நம்முடைய சமுதாயத்தில் ஒரு திருமணம் நடந்ததும் அந்தத் தம்பதியர் எதிர்கொள்ளும் உடனடிக் கேள்வி,என்ன விசேசம்?.அதன் அர்த்தம் கருத்தரித்துவிட்டீர்களா? என்பதுதான்.
இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் வெப்பம்குளிர்மழை.
நாயகன் திரவ்,கிராமத்து மனிதர் வேடத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.தோற்றத்திலும் நடிப்பிலும் அதை உறுதிப்படுத்துகிறார்.குழந்தை என்பது நாட்டுக்கு இன்னொரு குழந்தை என்றால் சம்பந்தப்பட்ட ஆணின் ஆண்மைக்குச் சான்று என்று சொல்லும் சமுதாயத்துக்குள் கருத்தரிக்கவில்லையெனில் சந்திக்கும் சிக்கல்களை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் இஸ்மத்பானுவும் ஏற்றுக்கொண்ட வேடத்துக்குப் பொருத்தமாகத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.ஆணுக்கு அடங்கி வாழ நிர்பந்திக்கப்படுகிற வாழிடத்தில் அவர் எடுக்கும் முடிவு விவாதத்துக்குரியதெனினும் திடமானது.
எம்.எஸ்.பாஸ்கருக்கு முக்கியமான வேடம்.அதனால் தோற்றத்தில் வேறுபடுத்திக் கொண்டிருக்கிறார்.அது அவருடைய வேடத்துக்கும் பேசும் கருத்துகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
நாயகன் திரவ்வின் அம்மாவாக நடித்திருக்கிறார் ரமா. கொடுமைக்கார மாமியாராகத் திறம்பட நடித்திருக்கிறார்.ஒருகட்டத்தில் மருமகளுக்கு ஆதரவாக மாறுகிற இடமும் நன்று.
சிறுவன் கார்த்திகேயன், விஜயலட்சுமி, தேவ் ஹபிபுல்லா உள்ளிட்டோரும் படத்தின் ஓட்டத்துக்குப் பயன்பட்டிருக்கின்றனர்.
பிரித்விராஜேந்திரனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகுகளைக் காட்சிப்படுத்த முனைந்திருக்கிறது.கூடவே கிராமத்து மனிதர்களையும் இயல்பு மாறாமல் படம் பிடித்திருக்கிறது.
சங்கர் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையில் காட்சிகளின் தன்மை உயர்ந்து நிற்கிறது.
படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களை ஏதாவதொரு இடத்தில் தொடர்புபடுத்திக் கொள்கிற மாதிரி திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் பாஸ்கல்வேதமுத்து.மாடுகள் கருத்தரிக்க மருத்துவம் பார்க்கும் நாயகன் மனைவிக்கே கருத்தரிப்பதில் சிக்கல் என்கிற முரண் மேலோட்டமானதன்று என நிறுவியிருக்கிறார் இயக்குநர்.
தலைப்பில் இருக்கும் பெயர்களின் உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
– தனா