து நாம் நமது கவனத்தை திருப்பியாக வேண்டும். 

ஒன்று, வங்கிகள் குறுகிய கால கடன்களிலிருந்து விலகியது.
இந்தியாவில் 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கிக் கடன்கள் என்பது பெரும்பாலும் குறுகிய கால தேவைகளுக்கான கடன்களாகவே இருந்தன. அவை தொழில் நிறுவனங்களுக்கான பயன்பாட்டுத் தேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான சரக்குகள் வாங்குவதற்கான கடன்க ளாக இருந்தன.

“அதே நேரம் பெரிய தொழில்கள் துவங்குவதற்கான மூலதனத் தேவைகள் போன்ற நீண்ட கால நிதித் தேவைகளுக்கான கடன்களை வழங்குவதற்கு என்று பிரத்தியேக நிதி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. ஐடிபிஐ போன்ற நிறு வனங்கள் இவ்வாறு துவங்கப்பட்டவைதான். இந்த நிதி நிறுவனங்களுக்கான பண உதவி என்பது அரசு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் லாபத்தில் இருந்து அரசுக்கு கிடைக்கும் நிதியின் மூலம் கொடுக்கப்பட்டு வந்தன. மேலும் இந்த கடன்கள் நாட்டின் ‘தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும்’ பொருட்டு வங்கிகளில் வசூலிக்கப்படும் வட்டியை விட மிகக் குறைவான வட்டி விகிதத்தில் கொடுக்கப்பட்டன.

கடன் கொள்கைகளில் மாற்றம்: 
இந்தியாவில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு இந்த நிலைமைகளில் பெரிய மாறுதல்கள் ஏற்படத் துவங்கின. முதலீடுகளை ஈர்ப்பதற்காக துவங்கப் பட்ட ஐடிபிஐ போன்ற பிரத்தியேக நிதி நிறுவனங்கள் வணிக வங்கிகளாக மாற்றம் பெற்றன. இதனால் ‘மூல தனத் தேவைகளுக்கான நீண்ட கால கடன்களைப் பெறுவதற்கு தொழில் நிறுவனங்கள் சந்தையை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை’ ஏற்பட்டன.

இருப்பினும் உடனடி லாபத்திற்கு உத்தரவாதம் இல்லாத ஆபத்தான இத்தகைய முதலீடுகளுக்கு சந்தையின் மூலம் நிதி திரட்டுவதில் பல சிக்கல்கள் உருவாகின. எனவே அந்நிறுவனங்கள் இத்தகைய மூலதனக் கடன்களுக்காக பொதுத்துறை வங்கிகளை நோக்கித் திரும்பின.  இதில் அரசியல் ரீதியான அழுத்தங்களும் சேர்ந்து உருவானதால் இவற்றை பொதுத்துறை வங்கிகளால் மறுக்க முடியாத நிலை உருவாகி நீண்ட கால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதனக் கடன்களை வணிக வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன.

எரிமலையின் விளிம்பில் வங்கிகள் நிற்கிற நிலைமை:
பொதுவாகவே எந்த ஒரு வங்கியும் கடன் கொடுப்பதற்கான நிதியை பொது மக்களிடம் இருந்து பெறப்படும் வைப்புத் தொகையின் (Deposit) மூலமே உருவாக்கிக் கொள்கிறது. பணத்தை வைப்புத் தொகையாக முதலீடு செய்த நபர் எப்போது திருப்பிக் கேட்டாலும் அடுத்த நொடி அந்த பணத்தை வங்கி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே விதிமுறை.

இந்நிலையில் இவ்வாறு பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் ஒரு பெரிய பங்கு நீண்ட கால கடன்களுக்காக ஒரு வங்கி பயன்படுத்தும் போது, அந்த வங்கியில் இருப்பில் உள்ள பணப்புழக்கம் பெரிய அளவில் குறைகிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரே நேரத்தில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப எடுக்க நினைத்தால் அந்த வங்கி பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் திவால் நிலையை நோக்கிச் செல்லும் ஆபத்து உள்ளது.

நீண்ட காலக் கடன்களால் நிதி முடக்கம்.
மேலும் இத்தகைய நீண்ட காலக் கடன்கள் பெரும்பாலும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காகவே வழங்கப்படுகின்றன. இவ்வாறான பணிகள் மிக நீண்ட காலம் பிடிக்கக்கூடியது என்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே அந்த தொழிலில் இருந்து லாபத்தை எதிர்பார்க்க முடியும். இதனால் குறிப்பிட்ட காலம் வரையிலும் கடன் வாங்கிய நிறு வனங்களால் வங்கிகளுக்கு பணத்தை திருப்பித் தர இயலாது.

இதனால் இவை வராக் கடன்களாக மாற்றம் பெற்று வங்கிகள் மிகப்பெரிய சிக்கல்களுக்கு உள்ளா கின்றன. இவ்வாறு வங்கிகள் தங்களுடைய வாடிக்கை யாளர்கள் கேட்கும் போது பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமலும், கடனாக வழங்கப்பட்ட பெரும் தொகை வராக்கடன்களுக்குள் சிக்கும் அபாயத்தி லும் ஒரு சேர சிக்கித் தவிக்கும் நிலை உருவாகின்றன.

“இதன் மூலம் வங்கிகள் மீண்டும் முதலீட்டு  திட்டங்களுக்கு கடன் கொடுத்து அதிக லாபத்தை அடைய முடியும் என்று நம்பப்பட்டது. ஆனால் இது நடைமுறைக்கு வந்து முதல் பத்தாண்டுகள் நிறைவு பெறுவதற்கு முன்னரே 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா  ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதன் மூலம் வங்கிகள் முதலீட்டு திட்டங்களை நோக்கி தங்கள் வணிகத்தை திருப்பினால் வெகு விரைவிலேயே மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியது.

உலக பொருளாதார வரலாறுகள் கூறும் படிப்பினைகள்: 
இந்தியாவில் தற்போது ஆளுகின்ற அரசாங்கத்தால் பொதுத்துறை வங்கிகள் முன்னெப்போதும் பார்த்திராத வகையில் ‘மிகப்பெரிய அளவிலான சிக்கல்களுக்குள்’ தள்ளிவிடப்படு கின்றன. இதற்குப் பிறகும் பொதுத்துறை வங்கிகள் தாக்குப்பிடித்து நிற்பதற்கு காரணம் இவற்றின் மீது ‘நாட்டின் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக் கையே’ ஆகும்.

இந்நிலையில் இவை தனியார்மய மாக்கப் பட்டால் வங்கிகளின் மீதான அரசின் கட்டுப்பாடு விலகும்.  இதனால் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து வங்கிகளின் இருப்பு மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாகும்.
ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கும் வங்கிகள் நொறுங்கி வீழும்.

இதன்மூலம் ஒட்டுமொத்த வங்கித் துறையின் மீதான நம்பிக்கையின்மை மேலோங்கி மக்கள் கைகளில் இருக்கும் பணம் வங்கிகளுக்கு வராமல் பணப்பதுக்கல்கள் அதிகமாகும். மேலும் இது வங்கிகளை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.

தமிழாக்கம் : க.சிவசங்கர்”
நன்றி. தீக்கதிர் நாளிதழ்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds