சமூகவலைதளங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் அவற்றை வைத்து திரைக்கதைகள் எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம்தான் இரவின் விழிகள்.
யூடியூபில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக அல்லன செய்பவர்கள் அதிகம்.அப்படிச் செய்பவர்களைக் கொலை செய்கிறார் ஒருவர்.அவர் ஏன் அதைச் செய்கிறார்? என்கிற கேள்விக்கு விடையாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.
கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மகேந்திரன், ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு நூறுவிழுக்காடு உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்.அதன் விளைவு எல்லாக் காட்சிகளிலும் அவர் பொருத்தமாக இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நீமா ரே வுக்கு முக்கியமான வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.நடிப்பு மட்டுமின்றி தாரளமாகக் கவர்ச்சி காட்டி இரசிகர்களை ஈர்க்கிறார்.
முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், இரசித்து நடித்திருக்கிறார்.அவருடைய வேடம் முக்கியமானது என்பதைக் காட்டிலும் அதில் அவருடைய நடிப்பு பலமாக இருக்கிறது அதைவிட முக்கியமாக இருக்கிறது.
நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் உள்ளிட்டோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ஏ.எம்.அசார் இசையில் கருப்பு மற்றும் உனக்கு ஒண்ணு சொல்ல உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் கேட்டு இரசிக்கும் இரகம்.இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாஸ்கரின் உழைப்பில் இரவுநேரக் காட்களிலும் தெளிவு இருக்கிறது.மற்ற காட்சிகளிலும் நேர்த்தி நிறைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஆர்.ராமர், படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகரும்படி தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சிக்கல் ராஜேஷ்.இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள்.அதன்பிறகு சில அரசியல் கட்சிகள்,முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது.அதன் விளைவுதான் இந்த இரவின் விழிகள் படம் என்று சொல்லியிருந்தார்.
சமுதாய அக்கறையுடன் திரைக்கலைக்குரிய அம்சங்களையும் சரியாகக் கலந்து இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
– இளையவன்

