தமிழ் நாடகக் கலையின் முன்னோடி விஸ்வநாத தாஸ் 1886ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் நாள் பிறந்தார்.

குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார்.

“கதர்கப்பல் தோணுதே’, “கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். “வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா…. அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.

இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனைப் பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடித்தவர்.

இவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என காரணம் காட்டி பெண்கள் இவருடன் இணைந்து நடிக்க மறுத்தபோது தோழர் ஜானகியம்மாள் இணைந்து நடித்தார்.

1940 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் நாள், தனது 54ஆவது வயதில், முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

சுதந்திர போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் – நூலகம் அமைத்துள்ளது. இங்கு தியாகி விஸ்வநாததாஸின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

..பெரணமல்லூர் சேகரன்

(டிசம்பர் 31: தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு நாள்)

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds