தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித் திண்ணும் சிறுவன் வெறியோடு உழைத்து இந்தியாவுக்கே பெருமை தேடித்தரும் இளைஞனாக மாறுவதுதான் திரைக்கதை.
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பார்களே. அதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு நடிகர் விக்ரமின் மகனும் இப்படத்தின் நாயகனுமான துருவ் விக்ரம்.நிஜ வீரர்களே திகைத்துப் போகுமளவுக்கு உழைத்திருக்கிறார்.இது ஒரு திரைப்படம்தானே என்று நினைக்காமல் அடுத்த ஆசியக் கோப்பைப் போட்டிக்குத் தயாராகும் வீரர் போலவே செயல்பட்டிருக்கிறார்.அது திரையிலும் தெளிவாக இடம்பிடித்திருக்கிறது.தோற்றம் மட்டுமின்றி நெல்லை வட்டார வழக்கு மொழிப் பேச்சிலும் உடல்மொழியிலும் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரனும் அதிர்வை ஏற்படுத்துகிறார்.நாயகனின் சகோதரியாக வரும் ரஜிஷா விஜயன் காட்டும் பாசம் நம்மையும் ஏங்க வைக்கிறது.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் பசுபதி,ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பெரும் சுமையைச் சுமந்து நம்மைக் கலங்க வைத்துவிடுகிறார்.
தென்மாவட்டங்களில் நிஜத்தில் வாழ்ந்த முக்கியமானவர்களைப் பிரதிபலிக்கும் வேடங்களில் நடித்திருக்கும் இயக்குநர் அமீர் மற்றும் மலையாள ந்டிகர் லால் ஆகியோர் அவர்களை நேரில் பார்ப்பதுபோன்ற எண்ணத்தைத் தங்கள் நடிப்பால் உருவாக்கிவிடுகிறார்கள்.
அழகம்பெருமாள்,ரேகா நாயர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் குறைவில்லை.
ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே, தென்மாவட்ட கிராமங்களை அப்படியே பிரதியெடுத்துக் கொடுத்திருக்கிறார்.உண்மை நிலவியலை திரைப்படத்துக்குத் தேவையான அழகியலோடு வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்களில் மண் மணமும் தமிழ் வீரமும் கலந்து கலக்குகிறது.பின்னணி இசையில் பல்வேறு உணர்வுகள் கடத்தப்பட்டிருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.ஓட்டப் பந்தயத்துக்கும் தடை ஓட்டப்பந்தயத்துக்கும் வேறுபாடு உண்டல்லவா?அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வே தடை ஓட்டம் தான் எனும்போது அவர்களில் ஒருவர் ஒட்டுமொத்த நாட்டின் பிரதிநிதியாக உருவாவதற்கு எவ்வளவு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறார். ஒடுக்கப்படுவபவர்கள் ஒடுக்குபவர்கள் என்று நேரெதிராகப் பிரிக்காமல் இருதரப்பிலும் இருக்கும் ஏற்ற இறக்கங்களை யாருக்கும் வலிக்காமல் உணர வைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
– இளையவன்

