கிறித்துவ மத பெண் துறவியை கதாநாயகியாக வைத்து சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லியிருக்கும் படம் மரியா. வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும்படியான காம உணர்வுக் காட்சிகள் கொண்ட படம்.
கதாநாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், பெண் துறவியாக இருக்கிறார்.துறவு வாழ்க்கையில் இருந்து வெளியேறி இயல்பு வாழ்க்கை வாழ விரும்புகிறார்.அதற்கு அவருடைய குடும்பம் கடும் எதிர்ப்பு.அதனால் கோபமான நாயகி எடுக்கும் முடிவென்ன? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.
படம் மொத்தமும் தன் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார் நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன்.சர்ச்சைக்குரிய வகையில் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அதில் நேர்த்தியாக நடித்திருப்பதால் அவருக்கு நற்பெயர்.
சாய்ஸ்ரீ பிரபாகரனின் உறவினராக நடித்திருக்கும் சிந்து குமரேசன் அவருடைய காதலராக வரும் விக்னேஷ் ரவி ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்தக் கதையின் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் பாவெல் நவகீதன்,எழுப்பப்படும் பிம்பத்துக்குப் பொருத்தமான உருவமாக இருக்கிறார்.
பாலாஜி வேலன்,சுதா புஷ்பா,அபிநயா ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் கோபால கிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் ஆகிய இருவர் இசையமைத்திருக்கிறார்கள். வசனங்கள் அதிகம் நிறைந்த படத்திலும் பின்னணி இசையைக் கவனிக்க வைத்திருப்பது அவர்கள் பலம்.
ஒளிப்பதிவாளர் மணிஷங்கர்.ஜி க்கு குறைவான இடம் வழங்கப்பட்டிருந்தாலும் அதற்குள் நிறைவான காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர்கள் காமேஷ்.கே மற்றும் நிஷால் ஷெரிப்.ஏ ஆகியோர் படம் வேகமாகச் செல்ல வேண்டும் என்று நினைக்காமல் இயக்குநரின் எண்ணம் முழுமையாக வெளிப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
ஹரி கே.சுதன் எழுதி இயக்கியிருக்கிறார்.ஒரு பெண்ணின் உண்மையான உணர்வைச் சொல்கிறேன் என்று தொடங்கி ஒரு மதத்தின் மீது மை பூசும் வேலையைச் செய்திருக்கிறார்.அதற்காக சில மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளையும் வைத்திருக்கிறார்.துறவிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்கிற தவறான கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
– இளையவன்
