ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ராமராஜன், ஒரு விபத்தில் சிக்கியதால் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.14 ஆண்டுகளுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சாமானியன்.

அஜீத்தின் துணிவு படம் போல எடுத்ததும் ஒரு வங்கிக்குள் நுழைந்து அங்குள்ளோரைச் சிறை பிடிக்கிறார் ராமராஜன்.வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறார் என்று நினைக்கும்போது அப்படிச் செய்யாமல் மதுரையிலிருந்து மூன்று பேரை அழைத்து வரச் சொல்கிறார்.அவர்கள் யார்? எதற்காக அவர்களை அழைத்து வரச் சொல்கிறார்? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிகிறது படம்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் ராமராஜன்.உடலில் அது தெரியவில்லையெனினும் நடிப்பிலும் வசன உச்சரிப்புகளிலும் மிடுக்கைக் கொண்டுவர முயன்றிருக்கிறார்.சமுதாய அக்கறையுடன் கூடிய அந்தக் கதாபாத்திரம் அவருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.அவரும் அதற்குத்தக நடித்து வரவேற்புப் பெறுகிறார். என் வாழ்க்கை டவுசரோட தான் தொடங்கிச்சு என்று அவர் சொல்லும்போது திரையரங்கில் ஆரவாரம்.

கதையின் மையப்புள்ளியாக இருக்கும் இணையர் லியோசிவக்குமார் மற்றும் நக்‌ஷாசரண் ஆகியோர் பொறுப்புணர்ந்து நடித்து நம்மைக் கலங்க வைத்திருக்கிறார்கள்.

ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.படத்துக்குப் பக்கபலமாக இருக்கிறது அவர்களுடைய நடிப்பு.

காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார்,
வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் மைம் கோபி,
செய்தியாளராக நடித்திருக்கும் அபர்ணதி,ஸ்முமதி வெங்கட், வினோதினி காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜ்
உள்ளிட்டோர் திரைக்கதையோட்டத்தை வேகப்படுத்தப் பயன்பட்டிருக்கிறார்கள்.

ராமராஜன் – இளையராஜா கூட்டணி கோலோச்சிய காலம் இன்னும் பசுமையாக இருக்கிறது.இப்படத்தில் மீண்டும் அந்தப் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவாளர் அருள்செல்வன், படத்தொகுப்பாளர் ராம்கோபி ஆகியோர் இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கொடுத்திருக்கவேண்டும்.

இயக்குநர் ராகேஷ், வங்கிக் கடன் வாங்கி வீடு வாங்கிய ஒவ்வொருவரும் பாராட்டும் கதைக் களம் ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு அதைத் திரைமொழியில் சொல்ல வந்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பின் தங்கியிருந்தாலும் வங்கிக் கடன் நடைமுறைகள் மக்களை எப்படியெல்லாம் வதைக்கின்றன.உள்ளும் புறமும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லி இந்த சாமானியன் சாதாரணமானவன் இல்லை என்று காட்டியிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.