பியானோ இசைக்கலைஞர் பிரசாந்த்,பிரியா ஆனந்த்தின் மதுக்கூடத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறார்.அங்கு பிரபல நடிகர் கார்த்திக் அறிமுகம் கிடைக்கிறது.அதனால்,அவர் வீட்டுக்கு பியானோ இசைக்கச் செல்கிறார்.அங்கு போனால் அவர் கண் முன்னால் ஒரு கொலை நடக்கிறது.அதன்பின் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் அந்தகன்.
சில ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றுகிறார் பிரசாந்த்/நிஜத்திலும் பியானோ இசைப்பவர் என்பதால் அவருக்கு மிகப் பொருத்தமான வேடம்.அதில், கட்டுகோப்பான உடலுடனும் கச்சிதமான நடிப்புடனும் கவர்கிறார்.பார்வை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.பார்வை தெரியாமலே போகும் காட்சிகளில் இன்னும் சிறப்பு.இவர் நடிக்காமலே இருந்திருக்கலாம் என்கிற விமர்சனங்களை முன்பே எழுதி வைத்துக் கொண்டு காத்திருந்தவர்கள் முகத்தில் கரி பூசியிருக்கிறார்.
துள்ளல் நாய்கி என்று பட்டம் கொடுக்கலாம் போல் வருகிறார் பிரியா ஆனந்த்.அவருக்குக் குறைவான வாய்ப்புதான் என்றாலும் நிறைவாக தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்.
நாயகியாக இருந்து நடிப்பால் மிரட்டிய சிம்ரனுக்கு இந்தப்படத்தில் எதிர்மறை வேடம்.மிக நன்றாக நடித்து வரவேற்பைப் பெறுகிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கும் திரைக்கதையில் முக்கியமான இடம்.அதற்குத்தக்க உழைத்திருக்கிறார்.
நடிகராகவே நடித்திருக்கும் கார்த்திக் வரும் காட்சிகளும் அவருடைய பழைய படக்காட்சிகளும் மிகச் சரியாக அமைந்து படத்தைக் கலகலப்பாக்குகின்றன.
ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா,வனிதா விஜயகுமார் உள்ளிட்டு நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.படத்தின் அடுத்தடுத்த நகர்வுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
ரவியாதவின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு திரைக்கதை போல் அமைந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில், கண்ணிலே, என் காதலும் உள்ளிட்ட பாடல்கள் இதம்.பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.
ஒரு வலிமையான, வெற்றி பெற்ற கதையைக் கையிலெடுக்கும் போது, அதுமாதிரி இது இல்லை என்று மிக எளிதாகச் சொல்லிவிடுகிற ஆபத்தை எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன்.அடுத்தடுத்து திருப்பங்கள் அவற்றிற்கிடையே புதிய புதிய கதாபாத்திரங்கள் அவர்கள் அனைவரிடமும் சரியாக வேலை வாங்கியது ஆகிய எல்லா விசயங்களிலும் தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிறுவியிருக்கிறார் தியாகராஜன்.
– கதிரோன்