அயோத்தி என்கிற தலைப்பைக் கேட்டதும் “ஏதோ பிரச்சனையைக் கிளப்புறாங்கப்பா..!” என்றுதான் தோன்றியது. ஆனால் படம் பார்த்து முடியும்போது கண்களில் துளிர்த்துக் கிளம்பிய கண்ணீர் அப்படியான எண்ணத்தைத் துடைத்தே இறங்கியது.
அயோத்தியில் ஆரம்பிக்கிற கதை. அங்கே மத நம்பிக்கை மற்றும் ஆண் ஆதிக்கத்தில் ஊறிப்போன பல்ராம் (யஷ்பால் சர்மா) தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அன்பே உருவான அவரது மனைவி ‘இம்’மென்றால் அடி, ஏனென்றால் ‘இடி’ என்றே ஷர்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.
கல்லூரிக்குப் போகக்கூடாது என்கிற அவரது கட்டளையை மீறி கல்லூரியில் சேர்ந்த குற்ற (!) த்துக்காக மகளின் கல்லூரிக் கட்டணத்துக்கான கடைசி நாளிலும், “கட்டும் போதுதான் கட்டுவேன்…” என்கிற பிடிவாதத்துடன் இருக்கும் யஷ்பால் ஷர்மாவால் எந்த நிம்மதியையும் அனுபவிக்காமல் வாழ்ந்து வருகின்றனர் அவரது மனைவி ஜான்கி (அஞ்சு அஸ்ரானி), மகள் ஷிவானி (பிரீத்தி அஸ்ரானி) மற்றும் மகன் சோனு (அத்வைத்).
அப்படியே கட் செய்து இந்தியாவின் தென்கோடிக்கு வந்தால் ராமேஸ்வரத்தில் மீனவ குப்பத்தில் வைத்து சிலரை துரத்தித் துரத்தி அவர்களின் முதுகில் நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார் நாயகன் சசிகுமார்.
இந்நிலையில் யஷ்பால் சர்மா தன் குடும்பத்தினருடன் புண்ணிய யாத்திரையாக தீபாவளி அன்று ராமேஸ்வரம் வருகிறார்.
அப்போதே புரிகிறது கதை எப்படி போகும் என்று. ‘இவ்வளவு மதக் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்த பிரீத்திக்கும் மீனவர் குப்பத்தில் சண்டை போடும் சசிகுமாருக்கும் காதல் வரும். வந்தால் மதவாதம் மற்றும் பழமை வாதத்தில் ஊறிப்போன யஷ்பால் ஷர்மா என்ன செய்வார்’ என்பதுதான் கதையின் போக்காக இருக்கக்கூடும் என்று நம்புகிறோம்.
ஆனால் வணிக ரீதியான சினிமா பார்த்து மசாலாவில் ஊறிப்போன நமது வழமை வாதத்தை சுக்கு நூறாக உடைத்து வேறு ஒரு கதை சொல்கிறார் இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி.
படத்தின் கடைசி காட்சி வரை சசிகுமாருக்கும் ப்ரீத்திக்கும் இடையே எந்தக் காதலோ கத்திரிக்காயோ, புடலங்காயோ இல்லை. இன்னும் கேட்டால் ஒரு கட்டத்தில் அவர் சசிகுமாரை ‘பையா’ (அண்ணா) என்றே அழைக்கிறார்.
அப்படி என்ன கதை? மதுரை வந்து காரில் ராமேஸ்வரம் போகும் வழியில் டிரைவருடன் முரட்டு யஷ்பால் ஷர்மா தகராறு செய்ய, கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் ஷர்மாவின் மனைவி அஞ்சு நினைவிழந்து போக உடனடியாக அவரை மதுரைக்குக் கொண்டு சென்றால்தான் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், காரை ஓட்டிச் சென்ற டிரைவரின் நண்பனான சசிகுமார் நண்பனுக்காக அந்த பொறுப்பை ஏற்கிறார். பெரிய முயற்சியின் முடிவில் அஞ்சுவின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.
மொழி தெரியாத குடும்பத்தினர் பணமும் இல்லாமல் பிணத்தைக் கையில் வைத்துக் கொண்டு படும் அவஸ்தையை காணச் சகியாத சசிகுமார், அவர்கள் பேசும் மொழி தனக்கும் தெரியாத நிலையில் அந்த குடும்பத்துக்கு எப்படி உதவுகிறார் என்பதுதான் கதை – அதுவும் எதையும் புரிந்து கொள்ளாத பழமைவாதியான யஷ்பால் ஷர்மாவை உடன் வைத்துக்கொண்டு…
உயர்ந்த உள்ளமும் பரந்த மனமும் கொண்ட வேடத்துக்கு சசிகுமார் மிகப் பொருத்தமாக இருக்கிறார். தன் கையிலேயே தம்படி காசு இல்லாத நிலையில் ஷர்மா குடும்பத்தினரை ஊருக்கு அனுப்ப ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என்கிற சூழலில்… அத்துடன் விடுமுறை நாளன்று ஏழு சான்றிதழ்கள் அரசு தரப்பில் இருந்து சில மணி நேரங்களுக்குள் பெற்றுத் தர வேண்டும் என்ற அவசியத்தில் அவர் படும்பாடு கல் நெஞ்சங்களையும் கரைத்து விடும்.
சசிகுமார்தான் படத்தின் ஹீரோ என்றாலும் அவரைத் தாண்டி நம்மை ரசிக்க வைக்கிறார் யஷ்பால் ஷர்மா. இந்த வருடத்தின் சிறந்த நடிகர் அல்லது துணை நடிகருக்கான விருதை இவர் பெறவில்லை என்றால் நம் கணிப்பை அல்லது தேர்வுக் கமிட்டியின் தரத்தை நாம் மறு பரிசீலனை செய்து கொள்ளலாம்.
அவருக்கு ஈடான ஒரு நடிப்பை வழங்கி இருக்கிறார் ப்ரீத்தி அஸ்ரானி.
ப்ரீத்தியின் அம்மாவாக வரும் அஞ்சு நிஜத்தில் அவரது அக்காவாம். அப்படியே அம்மா மகள் தோற்றத்தை இருவரும் கொண்டிருப்பது, அந்தக் குடும்பத்தை நிஜக் குடும்பமாகவே நம்மை உணர வைக்கிறது.
அஞ்சுவின் மகனாக வரும் அத்வைதின் நடிப்பும் தேவைக்கு மிகாமல் இருக்கிறது. வசனம் இன்றி பெரும் சோகத்தை மட்டுமே காட்ட வேண்டிய நிலையில் அத்வைதும் இந்த சிறந்த நடிகர் பட்டியலில் இணைகிறார்.
படத்தில் நடிகர் புகழ் இருந்தும் காமெடி இல்லையே என்ற கவலைக்கு இடம் வைக்காத அடர்த்தியுடன் செல்கிறது திரைக்கதை.
பாறையாக இறுகிப்போன யஷ்பால் ஷர்மாவும் கூட கடைசியில், “உன் பெயர் என்னப்பா..?” என்று கேட்கும்போது சசிகுமார் சொல்லும் பதிலில் இந்த மனிதநேயப் படம் பூரணத்துவம் பெறுகிறது.
படம் நெடுக சசிகுமாரை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரிடம் தெரியாத ‘ அடையாளங்கள் ‘ அவரது பெயரைச் சொன்னதும் பளிச்சென்று நம் புலன்களுக்கு எட்டுவதை என்ன சொல்ல..?
உலகத்தின் எந்த மூலைக்கு அனுப்பினாலும் விருதுகளைத் தட்டி வரக்கூடிய இந்தப் படம் எந்த மொழி பேசுபவரிடத்திலும் எடுபடக்கூடிய சாத்தியத்தில் இருக்கிறது.
இதன் அத்தனை பெருமையும் இயக்குனர் மந்திரமூர்த்திக்குதான் சென்று சேர வேண்டும். தமிழுக்கு கிடைத்திருக்கும் பெருமைமிகு பொக்கிஷ இயக்குனர் அவர்.
மெதுவாக நகரும் படத்தில் அந்த இரண்டு மணி நேரம் மந்திரத்தால் கட்டுண்டு கிடப்பது போல் நாம் கிடக்கிறோம் என்றால் அந்த மந்திரத்தை பிரயோகித்த மூர்த்தி, இயக்குனர் மட்டுமே.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையமைப்பில் பாடல்களும் சரி, முக்கியமாக பின்னணி இசை படத்துடன் இரண்டறக் கலந்து ஒலிக்கிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, கதம் சிவாவின் ஒலிப்பதிவு, சான் லோகேஷின் படத்தொகுப்பு என்று அனைத்து அம்சங்களிலும் அவரவர் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தான். அவையும் சரியான இடத்தில் இடம் பெற்று இருக்கின்றன.
படத்தில் இரண்டு இடங்களிலாவது கண்ணீர் துளிர்க்காதவர்கள் மனிதர்களே அல்ல.
படத்தில் குற்றத்தைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் இத்தனை மனித நேயம் மிக்க சசிகுமாருக்கு அப்படி ஒரு கொடூரமான ஆக்ஷன் ஓபனிங் கொடுத்திருக்க வேண்டியது இல்லை. அதேபோல் சசிகுமார் தன் பெயரைச் சொன்னதும் முடிந்திருக்க வேண்டிய படம் தேவை இல்லாமல் இன்னொரு காட்சியாக நீள்வதில் படத்தின் கவித்துவம் குறைகிறது.
கொரிய படம் போல், மலையாளப் படம் போல் தமிழில் படங்கள் வருவதில்லையே என்று ஏங்குபவர்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும். நல்ல படங்கள் தமிழில் வருவதில்லை என்று குற்றம் சொல்பவர்களுக்கு இந்தப் படத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
அயோத்தி – மனிதத்தின் புனிதம்..!
– முகநூலில், வேணுஜி.