விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் கொலை. பாலாஜிகுமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். இவர்களோடு, ரித்திகா சிங், சித்தார்த் சங்கர், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, லதா தனஞ்செயன், ஆர்.வி.எஸ்.அசோக் குமார், டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, பி.பிரதீப், விக்ரம் குமார்.எஸ், சித்தார்த் சங்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுகுமார் நல்லகொண்டா ஒலி வடிவமைப்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் பாலாஜி குமார் கூறியதாவது…..

1923 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கு சம்பந்தமாகப் படித்தேன். அந்த வழக்கு முடிக்கப்படவில்லை. ஆனால், பல எழுத்தாளர்கள் அந்தக் கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார்கள்.அவரவர் கற்பனைப்படி அந்த வழக்கை முடிப்பது போல் எழுதியிருந்தார்கள். அவற்றை எல்லாம் படித்த போது, இந்த வழக்கை இப்படி முடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அப்படி உருவானது தான் இந்தக்கதை.இதை முழுமையாக எழுதி முடிக்க ஒரு வருடம் ஆனது.

எழுதி முடித்த பின்பு, இந்தக்கதையில் விஜய் ஆண்டனி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை அணுகினேன். விஜய் ஆண்டனியிடம் இந்தக் கதையை சுமார் நான்கரை மணி நேரத்தில் சொன்னேன்.ஆனால், முதல் அரை மணி நேரத்திலேயே இந்தக் கதையை அவர் புரிந்துகொண்டார்.

அதன்பின் அவர், இன்பினிட்டி நிறுவனத்துக்கு என்னை அனுப்பினார். அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும். நான் கேட்டதை எல்லாம் ஏற்றுக்கொண்டு தாரளமாகச் செலவு செய்தார்கள். அதனால் தான் படம் தரமாக வந்திருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற படங்கள் அனைத்தும் ஒரேமாதிரி இருக்கும். பல திருப்புமுனைகள், தவறான வழிநடத்தல்கள் என்று போய் இறுதியில் கொலையின் பின்னணி மற்றும் இரகசியம் துப்பறிவாளன் மூலமாகத் தெரிய வரும். ஆனால், அதுபோல் இல்லாமல் மாற்றி யோசித்திருக்கிறேன்.அதுபோன்றே திரைக்கதை அமைத்திருக்கிறேன்.இது புதிதாக இருக்கும்.

எழுத்து மட்டுமின்றி உருவாக்கத்திலும் படம் உயர்ந்து நிற்கிறது.வித்தியாச மேக்கிங் அது ஸ்டைலிஷாக சொல்லப்பட்டிருப்பது ஆகியனவற்றால் இது மேல்தட்டு இரசிகர்களுக்கான படம் என நினைக்கவேண்டாம்.அடித்தட்டு இரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமான காட்சியமைப்புகள் படத்தில் நிறைந்திருக்கின்றன.

கதையை எழுத எவ்வளவு மெனக்கெட்டேனோ அதே அளவு படத்தில் இடம்பெறும் கணினி வரைகலைக்காட்சிகளுக்காகவும் மெனக்கெட்டிருக்கிறேன்.அதற்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. எனவே, படம் தாமதமானது.

எப்போது வந்தாலும் படத்தின் தரம்தான் இரசிகர்களிடம் பேசும். அந்த வகையில் இந்தப்படம் அனைத்துத் தரப்பு இரசிகர்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படம், ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.