கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரின்ஸ்’ படம் கடும் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது ‘மாவீரன்’ வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்துள்ளது.
யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் மடோன் அஸ்வின். கொரோனா காரணமாக ‘மண்டேலா’ படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் மற்றும் தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது. தனது முதல் படத்திலே தேசிய விருது வென்று சாதனை படைத்தார் மடோன் அஸ்வின்.
இதனையடுத்து அவரின் இரண்டாவது படைப்பாக தற்போது ‘மாவீரன்’ வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் பிரபல இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு, குக் வித் கோமாளி மோனிஷா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ‘டாக்டர்’ படத்தினை தொடர்ந்து மாவீரனில் முற்றிலும் வேறு ஒரு விதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக சிவகார்த்திகேயனை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
‘மாவீரன்’ படத்தில் கோழையாக இருக்கும் ஹீரோவுக்கு ஒரு அசரீரி குரல் கேட்கிறது. இந்த குரல் மூலமாக கோழையாக இருக்கும் ஹீரோ எவ்வாறு மாவீரனாக மாறுகிறான் என்பதையே படமாக இயக்கியுள்ளார் மடோன் அஸ்வின். இந்த குரலுக்காக நடிகர் விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றுள்ளது.
வ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றி ரொம்ப ஸ்பெஷல். ‘மிஸ்டர் லோக்கல்’ வந்துச்சு. அதுக்கப்புறம் வந்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஹிட்டாச்சு. ‘ஹீரோ’ வந்துச்சு. அதுக்கப்புறம் வந்த ‘டாக்டர்’ ஹிட்டாச்சு. ‘பிரின்ஸ்’ வந்துச்சு. இப்போ ‘மாவீரன்’ ஹிட்டாகி இருக்கு. வெற்றி, தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து போகும். நான் நம்புறது ‘வெற்றி ஒரு பயணம். இலக்கு அல்ல’. அதனால் இதை ஒரு பயணமாக தான் பார்க்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.