தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. வெங்கி அத்லூரி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய நடிகர் தனுஷ்,
`எதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் பெற்றோர்களின் வேண்டுதல்கள் உங்களுடைய கைத்தட்டலாக என்னை வந்து சேர்கிறது. இது 90- களில் நடகக்கூடிய ஒரு கதை. இந்தப் படத்துல நடிக்குறப்போதான் ஆசிரியர்களின் வேலை எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது. ஆசிரியர்கள் தான் நம் தலையெழுத்தை மாற்றக் கூடியவர்கள். லாக்டவுன்ல தான் வெங்கி இந்த கதையைச் சொன்னார். நானே அப்போ வேலை இல்லாம மன உளைச்சல்ல இருந்தேன். வர்ற கதையை எப்படியாவது மறுத்துடலாம்னு இருந்தேன். கதையைக் கேட்டதும் எனக்கு பிடிச்சிருச்சு. அவரிடம் எப்போது தேதி வேண்டும் என்று தான் கேட்டேன். இந்தப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.
சமுத்திரக்கனி அண்ணா இல்லாத தமிழ் படத்தையும் பாக்க முடில. தெலுங்கு படத்தையும் பாக்க முடில. `விஐபி படத்தப்போ லைட்டா தினறுவாரு. இப்போ வாத்தி படத்துல 4 பக்க டயலாக்கையும் சரசரன்னு பேசிடறாரு. ஜி.வி. போல்டன் ஃபார்ம்ல இருக்காரு. `படிப்பு பிரசாதம் மாதிரி. அதை பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விக்காதீங்க’ – இதுதான் வாத்தி படத்தின் கதை. பள்ளியில் பெற்றோர்கள் பீஸ் கட்டிருவாங்கன்னு என்று கவனமின்றி சுத்திருக்கேன். என் பிள்ளைகளை படிக்க வைக்குறப்போ தான் அது தெரியுது. எந்த சூழ்நிலை வந்தாலும் படிப்பு மிகவும் அவசியம். எண்ணம் போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள் அது தான் உங்களைக் காப்பாற்றும்.” எனப் பேசிய தனுஷ், `என் வண்டிக்கு பின்னால் என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை நம்பி அனுப்பிவைக்கிறார்கள். அப்படி நீங்கள் செய்யும் போது எனக்கு பயமாக இருக்கிறது.” என்றார்.
மொத்தம் 5 பாடல்கள் வாத்தி பட ஆல்பத்தில் உள்ளன. வா வாத்தி எனத் தொடங்கும் பாடலை தனுஷ் எழுத, ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். நாடோடி மன்னன் என்ற பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இதனை அந்தோனி தாசன் பாடியுள்ளார். இதைத் தவிர்த்து கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. தனுஷின் திருச்சிற்றம்பலம், வேலையில்லா பட்டதாரி வரிசையில் குடும்ப உணர்வுகளைப் பின்னியிருப்பதாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.