பாகுபலி படம் இதிகாச கதாபாத்திரங்களை உல்டா செய்து உருவாக்கப்பட்ட கற்பனை இதிகாசக் கதை. ராஜமௌலியின் திறமையான கதையமைப்பு மற்றும் இயக்கத்தினால் பெரும் வெற்றி பெற்றது பாகுபலி. அதைத் தொடர்ந்து அதே முறையில் இதிகாசங்களை உல்டா செய்து படங்கள் வர ஆரம்பித்து தோல்வி கண்டிருக்கின்றன. கல்கி படம் இதிகாசத்தையும் அறிவியல் புனைவையும் சேர்த்து புராண இதிகாச கேரக்டர்களை எதிர்காலமாக்க முயன்று தோற்றிருக்கிறது.
இன்று கிபி 2024 ஆம் ஆண்டு.இப்போதிருந்து 874 ஆண்டுகள் கழித்து அதாவது கிபி 2898 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? என்கிற கற்பனையில் காம்ப்ளக்ஸ் என்கிற உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அந்த உலகத்தை 200 வயது நிரம்பிய ஒற்றை மனிதர் ஆட்சி செய்கிறார்.அவரை அழிக்க ஒரு தெய்வக் குழந்தை பிறக்கப்போகிறது.அந்தக் குழந்தையை அழிக்க அவர் முயல்கிறார்.அந்தக் குழந்தை பிறந்தால்தான் மகாபாரதக் கதையில் சாகாவரம் பெற்ற அஸ்வத்தாமா சாபவிமோசனம் பெற முடியும் என்பதால் அந்தக் குழந்தையைக் காக்க அவர் போராடுகிறார்.இதற்கு நடுவே காம்ப்ளக்ஸ் உலகத்துக்குள் செல்ல முயலும் ஒருவர்.அதற்காக காம்ப்ளக்ஸ் உலகத்தின் தலைவனுக்காக வேலை பார்க்கிறார்.

இதுதான் கல்கி 2898 கிபி படத்தின் சாராம்சம்.

படத்தின் நாயகன் என்று சொல்லப்படும் பிரபாஸுக்கு இந்தக் கதையில் முக்கியமான கதாபாத்திரம் இல்லை.ஒரு அடியாள் கதாபாத்திரம்தான்.பிரபாஸ் நடித்திருப்பதால் அது பெரிதாகியிருக்கிறது.அவருக்கு ஒரு அதிநவீன வாகனம், அதற்கு ஒரு பெயர், அது கீர்த்திசுரேஷ் குரலில் பேசுகிறது.சண்டைக்காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார்.படத்தின் இறுதியில் பிரபாஸ் கதாபாத்திரம் வேறுவடிவம் எடுக்கப்போகிறது என்று காட்டி சமன் செய்துவிட்டார்கள்.

தெய்வக்குழந்தையைப் பெறப் போகும் தாயாக நடித்திருக்கும் தீபிகாபடுகோன், அஸ்வத்தாமாவாக நடித்திருக்கும் அமிதாப்பச்சன்,காம்ப்ளக்ஸ் தலைவராக நடித்திருக்கும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த பாகத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். கமல் கடைசியில் வருகிறார்.அது அவர்தானா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படுகிற மாதிரி ஒப்பனை இருக்கிறது.

அமிதாப்பச்சனுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.அவர் நிறைவாகச் செய்திருக்கிறார்.

பசுபதி,ஷோபனா ஆகியோருக்குக் கவனிக்கத்தக்க வேடங்கள். இயக்குநர்கள் ராஜமெளலி, ராம்கோபால்வர்மா, நடிகர்கள் விஜய்தேவரகொண்டா.துல்கர் சல்மான் ஆகியோரெல்லாம் சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார்கள்.

செர்பியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் டிஜோர்டே ஸ்டோஜில்கோவிக், இந்தப்படம் முழுக்க முழுக்க கற்பனைக் காட்சிகளைக் கொண்டவை அவற்றை கணினி வரைகலை மூலம் தான் முழுமையாக்க முடியும் என்பதை உணர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதன் விளைவு ஆங்கிலப்படம் பார்க்கும் உணர்வு பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.

சந்தோஷ்நாராயணன் இசையமைத்திருக்கிறார்.அவருக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைத் தவற விட்டிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின்.வெறுமனே நவீன கதையைச் சொன்னால் அது ஒட்டாமல் போய்விடும் என நினைத்து மகாபாரதக் கதையின் நீட்சியாகச் சொல்ல முயன்றிருக்கிறார். இதிகாசங்களை நிஜமாக நடந்தவையாக சித்தரிக்க முயன்று அம்பலப்படும் இன்றைய இந்துத்துவா அரசு மற்றும் அதன் ஊடகங்களின் நீட்சியாக இந்தப் படமும் அமைந்துவிடுவதால் அது அறிவியல் புனைவுக் கதையின் கற்பனை வளத்தை இதிகாசத்திற்குள் போய் சிக்கவைத்து சுருங்கி விட்டது. அவதார் போன்ற அறிவியல் புனைவுப் படங்களில் தெரியும் விடுதலை உணர்வு இப்படத்தில் இல்லை. 

படத்தில் காட்சியனுபவம் இருக்கிறது. காட்சிப்படுத்திய உள்ளடக்கம் வெகு பலவீனமாக இருக்கிறது.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.