மகாராஷ்டிர மாநில அரசின் மின்வாரியத்தின் கீழ் மாநில மின்விநியோக கம்பெனி லிமிடெட், மின்சார உற்பத்தி கம்பெனி லிமிடெட் மற்றும் மாநில மின் தொகுப்பு கம்பெனி லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 86 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
அனைத்து இந்திய பொதுத்துறைகளையும் தனியாரிடம் விற்று வருவது போல, மாநில அரசின் துறைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் விற்க முடிவு செய்துள்ளது இந்திய அரசு. அதன் முதல் கட்டமாக மாநில அரசுத் துறைகளில் முழு நேர பணியாளர்களை சேர்க்காமல், ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை ஒப்படைத்து அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அதே வேலையை செய்து கொள்கிறார்கள்.
அதோ போன்ற ஒரு நடவடிக்கையாக மகாராஷ்டிர அரசு மாநில மின் விநியோக உரிமையை தனியாருக்கு விற்க டெண்டர் கோரியுள்ளது. அதானியின் அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனத்துடன் பெரும்பான்மையான வட்டங்களின் விநியோக உரிமைக்கும், டொரண்ட் பவர் நிறுவனமும், டாடா பவர் நிறுவனமும் மகாராஷ்டிராவின் வேறு சில மின்விநியோக வட்டங்களுக்கான உரிமங்களை பெறுவதற்காகவும் விண்ணப்பித்துள்ளன. ஏற்கெனவே அமலில் உள்ள மின்சாரச் சட்டம் 2003ன் பிரிவு 14ன்கீழ் இடம்பெற்றுள்ள விதியின் அடிப்படையில் மகாராஷ்டிராவின் பிரதான மின்விநியோக வட்டத்தின் உரிமத்தை அதானி நிறுவனத்திடம் அளிப்பதாக, ஏக்நாத் ஷிண்டே பாஜக அரசு தனது முடிவுக்கு நியாயம் கற்பித்துள்ளது.
தற்சமயம் நவி மும்பையில் உள்ள பந்தப் எனும் மின் வட்டத்தின் மின்விநியோகத்தை அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் அதானி டிரான்ஸ்மிசன் லிமிடெட் எனும் அதானியின் மிகப்பெரும் மின்தொகுப்பு மற்றும் பரிமாற்ற நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். முதற்கட்டமாக பந்தப் மின் வட்டத்திற்கான விநியோக உரிமையை பெற்றுள்ள அதானி எலக்ட்ரிசிட்டி லிமிடெட், தொடர்ச்சியாக மகாராஷ்டிரா வின் முலந்த், தானே, நவி மும்பை, பன்வெல், கார்கர், தலோஜா மற்றும் உரான் ஆகிய மின்சார வட்டங்களில் மின்விநியோகம் செய்வதற்கான உரிமம் கேட்டு மகாராஷ்டிரா மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. மேற்கண்ட மின்வட்டங்கள், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்வாரிய வருவாயில் 50 சதவீதத்தை ஈட்டுபவையாகும். இந்த வருமானம் அப்படியே இனி அரசுக்கு கிடைக்காது. அதானியிடம் போகும்.
மின்வாரியத்தில் பணிபுரியும் 86 ஆயிரம் ஊழியர்களின் வேலையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மின்வாரியத்தை சேர்ந்த 34 தொழிற்சங்கங்களும், பெரிய கம்யூனிச தொழிற்சங்கமான சிஐடியூவின் கீழ் திரண்டு தனியாருக்கு மின்சார வாரியத்தை தருவதை எதிர்த்து, ஜனவரி 4ம் தேதி முதல், 72 மணி நேர தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
மஹாராஷ்டிர அரசு போராடும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றத் துடிக்கிற புதிய மின்சார திருத்த சட்ட மசோதா 2022, இந்திய மின்சாரத் துறையை முழுக்க முழுக்க அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு வழி செய்யப் போகிறது.
அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் நஷ்டத்தை கணக்கு காட்டி மின்சாரத் துறை அதானியிடமும் டாடாவிடமும் கொடுக்கப்படும். அதற்குப் பின் மின்சாரத்திற்கென்று மாதாமாதம் கட்டணமாக மக்களிடம் பெரும் தொகை உறிஞ்சப்படும். தமிழ்நாட்டின் விடியல் அரசு, ஒன்றிய அரசு சட்டம் போட்டுவிட்டது, நாங்கள் என்ன செய்வது என்று கையை பாஜக அரசுப்பக்கம் காட்டிவிட்டு இந்தப் பக்கம் அதானி, டாடாவிடம் மின்சாரத்துறையை விற்றுவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
பாரத் மாதா கீ ஜே.