மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவினில்

நடிகை ரோகிணி பேசியதாவது…

படம் பார்த்தேன்…
இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகமிக அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு செய்வதை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது இந்தப்படம். இதில் உழைத்த அத்தனை பேரையும் மேடையேற்றி வாழ்த்தும் இந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இப்படி ஒரு கதையை நம்பி தயாரித்த தயாரிப்பாளர், உடன் நின்ற நடிகர் சசிகுமார் இருவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது…

நான் செம்பி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது தான் இந்தப்படமும் ஆரம்பித்தது. கதை கேட்டு நான் நடிக்கவா என்று ரவி சாரிடம் கேட்டேன். ஆனால் சசி சார் நடிக்க போகிறார், அவர் தான் இந்தக்கதைக்கு சரியாக இருப்பார் என்றார். இந்தக்கதைக்கு சசி சாரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. சசி சார் நிஜத்தில் அத்தனை சாந்தமானவர், எல்லோரையும் சமமாக நடத்துபவர். இந்தப்படத்தில் இறுதிக்காட்சியில் அழ வைத்து விட்டார். சசி சாருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் வாழ்த்துகள். மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.

நடிகர் ராஜேஷ் பேசியதாவது…

அயோத்தி படம் என்றவுடன் இது ஏதோ மதம் சம்பந்தமான படமென தப்பாக நினைத்து விட்டேன். எனது நண்பர் ரகுநந்தன் படம் பார்க்க கூப்பிட்டார், போனேன். படம் பார்த்து பிரமித்து விட்டேன். ஹாலிவுட் படம் மாதிரி இருந்தது. எல்லையே இல்லை, ஜாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே முக்கியம் என்பதை தேனில் குழைத்து தந்தது போல் தந்துவிட்டார்கள். நடித்த அனைவரும் அற்புதமாக செய்துள்ளார்கள். சசிகுமார் இறுதிக்காட்சியில் அவர் பெயர் சொல்லும்போது நம்மை கலங்க வைத்து விடுகிறார். என்ன ஒரு அற்புதமான படம். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

நடிகர் சாந்தனு பேசியதாவது…

இந்த விழாவிற்கு அப்பா சார்பில் வந்துள்ளேன். அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை. அப்பா இந்தப்படம் வந்தபோதே என்னை இந்தப்படத்தை பார் என்று சொன்னார். படம் பற்றி புகழ்ந்து வாழ்த்தினார். நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அத்தனை அற்புதமான படைப்பு. வெளியாகி மூன்று நாட்களில் வெற்றி விழா கொண்டாடும் காலத்தில் இது உண்மையான வெற்றி. சசிகுமார் அண்ணா உண்மையில் அந்த பாத்திரத்தோடு ஒன்றி விட்டார். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாத்துகள்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேசியதாவது…

இந்த திரையரங்கு பழைய நினைவுகளை தருகிறது. அண்ணாமலை, பாட்ஷா 25வது வாரம் கோலாகலமாக இங்கு ஓடின. இந்த காலத்தில் 50 நாட்களை கடப்பது அரிதாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது அயோத்தி. இந்த கதையை நம்பி தயாரித்த டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுக்கு ஹேட்ஸ் ஆஃப். இப்படி ஒரு கதையை புதுமுக இயக்குநரை நம்பி எடுப்பது மிகப்பெரிய விசயம். இது ஒரு அற்புதம். இந்தக்கதை ஓடும் என நம்பிய படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். சசிகுமார் பேசிக்கொண்டிருக்கும் போது கதை தான் ஹீரோயிசம் என்றார், அது முழுக்க உண்மை. அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்குவது போல் இயக்கியிருகிறார் மந்திரமூர்த்தி. யஷ்பால் ஆளவந்தானில் நடித்திருந்தார் இதில் பின்னியிருக்கிறார். அந்த சின்னப்பெண் மிரட்டிவிட்டார். மொழி ஒரு தடையாகவே இல்லை. இந்தப்படம் வெற்றிபெற்றதற்கு படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

நடிகர் தமன் பேசியதாவது…

இப்படி ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பளித்த மூர்த்தி சார், ரவி சார், சசிகுமார் சாருக்கு நன்றி. இந்தப்படம் இன்னும் 10 வருடங்கள் கழித்து பார்த்தாலும் அனைவரையும் உருக வைக்கும். இந்தப்படத்திற்கு 50 வது நாள் போதாது, உங்களை 100 வது நாளில் சந்திக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

நடிகை ப்ரீத்தி அஸ்ரானி பேசியதாவது…

உங்கள் பாரட்டுகளுக்கு நன்றி. தமிழில் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு முதல் படத்திலேயே கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். எனக்கு வாய்ப்பளித்த மூர்த்தி சார், ரவீந்திரன் சார், சசிகுமார் சாருக்கு நன்றி. அயோத்தி படம் மனித நேயத்திற்கு மொழி இல்லை என்பதை சொல்கிறது, அனைவரும் அதை பின்பற்றுவோம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் யஷ்பால் சர்மா பேசியதாவது…

நீங்கள் காட்டும் அன்பும், பாராட்டுகளும் விருதை விட மிகப்பெரிது. என்னை இந்தப்படத்தில் நடிக்க வைத்த இயக்குநருக்கு பெரிய நன்றி. சசிகுமார் நாங்கள் வெகு நட்போடு இருந்தோம், அவருக்கு என் நன்றி. கோவிட் காலத்தில் பல இடைஞ்சலுக்கு மத்தியில் இந்தப்படத்தை எடுத்தார்கள். நான் நடித்ததில் மிகச்சிறந்த படம். அனைவருக்கும் என் நன்றி.

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பேசியதாவது…

படத்தை பற்றி அனைவரும் புகழ்ந்து விட்டார்கள். படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இன்னும் இது போல் படங்கள் செய்ய இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது, அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது…

இந்தப்படம் ரிலீஸான பிறகு எல்லோரும் சொன்னது: இந்தப்படம் சரியான சமயத்தில் சரியான கருத்துடன் வந்திருக்கிறது என்றார்கள் அது என் மூலம் நடந்திருக்கிறது, அவ்வளவு தான். அதற்கு இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி. என் அப்பா அம்மாவுக்கு நன்றி. வீட்டுக்கு இதுவரை 1 ரூபாய் தந்ததில்லை ஆனால் என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் ஆதரித்த பெற்றோருக்கு நன்றி. என் குரு பாலாஜி அருள் சார், அவர் இப்போது உயிரோடில்லை. அவருக்கு நன்றி. சசி சார் ஒத்துக்கொண்டிருக்காவிட்டால் இந்தப்படம் நடந்திருக்காது. தனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், ஒதுங்கி நின்று நடித்தார். வேறு எந்த நடிகரும் செய்திருக்க மாட்டார்கள். சசி அண்ணாவிற்கு நன்றி. யஷ்பால், பிரீத்தி அற்புதமாக நடித்தார்கள். இசையமைப்பாளர் ரகுநந்தனை படுத்தி எடுத்து விட்டேன். இப்படத்தில் அனைவரும் தங்கள் படமாக உழைத்தார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இறுதியாக இந்தப்படத்தை நான் எடுக்கிறேன் என்று எனக்கு ஊக்கமளித்த ரவீந்தரன் சாருக்கு நன்றி.

இயக்குநர்-நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துகொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்து விடுவோம், அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப்படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார். ஒரு படம் 10 வருடம் 20 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப்படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும். இந்தப்படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது நீங்கள் பாருங்கள் தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம் என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன். இந்தப்படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது அது தான் உண்மையான வெற்றி. இந்தப்படத்தை இந்தியில் அப்படியே வெளியிட வேண்டும். அங்கும் இது ஜெயிக்கும். மந்திரமூர்த்தி முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து விட்டான். சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன். யாஷ்பால் சர்மா, ப்ரீத்தி நடிப்பு அற்புதம். இன்னும் இந்தப்படம் ஓடும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர்-இயக்குநர் சசிகுமார் பேசியதாவது…

இந்தப்படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் ரவீந்திரன் சார் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார். படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப்படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது. இந்தப்படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன். மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாப்பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார், ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள். ரஜினி சார் போன் செய்து பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.