நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம்.

அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு. காவலதிகாரிக்குரிய மிடுக்கு அவருக்கு இயல்பாகவே இருக்கிறது.மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தோற்றப்பொலிவும் உடையலங்காரமும் இரசிக்க வைக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு அதிக வேலையில்லை என்றாலும், வருகிற காட்சிகளில் நிறைந்து நிற்கிறார். புன்னகையால் கவரும் அவருடைய கதாபாத்திரத்தின் முடிவு கஷ்டப்பட வைக்கிறது.

இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அனந்திகாவும் கவனிக்க வைத்திருக்கிறார்.

இயக்குநர் வேலுபிரபாகரன், ரிஷிரித்விக், செளந்தரராஜா ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகம்.

கதிரவனின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அழுத்தம் காட்சிகளிலும் தெரிகிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கலாம். நாயகனின் பெருமை பேசும் பாடல் விக்ரம்பிரபுவுக்குப் பொருந்தியிருக்கிறது.காதல்பாடல்களும் சுகம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.

கன்னடத்தில் வெளியான டகரு படத்தின் தமிழாக்கம் என்று தெரியாதபடிக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. டி.ராஜேந்தர் போல் எதுகை மோனை வசனங்களும் இவற்றில் அடக்கம்.

கார்த்தி எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். மையக்கதை பழையது என்பது பெரும் வேகத்தடையாக இருந்தாலும் காட்சிகளை முன்பின்னாக மாற்றிப்போட்டு அதைச் சமன் செய்ய முயன்றிருக்கிறார்.அதுவே சில இடங்களில் பலவீனமாகியிருக்கிறது. எளிய பழிவாங்கும் கதையை இவ்வளவு இழு இழுவென்று இழுத்து சொல்லியிருக்க வேண்டாம்.

நல்லவர்களின் கண்களில் படும்வரைதான் கெட்டவர்களின் வாழ்வு என்பதை அழுத்திச் சொல்லியிருப்பது வரவேற்புக்குரியது. தன் நடிப்பால் அந்தக் கருத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார் விக்ரம்பிரபு.  ஆனாலும் விக்ரம் பிரபுவுக்கு இறுகப்பற்று தந்த பலம் இதில் காணாமல் போய்விட்டது.

– தனா

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds