இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள கைதிகளுக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி முதல்ஆளாகத் தப்பிச்செல்வார் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அவரும் தப்பாமல் தப்ப முயல்பவர்களையும் தடுக்கிறார். அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? அவர் மகள் நிலை என்ன? என்பனவற்றிற்கான விடைகள்தாம் படம்.
சாமான்யமனிதர, பாசமிகு தந்தை என எளிமையான மனிதராக அறிமுகமாகும் அருண்விஜய், கைதிகள் தப்ப முயலும்போது அதிரடி காட்டி ஆச்சரியப்படுத்துகிறார். சண்டைக்காட்சிகளில் அசுரத்தனம் காட்டி அனைவரையும் ஈர்க்கிறார். அவர் யார்? என்பது வெளிப்படுமிடம் நன்று.
சிறையதிகாரியாக வருகிறார் எமி ஜாக்சன். அழகான அதிகாரி. அவருக்கும் ஆக்சன் காட்சிகள் உண்டு. திறம்படச் செய்திருக்கிறார். ஆனால் ஓப்பனிங்கில் வந்த வேகம் பின்னாடி இல்லாமல் போய் டம்மியாகி விடுகிறார்.
செவிலியர் வேடத்தில் வரும் நிமிஷா சஜயனுக்கு முக்கியவேடம். அதை உணர்ந்து நடித்து கவனம் பெறுகிறார்.
பார்த்தவுடன் கண்டுபிடித்துவிட முடியாத சர்தார் வேடத்தில் நடித்திருக்கும் நாசர் மகன் அபிஹசன், நிறைந்த நடிப்பில் அவரை அடையாளம் காட்டிக்கொள்கிறார். சர்தாராக இருந்தாலும் படம் முழுவதும் பஞ்சாபியில் ஒரு வார்த்தை பேசக்கூடாதா. தமிழ் மட்டுமே பேசுகிறார் ?
வில்லனாக வரும்பரத் போபண்ணா,மகளாக வரும் இயல், விரஜ், ஜேசன் ஷா ஆகியோரும் பொருத்தமாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு சந்தீப் கே.விஜயன்.அவர் திறமைக்குச் சவால்விடும் திரைக்கதை மற்றும் சண்டைக்காட்சிகள். அவற்றைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். லண்டன் சிறையில் நடப்பவை என்று காட்ட இங்கே செட் போட்டிருப்பதால் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்துள்ளன. பின்னணி இசையிலும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். ரொம்ப சிறப்பு என்று சொல்லிவிட முடியாது.
படத்தொகுப்பாளர் ஆண்டனி உழைப்பு படத்துக்குக் கைகொடுத்து இரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறது.
கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் மஹாதேவ். தமிழ் பேசும் பாகிஸ்தான் தீவிரவாதி, கோவையில் சாதாரணமாக குண்டு வைக்கும் தீவிரவாதிகள், நல்ல இஸ்லாமியர் – கெட்ட இஸ்லாமியர் அறிவுரைகள் , ‘ஜீ20’ மாநாட்டைக் குறிவைக்கும் தீவிரவாதிகள், அவர்களின் ‘மிஷன் தஸ்ரா’ திட்டம், என்று இப்படி முழுக்க முழுக்க சங்கிகள் பேசும் இந்திய தேசிய வெறி , தீவிரவாதி போன்ற மதவெறி விஷயங்களே கதை முழுவதும் இடம் பிடிக்கவிட்டிருக்கிறார்.
அருண் விஜய்க்கு ஒரு அதிரடி ஆக்சன் படம் என்ற அளவில் மட்டுமே தீவிரம் காட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய். அதனால் படத்தில் ஏற்படும் பல பள்ளங்களை சரி செய்ய முடியாமல் வெறும் அடிதடி சண்டைகள் நிரம்பிய படமாக சலிப்பூட்ட ஆரம்பிக்கிறது.
– இளையவன்