ஐடி என்றழைக்கப்படும் மென்பொருள் துறையில் பணிபுரிந்தாலும் பெண்களிடம் பேசவே கூச்சப்படும் நாயகனும் அன்றாடம் ஆண்களுடன் புழங்கும் பாலியல் தொழில் செய்யும் நாயகியும் ஒருநாள் இணைந்து பயணிக்கிறார்கள்.நாயகனுக்கு பெண்கள் மீதான கூச்சத்தைப் போக்க இந்தப் பயணம்.அந்நாளிலேயே நாயகியைத் துரத்துகிறது இரு கும்பல். இதனால் என்னவெல்லாம் நடந்தன என்பதைச் சொல்லியிருக்கும் படம் டியர் ரதி.

கூச்ச சுபாவமுள்ள ஆண் கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகபாவனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகனாக நடித்திருக்கும் சரவண விக்ரம்.அவருக்கு நிறைய வசனங்கள்.அவற்றை எளிதாகவும் இயல்பாகவும் பேசி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான் எளிய அழகு.பாலியல் தொழிலாளி வேடத்துக்கேற்ற உடல்மொழியை பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.அந்தத் தொழிலாளிகளின் இன்னல்களை உணரும்படி நடித்திருப்பது அவருக்கும் படத்துக்கும் பலம்.

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன்,பிளாக் காமெடி எனப்படும் இருண்மை நகைச்சுவை செய்து அங்கங்கே சிரிக்க வைத்திருக்கிறார்.

சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் புதியவர்களாக இருந்தாலும் அது தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார்கள்.

லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.இரவுக்காட்சிகளுக்குப் பொருத்தமான ஒளியமைப்பு செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

எம்.எஸ்.ஜோன்ஸ் இசையில் பாடல்கள் தாழ்வில்லை.திரைக்கதைக்கேற்ப பின்னணி இசைத்திருக்கிறார்.

நேர்க்கோட்டில் பயணிக்காமல் முன்னும் பின்னும் சென்று வரும் திரைக்கதையோட்டத்திற்கேற்ற படத் தொகுப்பைச் செய்து படத்தின் வேகத்தைக் கூட்ட முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.பிரேம்.

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி,மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்துக் கொண்டு காதல் மற்றும் காமம் ஆகிய இருவேறு முக்கிய உணர்வு நிலைகளைப் பற்றிய தன்னிலையை வெளிப்படுத்த முனைந்திருக்கிறார்.அவற்றை நகைச்சுவை கலந்து அதிலும் இருண்மை நகைச்சுவை மூலம் சொல்லி எல்லோருக்குமான படமாக மாற்றியிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.