அக்கரன் என்றால் கடவுள் என்று பொருளாம்.இந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் செயல்களுக்குப் பொருத்தப்பாடாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். திடீரென அவர்கள் வாழ்வில் புயல். அது என்ன? அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம்.
எம்.எஸ்.பாஸ்கரை அன்பான அப்பாவாகப் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விடுவார்.இந்தப்படத்தில் அன்பு மட்டுமின்றி ஆக்ரோசத்தையும் வெளிப்படுத்துகிற வேடம் அவருக்கு. இதிலும் நன்றாக நடித்து நற்பெயர் பெற்றிருக்கிறார்.இவரால் இப்படியெல்லாம் செய்யமுடியுமா? என்கிற கேள்வி வந்துவிடாத வண்ணம் நடித்திருக்கிறார். இது அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகள் வெண்பா.அவரைச் சுற்றித்தான் கதை நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.இளைய மகளாக நடித்திருக்கும் பிரியதர்ஷினியும் குறைவில்லை.
இளைய நாயகனாக வரும் கபாலி விஷ்வந்த்துக்குக் கவனிக்கத்தக்க வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார்.
ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் கார்த்திக் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் எதிர்மறை பாத்திரங்கள். புதியவர்கள் என்று தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார்கள்.
நமோநாராயணன் வழக்கமான அரசியல்வாதி வேடத்தில் அலட்சியமாக நடித்துவிட்டுப் போகிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் கதைக்களத்தை உணர்ந்து அதிலிருக்கும் தீவிரத்தன்மையை காட்சிகளில் வெளிப்படுத்த உழைத்திருக்கிறார்.அதனால் நம்பகத்தன்மை கூடுகிறது.
திரில்லர் வகை திரைக்கதைக்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ஆர்.ஹரி.
அருண்.கெ.பிரசாத் எழுதி இயக்கியிருக்கிறார்.இந்த வேடத்துக்கு எம்.எஸ்.பாஸ்கரைத் தேர்வு செய்ததிலேயே தன் தனித்தனமையைக் காட்டியிருக்கிறார்.அதேபோல ஏற்கெனவே பார்த்த கதைக்களம்தானே என்று எளிதாகக் கடந்து போக முடியாத வண்ணம், தற்கால அரசியல் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நீட் பயிற்சி மையங்களில் நடக்கும் நிகழ்வுகள் படத்தைப் புதிதாக்குகின்றன.
மக்கள் மீதான அக்கறை காரணமாக அநீதிகளுக்கெதிராகப் பொங்கியிருக்கிறார் இந்த அக்கரன்.
– இளையவன்