திரு. சு.வெங்கடேசன் எம்.பி எடுத்த வைத்த விவாதம் நம்மை சிலிர்க்க வைக்கிறது!

மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சு.வெங்கடேசன், CPI(M) சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார்.

இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர்… இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், உலக அறிவினுடைய ஆதாரமாகவும் சமஸ்கிருதத்தை முன்வைத்தார். “இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது?” என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள்.

சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாராவிலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது.

அந்த கல்வெட்டின் காலம் கிபி 1-ம் நூற்றாண்டு.

ஆனால், தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும் தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது.‌ இந்தக் கல்வெட்டின் காலம் கிமு 6-ம் நூற்றாண்டு.

சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

சொல்லுங்கள் எது மூத்த மொழி.?

உங்களை விட 700 ஆண்டு வயதானவர்கள் நாங்கள்.

இதுவரை, இந்தியாவிலே கிமு 6-ம் நூற்றாண்டில் தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரை 60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஆனால், சமஸ்கிருதக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டும் தான் என்பதை இந்த அவையிலே எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

இங்கே மீண்டும் மீண்டும் பலர் சொல்கிறார்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று! அது அவர்களின் நம்பிக்கை. நான் அதில் குறுக்கிடவில்லை, ஆனால் மிக முக்கியமாக இங்கே நாங்கள் சொல்லுவது தமிழ் தேவபாஷை அல்ல! இது மக்களின் மொழி என்பதுதான் எங்களின் பெருமை.

ஏன் தெரியுமா?

ஒரு பெண்ணாவது சமஸ்கிருதப் புலவராக உதயமாகி இருக்கிறாரா?

ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல, இருவரல்ல 40-க்கும் மேற்பட்ட பெண் புலவர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்.!

சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் மக்களின் புழங்கு மொழியாக இருந்ததில்லை. அது சடங்கியல் மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல.

அறியப்பட்ட வரலாற்றின்படி, மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களின் மொழியாக இருக்கிறது.

இன்றைக்கும் இலங்கையில், சிங்கப்பூரில், மலேசியாவில், மொரீசியஸில், கனடாவில் அரசினுடைய மொழியாக இருக்கிறது.

பூவுலகம் முழுக்க இருக்கிற பல நாடுகளில் இருக்கிற 10 கோடி தமிழர்களுடைய பாஷை என்று நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அதே போல தமிழினுடைய பெருமை அது ஒரு சமயச் சார்பற்ற மொழி. கீழடியில் 16,000 பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு பொருள் கூட பெரும் மதங்களும் மத நிறுவனம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ளன. கிமு 6-ம் நூற்றாண்டில் பெரும் மதங்களும் பெரும் மதங்களுடைய கடவுள்களும் உருவாவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழியாக தமிழ் இருந்தது.

அதே போல நம்முடைய நாடாளுமன்ற அமைச்சர் தலையிட்டு ‌இந்த விவாதத்தை சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் நடக்கின்ற ஒரு போட்டியாக, யுத்தமாக மாற்றாதீர்கள் என்று சொன்னார்.

நிச்சயம் நாங்கள் அப்படி மாற்ற விரும்பவில்லை.

எங்களை விட 700 வருடம் இளைய ஒரு மொழிக்கு எதிராக நாங்கள் ஏன் சண்டை போடப்போகிறோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால் சமஸ்கிருதம் தான் இந்திய பண்பாட்டின், அறிவின் அடையாளமாக, நீங்கள் மீண்டும் மீண்டும் முன்வைத்தால் அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாக இருக்கும்.

நன்றி : தி இந்து.
Via: Naanjil Peter

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds