சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர்.
சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி.

வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பை சென்னையில் வந்து முடித்தவர் வேலைக்குச் செல்லாமல் திரை வாய்ப்புகளைத் தேடி ஓடியிருக்கிறார்.

எங்கெங்கே புதுப் படங்களில் நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை என்கிற விளம்பரம் கண்டாலும் நேரில் சென்று ஒவ்வொரு தேர்விலும் கலந்து கொண்டுள்ளார்.

அப்படி வாய்ப்பு கிடைத்து முதலில் நடித்த படம் தான் ‘நாட் ரீச்சபிள்’. அப்படிக் கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் ‘மிடில் கிளாஸ் ‘பட வாய்ப்பு.
அடுத்து ‘துச்சாதனன் ‘ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இப்போது கோபி, ஈரோடு பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து சூரி நாயகனாக ஹாட்ஸ்டாருக்காக அருண் தயாரிக்கவுள்ள படத்திற்குக் கதை-திரைக்கதை எழுதியுள்ள வெற்றிவீரன் மகாலிங்கம் தயாரித்து இயக்கும் புதிய படத்திலும் கதைநாயகியாகத் தேர்வாகியுள்ளார்.
இவை தவிர புதிய இரண்டு தெலுங்குப் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் பட வாய்ப்புகளைப் பெற்றது குறித்து சாய் ரோஹிணி பேசும்போது,

“சினிமாவில் எனக்கு என்று தெரிந்தவர் யாருமில்லை. எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது.
எனக்கு சினிமாவின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது . பெற்றவர்களின் விருப்பத்திற்காக நர்சிங் படித்தேன். ஆனாலும் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்புகளைத் தேடினேன் . புதுமுகங்கள் தேவை என்கிற தகவல் கேள்விப்பட்டதும் அங்கு சென்று நான் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வேன். அப்படித்தான் எனக்குப் படவாய்ப்புகள் வந்தன;
வந்து கொண்டிருக்கின்றன. யாருடைய சிபாரிசும் எனக்குக் கிடைத்ததில்லை. நம்முடைய தோற்றத்திற்கும் நடிப்புத் திறமைக்கும் வாய்ப்பு வந்தால் போதும் என்று நான் நினைப்பேன். அதன்படி தான் இப்போது வாய்ப்புகள் வந்துள்ளன. அது மட்டும் அல்லாமல் என்னை நம்பி, தரப்படும் வாய்ப்புகளில் சரியாகப் பிரகாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவேன்” என்கிறார்.

நடித்து இரண்டு படங்கள் வெளியான நிலையில் நடிகர் விஜய் சேதுபதி எடுத்த 2023 தி ஆர்ட்டிஸ்ட் என்ற காலண்டர் போட்டோ ஷூட்டில் இவர் கலந்து கொண்டுள்ளார். அதில் கலந்து கொண்ட ஒரே பெண் இவர்தான். அந்த அனுபவம் பற்றிக் கூறும் போது,

”அந்தக் காலண்டர் ஷூட்டில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஓவியக் கலைஞர்களுக்காக அந்தக் காலண்டரை அவர் உருவாக்கி அர்ப்பணித்து இருந்தார். அதில் 12 மாதங்களுக்கும் 12 கருத்துக்கான தோற்றங்களில் அவர் வருவார் .நான் இரண்டு மாதங்களுக்கு அதில் நடித்திருக்கிறேன். அவருடன் அந்தப் படப்பிடிப்பில் ஆண்கள் நிறைய பேர் நடித்தார்கள். ஆனால்,நடித்த ஒரே பெண் என்ற வகையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர் எப்பொழுதும் தன்னுடன் அருகில் இருப்பவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்.

அந்தப் படப்பிடிப்பு ஒரு நாள்தான் நடைபெற்றது.
ஒரு குறுகிய இடத்தில் நெருக்கடியான சூழலில் அந்தப் படப்பிடிப்பு நடந்த போதும் கூட எங்களை சௌகரியமாகப் பார்த்துக் கொண்டார்.
படப்பிடிப்பு நடந்த போதும் நடத்தி முடிக்கப்பட்ட போதும் அவரைப் பற்றி என் மனதில் இருந்த ஒரே எண்ணம் அவர் ஒரு ஜென்டில்மேன் என்பதுதான்”என்கிறார்.

திரை நுழைவு செய்பவர்கள் தன்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்; தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இவருக்கு உடன்பாடு உண்டு. அதனால் தான் இவர் ‘சோலைமலை இளவரசி’ என்கிற ஒரு போட்டோ ஷூட் எடுத்து தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

அமரர் கல்கி எழுதிய ஒரு கதை தான் இந்த சோலைமலை இளவரசி. இந்தக் கதையில் ஒரு மலைப்பிரதேசப் பெண் மீது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு வீரன் காதல் கொள்வான். அவளும் அவனை விரும்புவாள். அவள் தன்னை அந்தச் சோலை மலையை ஆளும் ஒரு இளவரசியாக பாவித்துக் கொண்டு அந்தக் கனவுலகில் வாழ்கிறாள்.அந்த ஆசையாகவே மாறி விடுவாள். வந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விடைபெற்றுப் போர்முனைக்குச் செல்கிறான் வீரன். அவன் திரும்பி வரும்போது அவள் வேறு ஒரு மனநிலையில் இருப்பாள். இவள் தனக்கானவள் இல்லையோ என்ற எண்ணத்தில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இப்படி அந்தச் கதை செல்லும் .இப்படிப்பட்ட பாத்திரத்தை நான் நடித்து போட்டோ ஷூட் ஆக உருவாக்கி இருக்கிறேன். அந்தப் படங்களில் பல்வேறு தோற்றங்களில் தோன்றி பல்வேறு மனநிலைகளை முகபாவங்களில் உடல் மொழிகளில் வெளிப்படுத்தியிருப்பேன்.
அதில் “பொன்னியின் செல்வன்” படத்தில் வரும் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் குந்தவை போல் தோற்றத்தில் ஒற்றுமை இருப்பதைக் காணலாம்.
அதற்கான பின்புலத் தயாரிப்புகளுக்கும் ஒப்பனைகளுக்கும் என நிறைய உழைத்தோம்.
இது விரைவில் வெளிவர உள்ளது. இதை வீடியோவாகவும் எடுத்துள்ளோம். இப்படி ஒவ்வொருவரும் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் .எனவே தான் இந்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டேன்.
அதைப் பார்ப்பவர்கள் யார் இந்தப் பெண்? என்று என்னை விசாரிக்கும் அளவிற்கு அதில் திறமை காட்டி உள்ளேன். கிரீஷ் என்பவர் அதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படி ஒரு போட்டோ ஷூட் எடுத்து, தன்னை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நான் ஒருத்தியாகத்தான் இருப்பேன்” என்கிறார்”

கலைதான் மனிதனை உயரத்திற்கு இட்டுச் செல்லும். தன் கனவுகளை மட்டுமல்ல, போராட்டங்களையும் வெல்ல சினிமா தான் தனக்குத் தெரிந்த ஒரே விடியல் என்று நம்புகிறார் சாய் ரோஹிணி.இவரது கனவுகள் மெய்ப்பட வாழ்த்தலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.