வரலாற்றில் மறைக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட பெண். அவர் இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்ரிபாய் பூலே. இவர் தான் இந்தியாவின் முதல் ஆசிரியையும் ஆவார்.
 
ஆனால், வழக்கம் போல் இந்திய வரலாறு தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டது. நமக்குச் சொல்லித் தந்த பெண்ணியவாதிகள் வரிசையில் சாவித்ரி பாயின் பெயர் மறைக்கப் பட்டது மிகப் பெரிய துரோகம்.
இவரைப் பற்றியும் இவரின் சமூகப் பணி பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
சாவித்ரிபாய் 1831-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் மஹாராஷ்டிராவில், நய்கொன் என்ற ஊரில் பிறந்தார். தனது 9-ஆவது வயதில் மகாத்மா ஜோதிராவ் பூலேவின் துணைவி ஆனார். கணவர் தான் அவரின் அடிப்படைக் கல்வி ஆசிரியர். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த இவர், ஆசிரியை ஆனார்.
 
பெண்களுக்கான முதல் பள்ளியை 1848-ல் துவங்கினார். பெண்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்கப் பாடுபட்டார். இந்தச் சமூகத்தில் கைவிடப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்வி வழங்குதல் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் அந்த 19 ஆம் நூற்றாண்டில்.
 
ஒவ்வொரு நாளும் ஆசிரியர் பணிக்காகச் செல்லும் வழியில், அவர் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் என்பதால், ஆதிக்க சாதி ஆண்களால் கற்களாலும், சாணியாலும், அழுகிய பொருட்களாலும், கழிவுகளாலும் தாக்கப்பட்டார். தன் கணவரிடம் இதைப் பற்றி முறையிடவே, அவர் பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு புதிய ஆடையை கையில் எடுத்து பள்ளிக்குச் சென்று மாற்றி, பள்ளி முடிந்தவுடன் மீண்டும் பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப் பட்டார்.
 
கல்விக்காக மட்டுமில்லாமல் இந்தியாவின் முதல் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் பூலேயைச் சொல்லலாம். 1860-ல் விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்று மொட்டை அடிக்கும் தொழிலில் இருந்தவர்களிடம் பேசி இந்தப் பழக்கத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடத்தினார்.
 
‘சத்ய சோதக் சமாஜ்‘ அமைப்பில் மகளிர் பிரிவு தலைவராக டிசம்பர் 25 – 1873 -ல் பொறுப் பேற்றார். புரோகிதர் இல்லாத் திருமணத்தை வலியுறுத்தி புரோகிதர் இல்லாமல் திருமணத்தை நடத்தியும் காட்டினார்.
 
கணவனை இழந்த இளம்பெண்கள் மேட்டுக்குடி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலங்களில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. இந்தப் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகும் பெண்கள் கருவுறும் போது வெளியே தெரிய வந்தால் என்னவாகும் எனப் பயந்து தற்கொலைகள் செய்வது வழக்கமாக இருந்தது. இதே போல் மேல்சாதி ஆண்களால் பாதிக்கப்பட்ட ஒரு பார்ப்பன பெண்ணைத் தற்கொலையில் இருந்து காப்பாற்றி அந்தப் பெண்ணின் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தைக்கு ‘யஷ்வந்த்’ என்று பெயரிட்டார்.
 
பார்ப்பன ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்பு, கடும் பொருளாதார சவால்களையும் மீறி கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப் பட்டவர்களுக்காகவே இல்லம் நடத்துவதை இந்தத் தம்பதிகள் தங்கள் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டனர்.
 
1870 இல் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் ஏராளமான குழந்தைகள் அனாதை ஆயினர். அவர்களுக்காகவே 52 உறைவிடப் பள்ளிகளை பூலே தம்பதியினர் மிகப் பெரிய சமூக, பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் தொடங்கினர்.
 
ஜோதிராவ் பூலே 1890 இல் இறந்த போது கட்டுப்பாடுகளை மீறித் தன் கணவனின் உடலுக்குத் தானே தீ மூட்டினார். 1893 ஆம் ஆண்டு சாஸ்வத் என்ற இடத்தில் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 1896 இல் பஞ்ச நிவாரணப் பணிக்கு பிரிட்டிஷ் அரசை நிர்பந்தித்து வெற்றியும் கண்டார்…
 
இந்தியாவின் தலைசிறந்த சமூக வழிகாட்டிகளில் சாவித்ரிபாய் பூலேவும் முக்கியமான ஒருவர்.
 
🎊 வாழ்த்துகளுடன்….
பெரியார் அம்பேத்கர் கண்ணன் C

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds