ஓடிடி ப்ளஸ் (OTT PLUS) இணையதளத்தில் சனவரி 2,2026 அன்று வெளியாகியிருக்கிறது, ஈழத்தமிழர் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் சல்லியர்கள் திரைப்படம் .

புறநானூற்றில் படித்த தமிழ்வீரத்தை நாம் வாழும் காலத்தில் பார்க்க வைத்து சிங்கள அரசு மற்றும் அதற்கு ஆதரவான பத்துக்கும் மேற்பட்ட அரசுகளை எதிர்த்து எவ்விடத்திலும் அறம் வழுவாமல் தமிழீழத் தாயகத்தைப் பல்லாண்டுகள் ஆண்ட விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது சல்லியர்கள்.

தமிழீழ விடுதலைப் போரில் தமிழீழ மருத்துவ அணியின் பங்கு மகத்தானது.அவர்களை முதலில் அழிக்க வேண்டும் சிங்களப்படை முயல்கிறது.அந்தத் தாக்குதல்களை எதிர்கொள்வதோடு மாந்தநேயத்தோடு எதிரியின் உயிரையும் பாதுகாக்கும் பெரும் வீரத்தைப் பறைசாற்றுகிறது இப்படம்.

இந்தப்படத்தில், சிங்களப் படையை எதிர்த்து போரிடும் புலிகள் காயமடைந்தால், அவர்களுக்கு மருத்துவம் செய்ய போர்க்களத்தில் பதுங்குகுழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.அப்படி அமைக்கப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி,ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவுவதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார். அவர்களுடைய தீரத்தையும் தியாகத்தையும் உலகறியச் செய்திருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் சத்யாதேவி, இந்த வேடத்தின் புனிதத்தை உணர்ந்து அதற்கு நூறுவிழுக்காடு உண்மையாக இருக்கவேண்டும் என்கிற உணர்வோடு நடித்திருக்கிறார்.அவருடைய உடல்மொழி மற்றும் செயல்பாடுகள் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கின்றன.

மருத்துவர் செம்பியனாக நடித்திருக்கும் மகேந்திரன்,நன்றாக நடித்து பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் கருணாஸ் தமிழீழக் குடிமகனாகவே மாறியிருக்கிறார்.வசன உச்சரிப்புகளிலும் அந்த உணர்வைக் கொண்டு வந்திருக்கிறார்.

சிங்களப் படையினராக நடித்திருக்கும் திருமுருகன்,சந்தோஷ்,மோகன் ஆகியோர் பொருத்தமாக நடித்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்கள்.

நாகராஜ் – பிரியலயா இணையரின் பாத்திரங்களும் அவர்களுடைய நடிப்பும் சிறப்பு.

சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, தமிழீழ நிலப்பரப்பையும் போர்க் கொடுமைகளையும் சிங்களக் கொடூரங்களையும் காட்சிப்படுத்தி கலங்க வைத்திருக்கிறது.

கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.வைரமுத்து மற்றும் இயக்குநர் கிட்டு ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். அவை காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. பின்னணிஇசை திரைக்கதை சொல்லும் உணர்வுகளை மேம்படுத்தியிருக்கிறது.

படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன்,படத்தை விறுவிறுப்புக் குறையாமல் கொடுத்திருக்கிறார்.

கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மானின் உழைப்பால் விளைந்த பதுங்குகுழிகள்,மருத்துவமனைகள் ஆகியன உண்மையை நகலெடுத்தது போல் அமைந்திருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் கிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய வரலாற்றைக் காட்சிப்படுத்தி தமிழர்களின் வீரத்தையும் அறவுணர்வையும் எதிரியானாலும் உயிர்காக்கும் உன்னதப் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார்.

– கதிர்

குறிப்பு – இப்படம் ஓடிடி ப்ளஸ் (OTT PLUS) இணையதளத்தில் சனவரி 2,2026 முதல் காணக்கிடைக்கிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.