அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும்
 
இந்த ஆண்டின் முதல் வார பந்தயத்தில் இடம்பெற்ற திரைப்படமாக வெளியாகியிருக்கிறது வி3. கடந்த ஆண்டின் இறுதியில் எப்படி பெண் திரைக்கலைஞர்களை முன்னணி கதாபாத்திரமாகக் கொண்டு 4 திரைப்படங்கள் வெளிவந்து ஆச்சர்யம் தந்தனவோ அதேபோல் இந்த ஆண்டின் ஆட்டத்தை ஒரு பெண் திரைக்கலைஞரின் திரைப்படமே தொடக்கி வைத்திருப்பது தமிழ் சினிமாவிற்கான நம்பிக்கையை தருகிறது.

நடிகர்கள் வரலட்சுமி, ஆடுகளம் நரேன், எஸ்தர் அனில், பாவனா கெளடா என மிகச்சிறிய நடிகர்களைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அமுதவானன் இயக்கியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு என்ன எனும் கோணத்தை பேசுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் திட்டமிட்ட இலக்கை அடைந்ததா?

இரவு வீடு திரும்பும்போது 5 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்படுகிறார் இளம்பெண் பாவனா. அதற்கு காரணமானவர்களை கைது செய்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்கிறது காவல்துறை. அந்த என்கவுண்டர் போலியானது என்றும், அதில் இறந்தவர்கள் அப்பாவிகள் என்றும் புகார் எழ அதனை விசாரிக்க நியமிக்கப்படுகிறார் வரலட்சுமி. அவர் இந்த வழக்கை தீர்த்தாரா? உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனரா? என்பதே வி3 திரைப்படத்தின் கதை.

படம் சொல்ல வந்த செய்தி நல்லது. ஆனால் அது சொல்ல வேண்டிய வகையில் சொல்லப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். படத்திற்கு ஓரளவு நம்பிக்கை தரும் வகையில் தங்களது நடிப்பை வழங்கியுள்ளனர் வரலட்சுமியும், ஆடுகளம் நரேனும், த்ரிஷ்யம் புகழ் எஸ்தர் அனிலும்.

காவல்துறை உயர் அதிகாரியாக வருபவர்கள் தொடங்கி சாதாரண காவலராக வருபவர் வரை ஒரு மாதிரி நடந்து கொள்கின்றனர். அரசியல்வாதிக்கான கதாபாத்திரங்களுக்காகவாவது நடிகரை தேர்வு செய்வதில் எதற்கு இயக்குநருக்கு தயக்கம்? முதல்வராக நடித்துள்ளவர் வசனங்களை ஒப்புவிக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக வருபவர் அதற்குண்டான எந்த அறிகுறிகளின்றியும் நடந்து கொள்கிறார். இப்படி படம் முழுக்க நிறைய குறைகள் இருக்கின்றன.

த்ரில்லர் கதைகளுக்கு பார்வையாளர்களை கட்டி வைப்பதில் இருக்கிறது திரைக்கதையின் வெற்றி. ஆனால் திரைக்கதையில் செலுத்த வேண்டிய கவனம் எல்லாமும் வசனங்களை புரட்சிகரமாக தெரிவிப்பதிலேயே உள்ளதால் படம் தவித்து நிற்கிறது. அரசியல் அழுத்தம் காரணமாக நடக்கும் என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வட இந்தியப் பத்திரிகையாளரிடம் தமிழ்நாட்டில் சாதி குறிப்பிடப்படுவதில்லை என பேசுகிறார். எதற்காக அதை அங்கே பேசுகிறார் என்பது புரியவில்லை. சாதி வேண்டாம் எனத் தெரிவிக்கும் அரசியல்வாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனரா என தெரிவிக்க வருகிறாரா என்பதெல்லாம் இனிவரும் பேட்டிகளில் அவர்தான் விளக்க வேண்டும்.

இறுதியில் இறந்ததாகக் கருதப்படும் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன நடக்கிறது என இயக்குநருக்காவது புரிகிறதா என கேட்கத் தோன்றுகிறது. விசாரணை அமைப்புகள் எதற்காக அமைக்கப்படுகின்றன? அதன் அதிகார வரம்புகள் என்ன? அவை குறிப்பிட்ட பிரச்னையை எப்படி மட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன? என்பதை நேற்று அரசியல் கற்றுக் கொள்ள வருபவர்களிடம் கேட்டிருந்தால் கூட இயக்குநருக்கு இதுகுறித்து புரிதல் வந்திருக்கலாம். விசாரணை அமைப்பு ஆளும் முதல்வரையும், சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்ய பரிந்துரைக்கிறது. இதெல்லாம் எங்கே நடந்திருக்கிறது?

பாலியல் குற்றங்களுக்கு நிரந்தரத் தீர்வாக இயக்குநர் முன்வைக்கும் யோசனைகள் என்னவென்றால் பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும், பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். பாலியல் கல்வியை கட்டாயமாக்குவது வரவேற்க வேண்டிய ஒன்று. பாலியல் தொழிலை கட்டாயமாக்கினால் எப்படி பாலியல் குற்றங்கள் ஒழியும்? ஒரு குற்றத்தை சட்டப்பூர்வமாக்கினால் அது எப்படி புனிதமாகும்? பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள் பெண்கள் இல்லையா? அவர்கள் சுரண்டப்படுவது குற்றமாகாதா?

ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து பேசினால் மட்டும் அது அரசியல் படமாகாது. அது எந்தவகையில் பேசப்பட்டுள்ளது என்பதில் அடங்கியிருக்கிறது படத்தின் அரசியல். அம்பேத்கர் நகர் இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் என்பதான காட்சிகள் எல்லாம் பேச வந்த அரசியலுக்கே முரணான விஷயங்கள். கருத்து சொல்லிவிட மெனக்கெட்டுள்ளார் இயக்குநர்.

ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து பேசினால் மட்டும் அது அரசியல் படமாகாது. அது எந்தவகையில் பேசப்பட்டுள்ளது என்பதில் அடங்கியிருக்கிறது படத்தின் அரசியல். அம்பேத்கர் நகர் இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையானவர்கள் என்பதான காட்சிகள் எல்லாம் பேச வந்த அரசியலுக்கே முரணான விஷயங்கள். கருத்து சொல்லிவிட மெனக்கெட்டுள்ளார் இயக்குநர். 

ஒரு சில இடங்களில் பாராட்டப்பட வேண்டிய காட்சிகள் உள்ளன. குறிப்பாக இந்து இஸ்லாமியர் பிரச்னை உருவாக்கப்படுவதற்கான பின்னணி, பாலியல் குற்றங்களுக்கு எது நிரந்தரத் தீர்வு என விவாதிப்பதற்காக திரைப்படத்தை பாராட்டலாம்.

அரசியல் போதாமைகளாலும், தெளிவில்லாத திரைக்கதையாலும் தடுமாறி நிற்கிறது வி3.

–நன்றி. கி.ராம்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.