காதல் பிடிக்காத இளைஞரும் காதல் பிடிக்காத யுவதியும் தங்களுடைய வேறு தேவைக்காக காதலர்களாக நடிக்கிறார்கள்.அந்தக் காதலின் நிலை என்ன? என்பதைச் சுவையாகச் சொல்லியிருக்கும் படம் நீ ஃபார் எவர்.
கதாநாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த் ஓங்குதாங்காக இருந்தாலும் அன்பான காதலன் வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.நடிப்பு,நடனம்,அப்பாவித்தனம் ஆகிய அனைத்தையும் சரியாகச் செய்திருக்கிறார்.போலிக் காதலர் உண்மைக் காதலர் என நடிக்கவும் வாய்ப்பு உள்ள வேடம்.அதிலும் தேறியிருக்கிறார்.
அர்ச்சனா ரவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.பொருத்தமான இணையராக இருக்கிறார்.பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் வந்து போகிற நாயகியாக இல்லாமல் கதையில் முக்கியத்துவம் உள்ள வேடம் அவருக்கு அமைந்திருக்கிறது.அதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரதோஷ் மற்றும் நோபல் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தத்தம் வேடங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜி,காதலர்களைச் சுற்றிச் சுற்றி வரும் கதையில் காட்சிகளில் இளமை ததும்ப இருக்கவேண்டும் என முடிவு செய்து அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்.அதனால், நல்ல காட்சியனுபவம் பெற முடிகிறது.
காதல் கதை,காதலர்களுக்கான கதை எனும்போது பாடல்களும் அதற்கேற்ற மென்மையோடு இல்லையெனினும் துள்ளலாக அமைந்து கேட்க வைத்திருக்கிறது. பின்னணி இசையில் காதல் உணர்வுகளைக் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதல் படங்களைச் சலிப்பின்றி கொண்டு செல்ல நிறைய பாடுபடவேண்டும்.அந்தப் பாட்டைச் சரியாகப் பட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகர்ஜுனன்.
காதல் மீது மதிப்போ ஈர்ப்போ இல்லாத இருவர் மனதில் காதல் உணர்வுகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும்,காதலோடு குடும்ப உணர்வுகளையும் உணர்ச்சி மயமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி.
இன்றைய இளைய தலைமுறை அதிகமாக நடமாடும் நவீன டேட்டிங் செயலி குறித்த தகவல்கள்,தேவைக்கேற்ற நகைச்சுவை,இளமைத் துள்ளல் ஆகியனவற்றைக் கலந்து சுவையாகப் படத்தைக் கொண்டுபோயிருப்பது கூடுதல் பலம்.
– இளையவன்
