ஆதித்த கரிகாலன் மீது கொலைவெறியில் இருக்கும் நந்தினி, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று ஐயம்கொள்ளும் நிலையிலுள்ள பொன்னியின்செல்வன் மற்றும் வந்தியத்தேவன், அதிர்ந்து நிற்கும் குந்தவை ஆகியனவற்றோடு நிறைவு பெற்றது முதல்பாகம்.
இரண்டாம் பாகத்தில் பொன்னியின்செல்வன் உயிரோடு வருகிறார், அவருக்கு முடிசூட்டப்பட்டதா? ஆதித்தகரிகாலன் உயிர் தப்பினாரா? குந்தவை மற்றும் வந்தியத்தேவன் நிலை என்ன? என்பது பற்றியெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கடலில் சிக்கிய வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் ஆகிய இருவரையும் ஊமை ராணி காப்பாற்றுகிறார். இதை அறிந்து கொண்ட நந்தினி பாண்டியர்களோடு சேர்ந்து கொண்டு சதி செய்து சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் ஆகியோரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை அறிந்து கொண்ட வந்தியத்தேவன் விஷயத்தை சோழர்களிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து இந்த கொலை சதியில் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்? இறுதியில் மன்னராக யார் முடி சூடியது? என்பதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் மீதி கதை.
படம் தொடங்கும்போதே விக்ரம் – ஐஸ்வர்யாராய் காதல் காட்சிகளுடன் தொடங்குகிறது. உயிருக்கே ஆபத்து எனத் தெரிந்தும் துணிவுடன் ஐஸ்வர்யாராயை விக்ரம் சந்திக்கும் காட்சி, காதல் கோபம்,வீரம், ஆற்றாமை உள்ளிட்ட பல உணர்வுகளைக் கடத்துகிற காட்சி. அந்தக்காட்சியில் தானொரு நடிப்பு ராட்சசன் என்பதை நிரூபிக்கிறார் விக்ரம். கடும் கோபக்காரனாகவும், பாசமிகு அண்ணனாகவும், நெகிழும் காதலனாகவும் தன்னுடைய நடிப்பை பல விதங்களில் சிறப்பாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார்.
வந்தியத்தேவன்-கார்த்தி, குந்தவை-த்ரிஷா ஆகியோர் வரும் காட்சிகள் இளமைத்துள்ளல். இருவருமே அதை உணர்ந்து உருகி நடித்திருக்கிறார்கள். ஜனரஞ்சகமான நடிப்பையும், ஆத்மார்த்தமான நட்பையும், உருகி உருகி செய்யும் காதலையும், பெண்களிடம் செய்யும் சேட்டையையும், சரிவர கலவையில் கொடுத்து கலகலப்பு ஊட்டி உள்ளார் வங்தியத்தேவன் கார்த்தி.
ஒப்பீட்டளவில், இந்தப்பாகத்திலும் ஜெயம்ரவிக்கு அதிக வேலையில்லை. ஆனால் கிடைத்த இடத்திலெல்லாம் பொறுப்பாக நடித்திருக்கிறார் .படத்தின் நடுவே ஆங்காங்கே அவ்வப்போது தோன்றினாலும் இவரின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக ஜெயம் ரவி அமைந்துள்ளார்.
ஒரு அழகான விஷப்பாம்பு எப்படி எல்லாம் தன் முன் இருப்பதை மயக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொத்துகிறதோ, அதுபோல் தனக்கான நேரத்திற்காக காத்திருந்து ஒவ்வொரு காயாக நகர்த்தி சோழ தேசத்தை பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து மறையும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாகவும், எளிதாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் நடித்து கவர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். படத்தின் மிக ஆணிவேரான கதாபாத்திரம் இவர். வரலாற்றில் நிஜமாக இல்லாத பாத்திரமும் இவரே.
நாசர்,பிரகாஷ்ராஜ், விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா,பார்த்திபன் உட்பட இரண்டாம் பாகத்திலும் ஏராள நடிகர்கள். எல்லோருடைய கதாபாத்திரங்களையும் பெயர்களையும் நினைவு வைத்துப் பார்ப்பது கொஞ்சம் கடினமாகவே உள்ளது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உழைப்பு படத்தை உலகத் தரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் மெனக்கெடல் தெரிகிறது. ஒளியமைப்பில் ஜாலம் நிகழ்த்துகிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் கேட்கக் கேட்க இனிமை. பின்னணி இசையிலும் தன் முத்திரையைப் பதித்து படத்துக்குப் பலம் சேர்க்கிறார். சிறு சிறு காட்சிகளிலும் தனது இசையமைப்பினால் பிரம்மாண்டத்தை சேர்க்கிறார் ரஹ்மான்.
இந்த இரண்டாம் பாகத்தில், சில இடங்களில் பேசிக்கொண்டே இருப்பது என்கிற உணர்வு வருவது பலவீனம்.
அதைத்தாண்டி, கதை படித்தவர்களை கதையில் உள்ளபடி காட்சிகள் இருக்கின்றனவா? என்கிற ஆர்வத்துடனும் கதை படிக்காதவர்களை, அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்புடனும் பார்க்க வைத்திருக்கிறார் மணிரத்னம். ஜெயமோகனின் வசனங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கின்றன.
கல்கியின் நாவலில் சிற்சில மாற்றங்கள், திரைக்கலைக்கேற்ப காட்சியமைப்புகள், தேர்ந்த நடிகர்கள் அவர்களைப் பயன்படுத்திய விதம் ஆகியன வெகுமக்களைக் கவரும்.
– ரவி