பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பக்கவிளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது டீசல்.
வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இராட்சத குழாய்களால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடியும் பலன் இல்லாததால், அதே கச்சா எண்ணெயைத் திருடுவதைத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் மாஃபியாவை வளர்த்துவிடும் சில பெரும் முதலாளிகளின் சதித் திட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது.இதை உணர்ந்து அதை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் நாயகன் ஹரீஷ் கல்யாண். அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் திரைக்கதை.
மீனவ இளைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார் ஹரீஷ் கல்யாண்.காதல் நாயகனாக அறியப்பட்ட அவர் இந்தப்படத்தில் சண்டைக்காரராகவும் மாறியிருக்கிறார்.உணர்ச்சிப்பூர்வ நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இந்த வேடத்தில் இருக்கிறது.அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
நாயகி அதுல்யா ரவிக்கு சும்மா வந்து போகிற வேடமில்லை.பட்ம் நெடுக வருவதோடு கதையிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.அதற்கேற்ப நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் வினய், வேடத்துக்கேற்ற தோற்றத்தில் இருக்கிறார்.நடிப்பிலும் தாழ்வில்லை.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் சாய்குமார் கவனம் ஈர்க்கிறார்.நண்பராக நடித்திருக்கும் கேபிஒய் தீனா மற்றும்
போஸ் வெங்கட், அனன்யா, ரமேஷ் திலக், கருணாஸ், சச்சின் கடேகர், ஷாகீர் உசேன் ஆகியோர் இருப்பும் நடிப்பும் நன்று.
மாறன், தங்கதுரை ஆகியோருக்கு நகைச்சுவைப் பொறுப்பு.நிறைவேற்றியிருக்கிறார்கள்.
திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் நன்று.ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற கானா பாடலின் படமாக்கம் நிறைவாக இல்லை.பின்னணி இசையில் குறைவில்லை.
ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.இருவரும் நல்ல காட்சியனுபவம் கொடுத்திருக்கிறார்கள்.
உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் நோய் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் என்பது போல் வடசென்னை பகுதியில் நடக்கும் பிறழ்வு அந்தப்பகுதிக்கு மட்டுமானதன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாதிக்கக் கூடியது என்பதை இந்தப் படம் மூலம் உணர்த்த முனைந்திருக்கிறார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
– இளையவன்

