தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகாலாந்து மாநிலத்திலிருந்து மாற்றலாகி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்தே பல்வேறு உருட்டுகளை செய்தே வந்திருக்கிறார். இதன் உச்சக்கட்டமாக தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளிநடப்பு செய்து தேசியகீதத்தையே இழிவுபடுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் மீது வன்மம் கொண்ட ஒரு தனிமனிதரின் செயல்பாடாக இவற்றை கொள்ள முடியாது. தமிழக அரசு தந்த உரையை வாசிக்காமல் அதன் பலபகுதிகளை விட்டுவிட்டு சிலவற்றை மாற்றி வாசித்திருக்கிறார். இத்தனைக்கும் இந்த உரையை ஜனவரி 7 ஆம் தேதியே வாசித்து ஒப்புதல் அளித்திருக்கிறார் ஆளுநர். இவற்றை எப்படி புரிந்து கொள்வது.

மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி மாண்பு கொண்ட இந்தியாவின் மீதே காழ்ப்புக் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் ஊழியரின் அடாவடி என்றே புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா, வங்கதேசம் என்ற இருநாடுகளுக்கு தேசியகீதத்தை தந்த பெருமை கவியரசர் தாகூருக்கு உண்டு. ஆனால் அவர் எழுதிய ‘ஜன கனமன’ என்ற பாடலை தேசியகீதமாகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் ஆர்எஸ்எஸ் காரர்கள். இந்து சன்னியாசிகளின் கதையான ஆனந்தமடம் நாவலில் வரும் வந்தே மாதரம் பாடலைத்தான் தேசியகீதமாக்க வேண்டும் என்று அப்பொழுதே ஆர்எஸ்எஸ் மல்லுக்கட்டியது. இப்பொழுதும் அதைத்தான் சொல்லி வருகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலை நிர்வாகி யான பையாஜி ஜோசி என்பவர் 2016ஆம் ஆண்டு தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சி நிறுவனத்தில் பேசும்போது, ஜனகனமன என்பது அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட தேசியகீதம். ஆனால் வந்தே மாதரம் பாடல்தான் உண்மையான தேசிய கீதம் என்று பேசியுள்ளார். இந்த வார்த்தைகளும் ஆர்.என்.ரவியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கக்கூடும்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்கிற வகை யில் ஆர்.என். ரவி ஒரு போதும் நடந்து கொண்டது இல்லை. ஏனென்றால் மொழிவழி மாநிலம் என்ற கோட்பாட்டையே ஏற்காத கும்பலைச் சேர்ந்தவர் இவர்.
இவர்களது குல குருவான கோல்வால்கர் சொல்வதைக் கேளுங்கள். ‘சுயாட்சி உரிமை யுள்ள மொழிவழி மாநிலங்களை அமைப்பது பிராந்திய வாதத்தை வளர்த்து இறுதியில் அபாய கரமான பிரிவுக்கு வழி வகுத்துவிடும். இதற்கு பதில் கிராம, மாவட்ட, வட்டார, பிராந்திய அளவி லான ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களை இணைத்து ‘ஜனபாத’ அமைப்புகளை உருவாக்க வேண்டும். அது இப்போதைய மாநில அரசைவிட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும்’ இது கோல்வால்கருடைய கருத்தோட்டம் மட்டுமல்ல, அவருடைய சிஷ்யகோடியான ஆர்.என்.ரவியின் கருத்தோட்டமும்தான்.

ஆர்எஸ்எஸ்சின் விஷக்கொடுக்குகளில் ஒன்றான ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்யாயா செப்புவதையும் செவிமடுங்கள். ‘இந்தியாவின் மாநில எல்லை களை முற்றாக அழித்துவிட்டு நிர்வாக வசதியை முன்னிறுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஜனபாத அமைப்பை உரு வாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் ஜனபாத அமைப்புகளை ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மொழிவழி மாநிலங்களும், அரசுகளும் அடி யோடும் ஒழிக்கப்பட வேண்டும்.’ தீனதயாள் உபாத்யாயாவிடம் பாடம் கேட்டு விட்டு தமிழ்நாடு என்பதையே தகர்த்துவிட கடப்பாரையோடு வந்திறங்கி கிண்டி மாளிகை யில் முகாமிட்டிருப்பதால்தான் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு என்றாலே ஒவ்வாமையாக இருக்கிறது.

மூவர்ணக் கொடியைக் கூட ஆர்எஸ்எஸ் பரிவாரம் ஏற்றதில்லை.
1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 இல் இந்து மகாசபா ஊழியர் களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் ‘ஓம் மற்றும் ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட காவிக் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியும் இந்துஸ்தானத்தை பிரதிநிதித்துவப்படுத்து வதில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்று வரை அவர்களுக்கு மூவர்ணக்கொடி உவப்பானதாக இருக்கவில்லை. ஹிட்லரின் சின்னம் பொறித்த ஸ்வஸ்திக் கொடியைத்தான் அவர்கள் அடிமனதுக்குள் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவினர் மூச்சுக்கு முன்னூறு முறை தேச பக்தி பற்றி வகுப்பெடுப்பார்கள். ஆனால் விடு தலைப் போராட்டக் காலத்தில் நேபாள இந்து மன்னரை எதிர்காலத்தில் இந்தியாவின் ஏக சக்கரவர்த்தியாக முடி சூட்டி அழகு பார்க்க நினைத்தவர்தான் சாவர்க்கர். சியோடியாக் களின் வாரிசான நேபாள மன்னர்தான் இந்தியாவின் முடிசூட்டும் மன்னராகத் திகழ்ந்த சிறந்த மன்னராக இருக்கிறார் என்று திருவாய் மலர்ந்தி ருக்கிறார். அவர் வேறொரு நாட்டின் மன்னரைக் கூட இந்து என்பதால் இந்த நாட்டின் மன்னராக முடிசூட ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த நேபாளத்திலேயே கம்யூனிஸ்ட்டுகள், முடியாட்சிக்கு முடிவு கட்டி செங்கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாவர்க்கர் களின் வாரிசுகளுக்கு வரலாறு கற்றுத்தரும் பாடமாக இருக்கிறது.

இந்த நாட்டினுடைய அரசியல் சட்டத்தின் மீதும் அவர்களுக்கு மரியாதை இல்லை.
சனாதனத்தின் சாரமாக இருக்கிற மனுஸ்மிருதியை நாட்டினுடைய அரசியல் சட்டமாக மாற்றிவிட அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் கூட சாவர்க்கர் சொல்லிக்கொடுத்தது தான். மனுஸ்மிருதி ‘நம் இந்து தேசத்திற்காக வேதங்களுக்குப் பின்னர் மிகவும் வழிபடத் தக்க திருமறையாக விளங்குகிறது’ என்று அவர் கூறியுள்ளார். மனுஸ்மிருதிதான் இந்து சட்டம் என்பதே சாவர்க்கரின் கருத்து.

ஒரு பெண் இளம் வயதினராக இருந்தாலும் அல்லது வயதானவராக இருந்தாலும் அவளாக சுதந்திரமாக எதுவும் செய்ய முடியாது. தன் சொந்த வீட்டில் கூட செய்ய முடியாது- (அத்தியாயம் 6 ஸ்லோகம் 147) என்று பெண்களை இழிவுபடுத்துகிறது
சூத்திரர்களுக்கு ஒரே ஒரு வேலையைத்தான் கடவுள் பரிந்துரைத்திருக்கிறார். அது என்ன வென்றால் தனக்கு மேலே உள்ள மூன்று சாதியினருக்கும் பணிவுடன் சேவை செய்வது ஒன்றே ஆகும் (அத்தியாயம் 1 ஸ்லோகம் 91) என உழைக்கும் மக்களை ஒடுக்குகிற மனுநீதியைத்தான் சனாதனக் கும்பல் தேசத்தின் அரசியல் சட்டமாக்க முயற்சிக்கிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடு பன்னெடுங்காலமாக பெரும் குரலெடுத்து பேசி வந்திருக்கிறது. இப்போதும் அந்தக் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எங்கேயோ கேட்ட குரலை இங்கு ஆர்.என்.ரவி எதிரொலிக்க முயல்கிறார். ஆளுநர் ரவி மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ள பொங்கல் திருநாள் தேனீர் விருந்துக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் சின்னத்தில் தமிழ்நாடு என்று இருப்பதால் அந்த சின்னத்தையே தவிர்த்திருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆதரங்களு டன் அம்பலப்படுத்திருக்கிறார். ஆளுநர் அனுப்பிய முந்தைய அழைப்பிதழ்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம் பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டை தவிர்ப்ப வரை தமிழ்நாடும் தவிர்க்கும்.

ஆளுநரின் அடாவடி, அராஜக அரசியல் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆளுநரின் மாளிகையை ஜனவரி 20 ஆம்தேதி முற்றுகையிட முடிவெடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு! ஒன்றிய அரசே இவரை திரும்பப் பெறு! என்ற முழக்கம் விண்முட்ட, மண் அதிர கேட்க இருக்கிறது. அன்றைக்கு கவுரவர் சபையில் பாஞ்சாலி துகிலுரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டத்தை யும் அவை மரபுகளையும் இழிவுபடுத்த துணிந்த ஆளுநர் ரவி பாதியிலேயே வெளிநடப்பு செய்தி ருக்கிறார். இது கவுரவர் சபை அல்ல, ஜனநாயகத்தின் சன்னிதானம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்கதிர்
11.1.2023

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds