ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கிய இந்தப் படம் அட்லீயின் வழக்கமான மசாலாப் படங்கள் அனைத்தின் கலவை தான்.
நமக்கு இது பழைய மாவு. பாலிவுட் மசாலா படங்கள் பெரும்பாலும் சீரியசான அரசியல் சமூக பிரச்சனைகளைப் பேசாது எனவே பாலிவுட் மக்களுக்கு புதிதான மசாலாவாக இருக்கலாம்.
நடிகர்கள்: ஷாருக்கான், விஜய் சேதுபதி நயன்தாரா, தீபிகா படுகோனே டைரக்ஷன்: அட்லி இசை: அனிருத் ஒளிப்பதிவு : ஜி.கே.விஷ்ணு
விக்ரம் ரதோர், ஆசாத் என இரண்டு பாத்திரங்களில் ஷாருக்கான் அப்பா – மகன் கெட்டப்புகளில் வருகிறார். மகன் ஆசாத்தை அவருடைய பின்புலம் தெரியாமலேயே திருமணம் செய்து கொள்ளும் போலீஸ் அதிகாரியாக நயன்தாரா.
மகன் ஆசாத்தாக வரும் ஷாருக் ரயிலையே கடத்தி ஆயுத வியாபாரி வில்லன் காளி-விஜய் சேதுபதியிடம் 5ஆயிரம் கோடி வசூல் செய்து கிராமங்களின் விவசாயிகள் கடனை அடைக்கிறார். விக்ரம் ரதோர் என்கிற அப்பா கேரக்டர் முன்னாள் ராணுவ வீரராக தனது கிராம மக்களை அச்சுறுத்தும் வில்லன்களை அடித்துத் துவம்சம் செய்பவராக வருகிறார். இரண்டு பேருக்கும் இடையே என்ன தொடர்பு ? அவர்கள் சேர்ந்து என்ன செய்தார்கள் என்பது மீதிக்கதை. இரண்டே முக்கால் மணி நேர நீண்ட கதை.
மெட்ரோ ரெயிலை அசாத்தியமாக கடத்துவது, போலீஸ் படைக்கு நடுவே தப்பிப்பது, என படம் முழுவதும் மிரட்டி உள்ளார். ஜெயிலராக அவர் வரும் காட்சிகள் மிடுக்கு. ராணுவ அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார்.
நயன்தாராவுக்கு இது பாலிவுட் என்ட்ரி வேடம். நன்றாகச் செய்திருக்கிறார். அங்கு ரவுண்டு வருவாரா பார்ப்போம். அப்பா விக்ரம் ரத்தோரின் ஜோடியாக தீபிகா படுகோனே சிறிது நேரமே வந்தாலும் மனதை கவர்கிறார்.
அனிருத்தின் பின்னணி இசை கரடுமுரடான இரைச்சல். பாடல்களில் தலைப்புப் பாடல் ‘ராமையா வஸ்தாவய்யா’ மட்டும் பரவாயில்லை. மற்றபடி பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரும் அளவிற்கு ஆழம் இல்லை. ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் அளித்திருக்கிறது.
ரஜினியின் ஜெயிலர் எவ்வளவு பில்டப்புகள் கொடுக்கப்பட்டு வசூலும் அள்ளிக் குவித்தாலும் சுமாரான படமோ, அதே போலத் தான் பல பிலட்ப்புகள் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும் ஜவானும் வசூலை அள்ளிக் குவித்திருந்தாலும் சுமாரான படமே.
குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படம்.