முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன்.
கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா? அவற்றால் உள்ளும் புறமும் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன என்பனவற்றிற்கான விடைகள் தாம் படம்.
நாயகனாக நடித்தாலும் நகைச்சுவை செய்தால்தான் ஏற்பார்கள் என்கிற வழக்கத்தை உடைக்க முயன்றிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.கல்லூரி மாணவர், சிகை அலங்கார நிபுணர் ஆகியனவற்றிற்காக தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.பொறியியல் மட்டும் நம்ம குலத்தொழிலா? என்று கேட்டு என்று கேட்டு குலத்தொழில் சரி என்போரின் செவிட்டில் அறைந்திருக்கிறார்.
இந்தப்படத்தில் முற்பாதியின் பலமாக சத்யராஜ் இருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு மழை.தன் வழக்கமான பாவனைகள் எதையும் வெளிப்படுத்தாமல் முற்றிலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து இரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.
நாயகி மீனாட்சி செளத்ரி, வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிற வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கான இடம் சிறிதெனினும் அதில் குறைவைக்கவில்லை.
ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், கிராமத்தில் முடிவெட்டுபவராக நடித்திருக்கும் லால் ஆகியோரின் அனுபவ நடிப்பு அந்தந்த வேடங்களுக்குப் பலம்.
நாயகனின் நண்பராக வரும் கிஷன்தாஸ், ஜான்விஜய், ரோபோசங்கர் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ஜீவா, அரவிந்த்சாமி ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் வந்து ஆச்சரியம் தருகிறார்கள்.
முடிவெட்டி தோற்றத்தை மாற்றிக் காட்டும் நாயகனின் கதை என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார்.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். ஜாவேத் ரியாசின் பின்னணி இசையில் தாழ்வில்லை.
செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பு நேர்த்தி.
குலத்தொழில் கருத்துக்கு எதிராகக் கத்தியைத் தூக்கியிருக்கும் இயக்குநர் கோகுல்,அதைப் பொழுதுபோக்கு அம்சங்களோடு கலந்து கொடுத்து அனைவரையும் இரசிக்க வைத்திருக்கிறார். குலத்தொழில் ஆதரவாளர்களிடமிருந்து தப்பி ஒரு தொழிலை வெற்றிகரமாகச் செய்தால் அங்கும் பல அடாவடிகள். அவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
நம்பி தலை கொடுக்கலாம்.
– இளையவன்