பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.
ஊரைவிட்டுப் போய்விட்டுத் திரும்ப வரும் அருள்மொழி என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி.இவர் கிராமத்துமனிதர் வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பாரா? என்கிற ஐயம் பலருக்கு இருந்திருக்கக்கூடும்.அந்த எண்ணங்களை அடித்து நொறுக்கி அருள்மொழி பாத்திரமாகவே மாறியிருக்கிறார் அரவிந்த்சாமி.கார்த்தி காட்டும் அன்பில் சலிப்பது களைப்பது பின்பு திளைப்பது ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
படம் தொடங்கி சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு வரும் கார்த்தி, அரவிந்த்சாமியின் கண்களைப் பொத்தி அத்தான் நான் யாருன்னு தெரியுதா? என்று தொடங்குகிறார். அதிலிருந்து ஒரே அமர்க்களம்தான்.அன்பு,பாசம்,நேசம் ஆகியனவற்றை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.ஏற்கெனவே கிராமத்து இளைஞராக கார்த்தி நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தெரிகிறார்.கார்த்தியின் சொற்களில் கிராமம், சொந்த பந்தம், நிகழ்வுகள் ஆகியனவற்றைக் கேட்கக் கேட்க ஒவ்வொருவரும் தங்கள் சொந்த உணர்வுகளில் மூழ்கிப்போவது நிச்சயம்.அவர் தனிமனிதனாக இல்லாமல் பொதுமனிதனாக இருப்பது கூடுதல் பலம்.பல இடங்களில் வெள்ளந்தியாக அவர் சொல்லும் சொற்கள் நம் நெஞ்சில் கத்தியைச் சொருகுவதுபோல் இருக்கின்றன.எடுத்துக்காட்டு – உங்க நம்பரை நீங்க எப்படி தப்பா சொல்வீங்க?
கார்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமியின் மனைவியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி ஆகியோரோடு மூத்தநடிகர்கள் ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ்,இளவரசு,ஸ்ரீரஞ்சனி மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கு திரைக்கதையில் குறைவுதான் என்றாலும் அவர்கள் நடித்திருப்பது பெரும் நிறைவு.
பெரும்பாலும் இரவுக்காட்சிகள் ஆனாலும் நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுக்கிறது மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு.பல காட்சிகளுக்கான ஒளியமைப்பு அவற்றைத் தனித்துக்காட்டி இரசிக்க வைத்திருக்கிறது.
கோவிந்த்வசந்தாவின் இசையில் உருவாகியிருக்கும் ஓரிரு பாடல்கள் காட்சிகளோடு இணைந்து பயணிக்கின்றன.கிராமத்துக் கதைக்கான பின்னணி இசையிலும் ஈர்க்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் இரண்டாம்பாதியில் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.காட்சி சொல்லும் உணர்வு குறையாமல் நீளம் குறைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இயக்குநர் சி.பிரேம்குமார்,நான் என் குடும்பம் என்று யோசிக்கும் ஒருவர் நாம்,நம் மக்கள், நமது ஊர் என்று எண்ணும் இன்னொருவர் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு,புறஉலகில் உள்ளூர் முதல் உலகம் வரை பேசியும், அக உலகில் மிக ஆழமாக ஊடுருவியும் இருக்கிறார்.ஒரு பெயரைக் கடைசிவரை சொல்லாமல் அதை நோக்கி அனைவரையும் ஈர்த்திருப்பது ஆகச்சிறப்பு.
மெய்யழகன் மெய்யாலுமே அழகன்.
– சுரா