பாபர் மசூதி என்கிற பெரியதொரு வரலாற்றுச் சின்னத்தை ஆயிரக்கணக்கானோர் சென்று இடித்து தரைமட்டமாக்கி, அதன் மேலே வைணவ இந்துக்களின் தெய்வம் ராமர் பிறந்த இடம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கூறி கலவரங்கள் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, சுப்ரீம் கோர்ட் தலையிட்டு அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்று மாற்றி தீர்ப்பு வழங்கி, இப்படி அனைத்து அநீதிகளும் வரிசையாக நிகழ்த்தப்பட்டு உருவாகியிருப்பது தான் இன்றைய அயோத்தி ராமர் கோவில்.
ராமாயணமே ஒரு கற்பனைக் கதை என்கிற போது, இரண்டாயிரம் ஆண்டுகளாக அதைச் சுற்றி பின்னப்பட்ட நம்பிக்கைகள் அதனால் உருவாக்கப்பட்ட புனித ஸ்தலங்கள் என்று பற்பல வந்துவிட்டன. அதை அரசியலாக்கி இன்று பிரதமர் மோடி மசூதியின் மேல் கட்டப்பட்ட புதிய ராமர் கோவிலை திறந்து வைத்திருப்பதன் மூலம் இந்தியாவில் மதவாத அரசியல் வெகுஜன அரசியலாக மாறியுள்ளது.
இந்துக்கள் எந்த மதத்தினரை எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பது சரியென கருதப்படுகிறது. அதே சமயம் இந்து மதத்தின் எந்த நம்பிக்கை மீதும் இந்துக்கள் கூட கேள்வி எழுப்புவது இந்து மத விரோதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. சாதாரண திரைப்படம் முதல், டி.வி சேனல்கள் வரை அனைத்தும் இந்துத்துவ அதிகாரத்தின் முன் மண்டியிட்டு பம்மி பேசும் நிலை வந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கிஷோர் இன்ஸ்டாகிராமில் துணிச்சலாக ராமர் கோவிலையும் அதன் பின்னுள்ள அரசியலையும் விமர்சித்துள்ளார்.
ராமர் கோயில் திறப்பை கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் கிஷோர்,
“கோயில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.
“பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது”
கோயிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோயிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. அவர்களின் மக்களும் ஜோக்கர்களும் புகழ்பாடி வருகின்றனர். மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாச்சாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்”
என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
துணிச்சலாக உண்மையைப் பேசிய, போலி மதப் பற்றை கண்டித்த கிஷோருக்கு நன்றிகள்.