எது நேரு..

மலையாள திரையுலகம் இதுவரை கதையாடாத நுட்பமான வாழ்வியல், சமூக மற்றும் அரசியல் கதைகளை திரையாடி வருகிறது. தன்பாலின உறவாளரான கணவனை நீதிமன்றம் சென்று விவாகரத்து செய்கிற காதல் தி கோர் சினிமாவின் அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இதோ நேரு கலக்கி வருகிறது. முதலில் மெகா ஸ்டார் மம்முட்டி மற்றும் ஜோதிகாவின் அமைதியான அசத்தல். இரண்டாவதில் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ஆர்பாட்டமான தென்றல் .. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க திரிஷ்யம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கியுள்ளார்.

சரி, நேரு க்கு வருவோம்..

பல படங்களில் பார்த்த பாதிக்கப்பட்ட வறிய பெண்ணிற்காக நீதிமன்றத்தில் வாதாடி நீதி பெற்றுக்கொடுக்கிற படம்தான். பூர்ணிமாவை காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய மோகனுக்கு எதிராக சுஜாதா வாதாடி நீதி பெற்றுக் கொடுத்த 1984 இல் வெளிவந்த மாதக்கணக்கில் ஓடிய “விதி” யிலிருந்து நண்பர்களால் ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று பெண்களுக்காக அஜீத் வாதாடி நீதியை வென்ற சமீபத்திய “நேர் கொண்ட பார்வை” வரை பெண்களுக்காக நடத்தப்பட்ட பல சட்டப் போராட்ட சினிமாக்களைப் பார்த்துவிட்டோம். அவற்றிலிருந்து இது எப்படி மாறுபட்டது …

பார்வையற்ற ஒரு இளம் பெண் தன் வீட்டில் தனியாக இருக்கும் போது அறிமுகமில்லாத யாரோ ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறாள். பட்டப்பகலில் பொது இடத்தில் பல பேர் நன்றாக உற்றுப் பார்த்த பல கொலைக் கேஸுகளே நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாமல் தோல்வியடைகிறது. கொலையாளி அசால்ட்டா ரிலீசாகி வெளிய வந்துவிடுகிறான். நம்முடைய சட்டமும் நீதிமன்றங்களும் வக்கீல்களும் ஜட்ஜுகளும் அப்படியிருக்கு. இந்த நிலைமையில் அந்த பார்வையற்ற பெண் எப்படி குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும்?, அதை எப்படி நீதிமன்றத்தில் நிருபிக்க முடியும்?, நீதிமன்றம் எப்படி ஏற்கும்?, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எப்படி நீதி கிடைக்கிறது. இதுதான் படம். இந்த சேட்டன்ஸ் எப்படியெல்லாம் யோசிக்கறாங்க பாருங்க..

படம் தொடங்கிய 15 நிமிடங்களில் நீதிமன்றக் காட்சிகள், வழக்கு விசாரணை, கருப்பு கோட்டுகளின் நறுக் முறுக் காராச்சேவ் வாதங்கள் தொடங்கிவிடுகிறது. அதை இறுதிக்காட்சி வரை காரசாரமாக விறுவிறுப்பாக நகர்த்திச் சென்ற இயக்குனர் ஜித்து ஜோஸப்புக்கு எனது கருப்புக் கோட் – டை பரிசளிக்கிறேன்.

பொதுவாக சினிமா கோர்ட் காட்சிகள் நிஜ கோர்ட் காட்சிகளிலிருந்து ரொம்ப தூரம் விலகியிருக்கும். ஓடினேன்… ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன் போன்ற பராசக்தி காட்சிகளுக்கும் கத்திக்கு வாய் இருந்தால், இந்தக் கத்தியும் கத்திக் கத்திப் பேசும், ஆ, டண்டணக்கா, டண்டணக்கா காட்சிகளுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் சமீபத்திய மலையாள சினிமாக்கள் நிஜ கோர்ட்டுக்கு நெருக்கமான காட்சிகளை திரையில் முயற்சி செய்து வருகிறது. அது மட்டுமல்ல, நீதிமன்றக் காட்சிகளில் சட்ட நுணுக்கங்களை அதன் சாராம்சமும் தரமும் குறையாமல் அதே சமயம் மக்களுக்குப் புரிகிற மொழியில் விறுவிறுப்பாகப் பேசத் தொடங்கியுள்ளது. அதில் குஞ்சாக்கோ கோபன் நடித்த “என்னதான் கேஸ் கொடு” அச்சு அசல் ஒரு மேஜிஸ்ட்ரேட் கோர்ட். அதில் கோர்ட்டுக்குள் புறாக்கள் பறப்பதும் ஜட்ஜய்யா புறா மீது பேனா வீசுவதும் கிளாசிக் டச்.. என்னுடைய “கைரதி 377” சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒரு கதையில் குற்றவாளிக் கூண்டில் நின்றபடி கைரதி குர்.. குர்ர்ரென குனுகும் புறாக்களை பார்த்துக் கொண்டிருப்பாள்.

நேரு படத்தில் நிஜ கோர்ட்டுக்கு மிக நெருக்கமான காட்சியமைப்புகள் என்று சொல்லமாட்டேன். ஒரு 50 சதவீதம் நெருங்கி வந்துள்ளது எனலாம். எந்தப் படத்திலும் 100 சதவீதம் இயல்பான நீதிமன்ற நடைமுறைகளை காட்டிவிட முடியாது. அப்படி காட்டினாலும் நமது வக்கீல்கள் வாய்தா மேல் வாய்தா வாங்கி கேஸை ஜவ்விழுப்பாக இழுப்பது போல் படமும் ஜவ்விழுப்பாக இழுத்து சொதப்போ சொதப்புன்னு சொதப்பிடும். படத்திற்காக சில சமரசங்களும் சினிமாத்தனமும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் படத்தை பார்க்க முடியும். அது எந்தளவு என்பதும் சேர்மானம் எப்படி என்பதும்தான் சினிமாவின் நவீனத்தைத் தீர்மானிக்கின்றன. மலையாள சினிமாக்களின் சேர்மானம் சினிமாத்தனம் குறைவாகவும் இயல்பு கூடுதலாகவும் உள்ளது.

நேரு படத்தில் கோர்ட் ஹால் செட்டிங் தமிழ் படங்களைப் போலவே சினிமாத் தனமாக உள்ளது. அதை இன்னும் கொஞ்சம் இயல்பாக செட்டிங் செய்திருக்கலாம். பப்ளிக் ப்ராசிகீயுட்டராக மோகன்லால் வருவதாலேயே நீதிமன்றத்தில் சில காட்சிகளில் அவர் ஆக்ரோஷமாக பேசுகிற ஹீரோயிசம் டச் தெரிகிறது. மோகன்லால் சிறப்பாக நடித்திருக்கிறார். இருந்தாலும் வேறு நடிகராக இருந்திருந்தால் இந்த ஹீரோயிசம் டச் இல்லாமல் இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கும். மற்றபடி வழக்கு விசாரணை காட்சிகள் பாதி சினிமா தனமும் பாதி இயல்பும் சரிசமமாக கலந்த கலவையாக உள்ளது. அடுத்த காட்சி என்ன.., என்ன.. என நம்மை உந்தித் தள்ளுகிறது. அதுவும் பாதிக்கப்பட்ட பெண் பார்வையற்றவர் என்பதால் அந்த எமோஷன் நமக்குள் இறங்கி காட்சிகள் நகர்வதற்கு முன்பே நமது மனசை நகர்த்திச் சென்றுவிடுகிறது. வக்கீலான எனக்கே குற்றவாளியின் அடையாளம் நிருபிக்கப்படுகிற அந்த இறுதிக்கட்ட காட்சியில் நெஞ்சு விம்மி கண்ணீர் லேசாக துளிர்த்தது. இயக்குனர் ஜித்து ஜோஸப்புக்கு மீண்டும் எனது கருப்பு அங்கியை பரிசாக அளிக்கிறேன்.

பெரும் பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த குற்றவாளிகளும் அவர்கள் வக்கீல்களும் வழக்கிலிருந்து தப்பிக்க, சட்டத்தை வளைக்க, பொய் சாட்சிகளை உருவாக்க என்னவெல்லாம் தகிடுதத்தம் செய்வார்கள் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லியுள்ளார்.

நீதிமன்றத்தின் முன் அந்த பார்வையற்ற பெண், குற்றவாளியின் அடையாளத்தை நிருபிக்கிற அந்த உக்தியை ஏன் இன்னும் செய்யவில்லை என்று யோசித்துக்கொண்டேயிருந்தேன். வக்கீல் என்பதல் என்னவோ அடையாளத்தை நிருபிக்க இந்த உக்திதான் பயன்படும் என முதலிலேயே பட்சி சொல்லிவிட்டது. ஆனால் அது படத்தின் இறுதிக்காட்சியில் வைத்துள்ளார் இயக்குனர். முதலிலேயே வைத்திருந்தால் படம் அத்துடன் முடிந்திருக்கும். எப்படியாவது அந்தப் பெண் சொல்வது உண்மையென நிரூபிக்க வேண்டுமே என படம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பையும் ஆதங்கத்தையும் உருவாக்கி வெவ்வேறு உக்திகளை எதிரும் புதிருமாக வைத்து இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என தவிக்கவிட்டு இறுதிக்காட்சியில் பிரமாஸ்திரமாக அந்த உக்தியை வைத்து எல்லோரையும் பெருமூச்சு விடவைத்துவிட்டார். சபாஷ் ஜித்து ஜோசப்.

பப்ளிக் ப்ராசிகீயுட்டராக மோகன்லால், குற்றாவாளி தரப்பு வக்கீல்களாக சித்திக், ப்ரியாமணி, போலீஸ் விசாரணை அதிகாரியாக கணேஷ்குமார், நீதிபதியாக மேத்யூ வர்கீஸ், குற்றவாளியாக சங்கர் இந்துசூடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோராக ஜெகதீஸ், தன்யா.ஸ்ரீ, படத்தின் கதையாசிரியரும் மோகன்லாலுக்கு உதவி செய்பவருமாக சாந்தி மாயாதேவி என எல்லோருடைய நடிப்பையும் பாராட்ட வேண்டும். ஆனால் ஒருவர் நடிப்பு மட்டும் எத்தனை பாராட்டினாலும் போதுமானதாக இருக்காது. அது அந்த பார்வையற்ற பெண்ணாக நடித்த அனஸ்வரா ராஜனின் நடிப்பு. பார்வையற்ற பெண்ணாக அவ்வளவு கச்சிதமாக இயல்பாக நடித்திருக்கிறார். அதுவும் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட வேதனை, நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாதோ, குற்றவாளி தப்பிவிடுவானோ என்ற தவிப்பு எப்படியும் அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற உறுதி என எல்லாவற்றையும் ஒவ்வொரு ப்ரேமிலும் தன் முகத்தில் வெளிப்படுத்துகிறார். எல்லா விருதுகளும் கொடுக்க வேண்டும்ன்னு நாம சொன்னா கண்டிப்பா கொடுக்க மாட்டானுங்க. அதனால நான் சொல்லமாட்டேன்.

இப்படம் ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட் II: ஹேண்ட்ஸ் தட் சீ (Sketch Artist II – Hands that see) என்ற ஹாலிவுட் படத்தின் கதைக்களம் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளின் தழுவல் உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அந்தப்படத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஸ்கெட்ச் ஆர்ட் மூலம் குற்றவாளியின் முகத்தை வரைந்து அடையாளத்தை காட்டுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விமர்சனம் கவனம் பெறுகிறது.

படத்தில் நெருடலான இன்னொரு விசயம்… அதென்ன எல்லா படத்திலும் பாதிக்கப்பட்ட நலிந்த மக்களுக்காக வாதாடுகிற வக்கீல்கள் எல்லாம் காதல் தோல்வியாலோ, சீனியருடன் மோதலில் பழிவாங்கல், செய்யாத தப்பிற்கு பார் கவுன்சில் தடை என வக்கீல் தொழில் செய்யாமல் தண்ணியடிச்சுத் திரிவது அல்லது வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது என்பது போலவும் இந்த வழக்கிற்காக அவரை சமாதானப்படுத்தி வற்புறுத்தி அழைத்து வந்து வாதாட வைப்பது போல் சித்தரிக்கிறார்கள். “நேர் கொண்ட பார்வை” யிலும் அஜீத்தை அப்படித்தான் சித்தரித்திருப்பார்கள். ஜெய் பீம் சினிமாவில்தான் சூர்யாவை மக்களுக்காக களத்திலும் போராடுகிற வக்கீலாக காட்டியிருப்பார்கள். அதேபோல் மற்ற படங்களிலும் எங்களைப் போல் எப்போதும் மக்களுக்காக களப்பணியாற்றுகிற வக்கீல்களாக ஏன் சித்தரிக்கக் கூடாது. அதுதான் நேரு. அதாவது உண்மை. நான் 1994 லேயே வீரப்பனைப் பிடிக்கச் சென்ற அதிரடிப் போலீஸ் படையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சின்னாம்பதி மலைவாழ் மக்களுக்காக களத்திலும் நீதிமன்றத்திலும் போராடி நீதி பெற்றுக்கொடுத்துள்ளேன். அதே காலகட்டத்தில் சிதம்பரம் பத்மணி பாலியல் பலாத்காரம் மற்றும் அவரது கணவரின் லாக்கப் கொலை வழக்கில் களத்தில் போராடியவர்கள் மார்க்சிஸ்டுகள். நீதிமன்றத்தில் போராடியவர்கள் இடதுசாரி வழக்கறிஞர்கள். அதே போல் நமது இடதுசாரி வழக்கறிஞர்கள் வாச்சாத்தி மலைவாழ் மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். திருச்சங்கோடு கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திறம்படி வாதாடி தண்டனை பெற்றுக்கொடுத்த தோழர் ப.பா.மோகன் ஒரு இடதுசாரி வழக்கறிஞர். இப்படி நூறு நூறு வழக்குகளச் சொல்லலாம். இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும், மலைவாழ் மற்றும் பட்டியலின மக்களுக்காகவும் நலிந்த மக்களுக்காகவும் வழக்கு நடத்தி நீதி பெற்றுக்கொடுப்பது பெரும்பாலும் இடதுசாரி மற்றும் முற்போக்கு வழக்கறிஞர்களே. அவர்களிடம்தான் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் பயப்படாமல் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் இறுதிவரை விடாப்பிடியா தீவிரமாக வழக்கு நடத்துகிற மன உறுதியும் பக்குவமும் உள்ளது. மற்ற வழக்கறிஞர்களின் பங்கு இல்லாமல் இல்லை. ஆனால் அதன் விகிதம் குறைவானதே. ஆனால் இந்த நேருவை (உண்மையை) உள்வாங்காமல் சினிமாவில் பிரதிபலிக்காமல் ஏதோ ஒரு பிரச்சனைக்காக வக்கீல் தொழிலை விட்டுவிட்டு தண்ணியடிச்சுத் திரிகிற அல்லது வீட்டில் முடங்கிக்கிடக்கிற வக்கீல் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக மீண்டும் கருப்புக்கோட்டை தூசிதட்டி போட்டுக்கொண்டு கோர்ட்டுக்கு வருவது போல் சித்தரிப்பதுதான் நேர்ரானோ ? (உண்மையா/நேர்மையா?)

படத்தின் இறுதி ப்ரேம்கள் மிக முக்கியமானவை. வழக்கு வெற்றி பெற்று குற்றவாளிக்கு தண்டனை அறிவித்த பின் எல்லோரும் மோகன்லாலை வாழ்த்தி கை கொடுத்துவிட்டு கலைந்து செல்வார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணும் பெற்றோரும் அவர் அருகில் வருவார்கள். தங்கள் மகளுக்கு ஒரு ஆசை என்பார்கள். தனக்காக வாதாடி வெற்றி பெற்றுக்கொடுத்த அந்த வக்கீலின் முகத்தைக்கூட பார்க்க முடியாத அந்தப் பெண் அவர் முகத்தை தன் கைகளால் தடவிப்பார்த்து பின் கைகூப்பி நன்றி சொல்வாள். அவ்வாறு தடவும் பொழுது மோகன்லால் கண்களில் தனாக கண்ணீர் வடியும் நம் கண்களிலும்….

இறுதிக்காட்சி வரை நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் மீடியா கவரேஜ்ஜுக்கு பயந்து முகத்தை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு வருவாள். வழக்கு வெற்றி பெற்றவுடன் நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும் போது அந்தத் துப்பட்டாவை கழற்றிவிட்டு முகம் நன்றாகத் தெரியும்படி கம்பீரமாக நடந்து வருவாள். அற்புதமான காட்சி. அத்துடன் முடியவில்லை.. அதுவரை வேட்டை நாய்களாக திரிந்த மீடியா கேமராக்கள் அவள் வெளியே வரும் போது கவரேஜ் செய்யாமல் அமைதி காப்பார்கள். ஒரு நிருபர் மட்டும் கேமராவைத் தூக்குவார். உடனே அருகிலிருந்த பெண் நிருபர் வேண்டாமென சைகை காட்டுவார். அவர் கேமராவை இறக்கிக் கொள்வார். இதுதான் உண்மையான பத்திரிக்கைத் தர்மம் என நச்செனச் சொல்லிச் செல்கிறது இந்தப்படம். இதற்காகவே இந்தப் படத்தை கொண்டாடலாம். மீடியா வெளிச்சத்திற்கு விரும்பாமல் மோகன்லால் யாரையும் கவனிக்காமல் ஒரு ஓரமாக வெளியே செல்லும் காட்சியும் முக்கியமானது.

அந்தப் பெண்ணிற்கு தனித்துவமான கலைத் திறமை இருந்ததால் அந்தக் குற்றவாளியை அடையாளம் காட்டமுடிந்தது. நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடிந்தது. ஆனால் அப்படியான எந்தவொரு தனித்திறமையும் இல்லாத பார்வையற்ற பெண்ணாக இருந்திருந்தால் எப்படி குற்றவாளியை அடையாளம் காட்ட முடியும் என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

Hot star ல் பார்க்கலாம்..

மு.ஆனந்தன்..
9443049987
–வாட்ஸப் பகிர்வு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.