தமிழ்ப் பண்பாட்டில் சிறுதெய்வ வழிபாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.கிராமத்து ம்னிதர்கள் சிறுதெய்வங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் படம்தான் ஒண்டிமுனியும் நல்லபாடனும். இதில் ஒண்டிமுனி என்பது தெய்வம், நல்ல பாட்டாளி என்பதன் சுருக்கம் நல்ல பாடன்.
ஒண்டிமுனிக்குக் கிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்கிறார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பரோட்டா முருகேசன்.அதை நிறைவேற்ற முடியாமல் பல இடையூறுகள்.அவற்றைத் தாண்டி வேண்டுதலை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பரோட்டா முருகேசனுக்கு இப்படத்தில் கதையின் நாயகனாகப் பதவி உயர்வு.அதை மிகச் சிரத்தையுடன் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
பண்ணாடி என்றழைக்கப்படும் ஊர்ப்பெரிய மனிதர்களாக நடித்திருக்கும் கார்த்திகேசன்,முருகன் ஆகிய இருவரும் தோற்றத்திலும் நடிப்பிலும் நிஜ பண்ணாடிகளாகவே தெரிகிறார்கள்.
பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், மகளாக நடித்திருக்கும் சித்ரா நடராஜன், மாப்பிள்ளையாக நடித்திருக்கும் விஜய் சேனாதிபதி, பேரனாக நடித்திருக்கும் சிறுவன் விகடன் ஆகியோரும் பொருத்தமாக நடித்து படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார்.படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் கதைக்களம் இயக்குநரின் சிந்தனை ஆகியனவற்றை உணர்ந்து பின்னணி இசைத்திருக்கிறார்.அது படத்தை இரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் விமல், தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட கிராமமொன்றிற்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டும் சுற்றுலா வழிகாட்டி போல் செயல்பட்டிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சதீஷ் குரசோவா,கொஞ்சம் பிசகினாலும் போரடித்துவிடும் வாய்ப்புள்ள திரைக்கதையைக் கொண்டிருக்கும் இப்படத்தை சலிப்பின்றிப் பார்க்க வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம்.கலைப்படைப்புகள் மூலம்தான் ஒரு நாட்டின் வளம்,வாழ்க்கை முறை, மக்கள் மனநிலை ஆகியன வெளிப்படுத்தப்படும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.வணிகத் திரைப்படங்களுக்குரிய விசயங்களைக் கையிலெடுக்காமல் அதேநேரம் வெகுமக்கள் திரைப்படமாகக் கொடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
உங்கள் தமிழ்நாடு எப்படியிருக்கும்? என்று வெளிநாட்டினர் கேட்டால் இப்படித்தான் இருக்கும் என்று காட்டக்கூடிய வகையிலான படம்.
– இளையவன்
